search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Semmalai"

    • அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது.
    • சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது.

    சேலம்:

    அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் சட்டப்படி வழங்கும் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்.

    பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். சசிகலா உட்பட கட்சிக்கு பாடுபட்டவர்களுடன், அ.தி.மு.க இயக்கத்தை காப்பாற்றிய யாராக இருந்தாலும் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாவது:-

    அ.தி.மு.க. தற்போது இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. தலைமை கழக அலுவலகம் எடப்பாடியார் வசம் உள்ளது. நீதிமன்றமே எடப்பாடியார் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்கி கணக்கு இ.பி.எஸ் தரப்பு பொருளாளர் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது.

    சமீபத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வெளியிட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலைமையில், கட்சி எடப்பாடியார் தலைமையில் இல்லை, எங்களுக்கு தான் சொந்தம் என்று ஓ.பி.எஸ் தரப்பு கொண்டாடுவது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இருக்கும்போதே கழக அமைப்பு தேர்தல் முறையாக நடத்தப்பட்டு இருவரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இ.பி.எஸ் தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவிலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது.

    அப்படி இருக்க, ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளை நியமிப்பது மட்டும் கட்சி விதிகளுக்கு உட்பட்டதா? எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சட்ட விதிகளை மீறுவது நியாயமா? என்று ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவி மாற்றியது சரியா? அப்போது மாற்றம் செய்யவில்லையா? பொதுவாக சட்ட விதிகள் மாறுதலுக்கு உட்பட்டதுதான்.

    பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி நியமிப்பது சரியா? என ஓ.பி.எஸ் கேள்வி கேட்கிறார். ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களுக்கு தகுதி நியமிக்கும்போது பொதுச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு தகுதி நியமிப்பதில் என்ன தவறு உள்ளது. எடப்பாடியார் தலைமை பண்பை நிரூபிக்க தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்துள்ளனர். கட்சி, ஆட்சி சிறப்பாக வழி நடத்தி தலைமை பண்பை எடப்பாடியார் ஏற்கனவே நிரூபித்துவிட்டார். புதிதாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய கட்சியும் அவர் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

    எடப்பாடியாரை வீதிக்கு வர சொல்வது சரியானது அல்ல. பொதுக்குழு தொடர்பாக 2 நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடியார் தலைமைக்கு சாதமாக உள்ளது. மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த நிலையில் கட்சிக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் பொதுக்குழு கூட்டுவதாக சொல்வது அர்த்தமில்லை.

    சசிகலாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ் சொல்வது முந்தைய நிலைக்கு எதிர்மாறாக உள்ளது. 1½ கோடி தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாக கூறுவதும், இல்லாத ஒன்றை கற்பனையாக சொல்வதாக உள்ளது. எடப்பாடியார் பக்கம் தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். கட்சியும் அவரது முழு கட்டுப்பாடடில் உள்ளது. இனிவரும் நாட்களிலும், வரும் தேர்தல்களிலும் முழு வெற்றியை கட்சிக்கு தருவார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×