search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military fund"

    பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போட்டு வருவதால் பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய சுமார் ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. #America #Pakistan
    வாஷிங்டன்:

    பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. ஹக்கானி குழுக்கள், தலீபான், லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தங்கள் புகலிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக கோடிக்கணக்கில் ராணுவ நிதியுதவியும் அந்த நாடு வழங்கி வருகிறது.

    ஆனால் இந்த நிதியை பெற்றுக்கொள்ளும் பாகிஸ்தான், பயங்கரவாத ஒழிப்பில் பாராமுகம் காட்டி வருகிறது. அந்த மண்ணில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாத தாக்குதல்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா கடும் கோபத்தை காட்டி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் ஆப்கானிஸ்தானுக்கான தனது புதிய கொள்கையை வெளியிட்டார். இதில் பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலையை எடுத்துவரும் பாகிஸ்தானுக்கு அவர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அந்த நாட்டுக்கு வழங்கி வரும் நிதியுதவியை ரத்து செய்யவும் முடிவு செய்தார்.

    இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை கடுமையாக தாக்கிய அவர், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகிறது, ஆனால் அந்த நாடு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று ஆவேசமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள 20 பில்லியன் டாலர் அற்பமானது. ஆனால் அந்த நாட்டுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட பயங்கரவாத ஒழிப்பு போரில் 75 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 123 பில்லியன் டாலரை நாங்கள் செலவழித்து இருக்கிறோம். இது தொடர்பான வரலாற்று உண்மைகளை டிரம்ப் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இவ்வாறு இரு தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 ஆயிரம் கோடி) நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த தொகை பல்வேறு நிதியாண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய மொத்த தொகை என தெரிகிறது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது. முன்னதாக, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தினாலும் அந்த நாட்டுடன் நல்ல உறவை நீடிக்கவே அமெரிக்கா விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது. 
    ×