search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sathuragiri hills"

    • பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    • 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை மறுநாள் 14-ந் தேதி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (12-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதோஷ நாளான இன்று காலை சதுரகிரிக்கு செல்ல அதிகாலையிலேயே அடி வாரத்தில் ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறை அலுவலர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்டு மலையேற அனுமதித்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக்கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் கடைகள் வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி சதுரகிரி பழங்குடியினத்தை சேர்ந்த 84 குடும்பங்கள் கடந்த 9-ந்தேதி முதல் சதுரகிரி மலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான சதுரகிரி மலை மேல் பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர்.

    அவர்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் மலை அடிவாரத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். பழங்குடியின மக்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அடிவாரத்திற்கு வந்த பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாரத்திற்காக சதுரகிரி மலைக்கு சென்று தேன், கிழங்கு, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று வந்தனர்.

    இந்த நிலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் வத்திராயிருப்பு, சதுரகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட மலை பகுதிகளை வனத்துறையினர் தங்களது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தனர். சதுரகிரி மலைக்கு சென்று பொருட்களை சேகரிக்கவும் பழங்குடியின மக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    மேலும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலை பாதைகளில் கடைகள் வைக்கவும் பழங்குடியின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். மலை பகுதிகளில் உள்ள தங்களது பாரம்பரிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். மீண்டும் மலையில் பொருட்களை சேகரிக்கவும், கடைகள் அமைக்கவும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக புகார் அளிக்க வந்த பழங்குடியினரையும் வனத்துறையினர் விரட்டி அவர்களின் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதுரகிரி பழங்குடியினத்தை சேர்ந்த 84 குடும்பங்கள் கடந்த 9-ந்தேதி முதல் சதுரகிரி மலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுடன் சென்ற அவர்கள் அங்கேயே சமைத்து தங்கி உள்ளனர். சதுரகிரி மலைக்கு மேலே உள்ள குத்துக்கல், பூலாம்பாறை ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 4-வது நாளாக இன்றும் பழங்குடியின மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வனத்துறையினரின் கெடுபிடியை கண்டித்து பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் கடைகள் வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கடைகள் வைக்க அனுமதி வழங்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மலை அடிவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த தினமாக கருதப்படுகிறது.
    • பக்தர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    வத்திராயிருப்பு:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

    அதேபோல இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும். சதுரகிரி மலையேற ஆடி அமாவாசை உகந்த தினமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விருதுநகர், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல சாமி தரிசனம் செய்தவுடன் மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்கி விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஆண்டின் 365 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஏராளமான சித்தர்கள் இங்கு வாழ்ந்து வந்ததால் அந்த பகுதி சித்தர் பூமியாகவும் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாவடி கருப்பசாமி கோவில் 5-வது பீட்டில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

    கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் மலை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மூங்கில் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியது.

    காட்டுத்தீ வேகமாக அடுத்தடுத்த இடங்களில் பரவியது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர்.

    3 ஆயிரம் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மலையிறங்க வனத்துறையினர் தடை விதித்து கோவிலிலேயே தங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும் சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமயில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் நாவலூத்து பகுதியில் இன்று 2-வது நாளாக காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருகிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பு இல்லை எனவும், 2-வது நாளாக பக்தர்கள் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4-வது நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக் தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை இருந்தும், வனத்துறையினர் சோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கும் கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    • சதுரகிரிக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலை மேல் உள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த மாதம் சித்திரை மாத அமாவாசையை (19-ந் தேதி முன்னிட்டு இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று 17-ந் தேதி அதிகாலை முதல் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலை அடிவாரத்தில் திரண்டனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை பக்தர்களின் உடைமைகளை பரிசோதனை செய்த பின் மழை ஏற அனுமதிக்கப்பட்டனர். கோடை காலம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வெயில் வருவதற்கு முன்பே மலை ஏறுவதை காண முடிந்தது.

    மலையேறுபவர்களின் வசதிக்காக மலைப்பாதைகளில் உள்ள சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, காராம் பசு சந்திப்பு, விலாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தது.

    • கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தை மாத பவுர்ணமி வருகிற 5-ந் தேதியும், பிரதோஷத்தை முன்னிட்டும் நாளை (3-ந்தேதி) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் கோவில் பகுதியில் தங்கக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்துள்ளது.

    சதுரகிரி மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் நாளை மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

    சதுரகிரி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பக்தர்கள் இன்று மலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    நேற்று அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சதுரகிரி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி பாறை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து பக்தர்கள் இன்று மலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மலைக்கு மேல் கோவிலில் உள்ள 500 பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மழை நின்று இயல்பு நிலைக்கு வந்த பின் பக்தர்கள் அடிவாரத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ×