search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Need Exam"

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    ‘நீட்’ தேர்வில் தகுதி பெறாத விரக்தியில் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்ததால், தமிழகத்தில் மீண்டும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

    சென்னையில் நேற்று பூங்கா ரெயில் நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ.) 50 பேர் ஒன்று கூடினர்.

    மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி பூங்கா ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து, தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும், மாணவி பிரதீபா மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோஷமிட்டபடி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிலர் மின்சார ரெயில் என்ஜினில் ஏறி போராடினர்.

    இதையடுத்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய போலீசார் ஆயத்தமானார்கள்.



    போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் கோஷமிட்டபடி படுத்தனர். அவர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    பூங்கா ரெயில் நிலையத்தில் நடந்த ரெயில் மறியலால் நேற்று 10 நிமிடங்கள் மின்சார ரெயில் சேவை பாதித்தது குறிப்பிடத்தக்கது. #NeetExam
    நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவுக்கு, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றதால் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகத்தின் 2-வது மகள் பிரதீபா (வயது 19). கடந்த ஆண்டு இவர் பிளஸ்-2 தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் தனது டாக்டர் கனவு நிறைவேறும் என்றிருந்த பிரதீபாவுக்கு பேரிடியாக நீட் தேர்வு அமைந்தது.

    கடந்த ஆண்டு பிரதீபா நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால், அடுத்த ஆண்டில் கூடுதல் மதிப்பெண் பெற்று அரசு கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்று அதற்கு தயாராகி வந்தார்.

    ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வில் பிரதீபா 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இதில் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று காலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அந்த கிராமத்துக்குள் வந்த பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த வளத்தி போலீசார் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தடுத்துநிறுத்தினர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அவர்கள், ‘நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். பிரதீபா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கலெக்டர் கந்தசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.

    ஆனாலும் அரசியல் கட்சியினர் கலெக்டர் பரிந்துரையை ஏற்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் போலீசார் செஞ்சி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் உள்பட சுமார் 100 பேரை கைது செய்து, சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.

    பின்னர் பிரதீபாவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பிரதீபா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    பிரதீபாவின் தந்தை சண்முகம் கூறும்போது, “பிரதீபா டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். நானும், என் மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்துவிட்டதால் நான் டாக்டராக முடியாது, அதனால் விஷம் குடித்துவிட்டேன் என்று பிரதீபா கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எங்கள் மகளை ‘நீட்’ தேர்வு கொன்றுவிட்டது. என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். என் மகளை போன்று ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

    பிரதீபா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், “நான் 2018 மே 6-ந் தேதி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவி. தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருந்ததால், அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மாணவியின் கடிதத்தில் தமிழ் மொழி வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NEET2018 #Pratheeba TNStudentSuicide 
    ×