search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golu"

    • புதிதாக கொலு வைப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள்.
    • கொலுவுக்கு புத்தம் புது சிலைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

    1. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

    2. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

    3. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடை உடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

    4. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

    5. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

    6. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவுகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

    7. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    8. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

    9. நவராத்திரிஒன்பது நாட்களும் வாசல் படியைத் துடைத்து கோலமிட்டு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ தூவி, பூஜை செய்வது நல்லது. வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது மங்களகரமாக இருக்கும்.

    10.கொலுவில் வைத்திருக்கும் பழைய பொம்மைகளின் மாலைகள், வளையல்களின் மீது பளபளப்பான ஸ்டிக்கர் பொட்டுக்களை வைத்தால், அவை விளக்குவெளிச்சத்தில்புதுப்பொலிவுடன் மின்னும்.

    11. கொலு படிகளில் நாம் துணியை மடித்து, அதன் மேல்தான் பொம்மைகளை வைப்போம். அந்தந்த படிகளில் இருக்கும் துணி மீது சிறு ஆணி அடித்தால், சிறு குழந்தைகள் துணியைப் பிடித்து இழுத்தாலும், பொம்மைகள் கீழே விழாது.

    12.கொலு படிகளின் ஓரங்களில், பேப்பர் காபி கப்களை வாய் பாகத்தில் பசை தடவி கவிழ்த்து வரிசையாக அடுக்கி வைத்தால், கோட்டை மதில் போல் அழகாக இருக்கும்.

    13.கொலுப் படிகளில்அகல பார்டர் போட்ட புடவைகளைப் போட்டு அதன்பின் பொம்மைகளை வைத்தால், படிகள் பார்டர் வைத்தது போல் அழகாக இருக்கும்.

    14.கொலுப் படிகளின் இரு பக்கங்களிலும் மாலை நேரங்களில் சிறு மண் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தால், தெய்வீகமாகக் காட்சித் தரும்.

    15.காய்கறி கடைகளில் முளைவிட்ட பயிர்கள் இருக்கும். அவற்றை கொலுப்படிகளில் வளர, வளர நன்றாக இருக்கும்.

    16.பழைய ஷட்டில்காக் பந்துகளின் அழகான தலைகளையும், ஆடைகள் போல அமைந்துள்ள இறகுகளையும் கொண்டு வித விதமாக அலங்கரிக்கப்பட்ட ராஜா- ராணி, ஆண்-பெண், கோமாளிகள் மற்றும் கற்பனைக்கேற்ப வேறு பொம்மைகள் செய்து கொலுவில் வைக்கலாம். வித்தியாசமாக அனைவரின் கவனத்தையும் கவரும்.

    17.கொலு வைக்கும் போது, இயற்கைக் காட்சி உள்ள படத்தையோ அல்லது அழகிய பூக்கள் உள்ள காட்சிகளையோ பின்புறத்தில் வைத்தால், பார்க்க அழகாக இருக்கும்.

    18. மரத்தூளில் பச்சைக் கலர் சாயம் கலந்து ஊற வைத்து உலர்த்தி விட்டால், பாசி படிந்த பாறைகள் போல் தெரியும். இதை கொலு பொம்மைகளுக்கு இடையே மலை, காடு போன்ற இடங்களுக்குப் பயன்படுத்தினால் அழகாகவும் இருக்கும். பசுமையாகவும் காட்சி தரும்.

    19. கொலு படிகளில் களிமண்ணில் வளர்ந்த புற்களை மொத்தமாக பெயர்த்து, மலை போன்று செய்தால் பத்து நாட்கள் ஆனாலும் இயற்கை காட்சிகள் பச்சையாகஇருக்கும்.

    20.கடந்த ஆண்டுகளில் கொலு வைத்தபோது பயன்படுத்திய பழைய மர பொம்மைகளின் மீதுபசைகள், தூள்கள் அழுக்கு போல படிந்திருந்தால், சிறு துணியில் மண் எண்ணையை தொட்டுத் தடவி, ஒரு நிமிடம் ஊற விட்டு வேறு துணி கொண்டு துடைக்கவும். அழுக்கு மறைந்து பொம்மைகள் பளிச்சென்று மின்னும்.

    21.கொலுவில் வைக்கும் கலசக் குடத்தைச் சுற்றி பார்டர் ஒட்டவும். ஆங் காங்கே சமிக்கி மற்றும் குந்தன் கற்களால் அலங்க ரித்தால் தங்கக் கலசம் போல் ஜொலி ஜொலிக்கும்.

    22.கொலு படிகளில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட பொம்மைகளை வைத்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

    23.கொலுவில் பொம்மைகளை அடுக்கி வைக்கும்போது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி என்னும் வரிசையில் வைப்பது நல்லது.

    24.போன வருடத்து பழைய பொம்மைகள், சிறு சிறு விளையாட்டுப் பொருள்கள், பந்துகள் போன்றவற்றைத் தனியாக வைத்திருங்கள். கொலு பார்க்க வரும் சிறு குழந்தைகள் திடீரென்று கொலுவில் உள்ள பொம்மையைக் கேட்டு அடம் பிடித்து அழுதால், அதிலிருந்து எதையாவது கொடுத்து சமாதானப்படுத்தலாம்.

    25.கொலு அலங்காரம் அருகில் நவராத்திரி கலசத் தத்துவம், நவராத்திரி நாயகியரின் நாமங்கள், ஸ்ரீ சக்ரம் பற்றிய விளக்கம், அபிராமி அந்தாதி என அம்பிகையைப் பற்றிய விஷயங்கள் எழுதி வைக்கலாம்.

    26.கொலுவில் வைக்கும் முன்பு சிறிய பொம்மைகளை மிக எளிதாகதூசி துடைக்க, ஒரு வழி உள்ளது. நாம் காது குடையப் பயன்படுத்தும் காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாம். இதனால் பொம்மை களின் இண்டு இடுக்கு களைக்கூட சுத்தமாகத் துடைக்க முடியும்.

    27.வீட்டில் வைத்திருக்கும் கொலு பகுதியில் அம்பாள் அல்லது தெய்வங்களின் திருநாமங்களை உச்சரிக்கும் பாடல்களைநாள் முழுவதும் ஒலிக்க செய்வதுமங்களம் தரும்.அழுகை, அலறல், அடிதடி சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொண்ட தொலைக்காட்சி தொடர்களை இந்த நாட்களில் பார்க்காமல்டி.வி.யை அணைத்து விடுவது நல்லது.

    29.நவராத்திரி நாட்களில் பரிசுப் பொருள்களை, கொலுவில் வைத்து, சரஸ்வதிப் பூஜையன்று நன்றாகப் பாடும் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு சிறிய பரிசாவது கொடுத்தால் குழந்தைகள் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

    30.கொலுவில் வைக்க பொம்மைகள்வாங்க செல்பவர்கள் ஒருநடை புத்தக கடைக்குச் சென்று பாருங்கள்.பல பல குட்டிப் புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஐம்பது ரூபாய் பிளவுஸ் பிட்டில் கிடைக்கும் அதே திருப்தி, இந்தப் புத்தகத்திலும் கிடைக்கும். எனவே பரிசாக புத்தகங்களும் கொடுக்கலாம்.

    31.நவராத்திரி பூஜை நாட்களில் சுண்டல் மீந்து விட்டதா? அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு, பெருங்காயம் போட்டு எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான பக்கோடாகிடைத்து விடும். அந்த பக்கோடாவை கொலுவுக்கு வருபவர்களுக்குகொடுக்கலாம்.

    32.கொலுவின் போது வெறும் பக்திப் பாடல்கள், கர்நாடகக் கீர்த்தனைகளை மட்டுமே பாடாமல் லலிதா சகஸ்ரநாமம், திரிசதி தேவி பாகவதம், சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பாராயணம் செய்தால், இல்லத்தில் துர்சக்திகள் விலகும். தாம்பத்யம் சிறக்கும். பகைமை, வறுமை விலகும்.

    33.கொலுவுக்கு வருபவர்களுக்கு தாம்பூலப் பொருட்களைப் போட்டு கொடுக்க 'ஜிப் லாக்' பைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.

    34.அவல், பொட்டுக்கடலை, நிலக்கடலை, முந்திரி இவற்றை ஒன்றிரண்டாகப் பொடித்து சர்க்கரை, வெல்லத்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் திடீரென்று சுண்டல் தீர்ந்து விட்டால், இந்தப் பொடியைப் பாக்கெட்டில் போட்டுக் கொடுத்து விடலாம்.

    35.நவராத்திரியில் பிளவுஸ் பிட் கொடுத்தால் விசேஷம். ஆனால் அது அதிகம்பயன்படாமல் கை மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் சுமங்கலிகளுக்கு நவதான்ய பிள்ளையார், குபேர விளக்கு, மூங்கில் பூக்குடலை இது போல் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். பயன் உள்ளதாக இருக்கும்.

    36.சுண்டலுக்குச் சுவையைக் கூட்டுவது மாங்காய்தான். கைவசம் மாங்காய் இல்லாவிட்டால் ரெடி புளியோதரைப் பொடியை சிறிதளவு தூவி விடவும். புளிப்புச் சுவையோடு வித்தியாசமான ருசியாக இருக்கும்.

    37.நம்மை கொலுவுக்கு அழைத்தவர்கள் வீட்டுக்குப் போகும்போது, நம்மால் முடிந்த அளவில் சிறிய பொம்மைகளை வாங்கி அவர்களுக்குப் பரிசாக கொடுக்கலாம். இதனால் நமக்கும் அம்பிகையின் அருள் கிடைத்தாற்போல் ஓர் உணர்வு உண்டாகும்.

    38.கொலுவுக்கு தாம்பூலத்தில் பிளாஸ்டிக் தட்டு, எவர்சில்வர் கிண்ணி என வைத்துக் கொடுப்பதை விட நல்ல மஞ்சளில் செய்யப்பட்ட அரக்கு நிற குங்குமப் பாக்கெட்டை வைத்துக் கொடுப்பது மிகவும் விசேஷம். அனைவரும் பயன்படுத்துவார்கள்.

    39. வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் கொலுவுக்கு புத்தம் புது சிலைகளை வாங்கி பயன்படுத்தலாம். பழைய சிலைகளை ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

    40.ஒரு நாளும், எந்தக் கொலுவையும், மற்றவர் வீட்டுக் கொலுவோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். புதிதாக கொலு வைப்பவர்களுக்கு யோசனை சொல்லுங்கள். மகிழ்ச்சி அடைவார்கள்.

    • ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும்.
    • நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும்.

    நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு வைப்பதற்கு சாமி பொம்மைகள் அவசியம் தேவை. குறிப்பாக பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகு படுத்தலாம்.

    கடந்த வருடம் வாங்கிய பொம்மைகள் இதற்கு பயன்படுத்தலாம். மேலும் புதிய பொம்மைகளை வாங்கி வைக்கலாம். சிலர் ஆண்டுக்கு ஒரு புது பொம்மையை வாங்கி வைப்பார்கள். வீட்டில் வைக்கப்படும் கொலு பல்வேறு அடுக்குகளாக இருக்கும். ஒற்றைப்படை எண்ணில் அந்த கொலு படி அமைக்க வேண்டும். சிலர் ஆண்டுக்கு 2 படி வீதம் கூட்டிக்கொண்டே அமைப்பார்கள்.

    கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைககள் வைப்பார்கள். விவசாயத்தின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம். எனவே சிலர் வயல் வெளிகள் போன்ற பொம்மைகள் அமைத்து விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவார்கள். கொலு வைப்பவர்கள் அதற்கான ஏற்பாடுகளை இன்றே செய்ய வேண்டும். குறிப்பாக கொலு வைக்கும் அறையை வெள்ளை அடித்து தூய்மையாக்க வேண்டும்.

    நல்ல நேரம் பார்த்து கொலு அமைக்க வேண்டும். கொலு அமைக்க நாளை 27-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7.45 மணி முதல் 8.45 வரையும் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையும் நல்ல நேரம் ஆகும். அப்போது கொலு அமைக்கலாம். அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின் இரவில் கொலு வைக்கலாம். கொலு வைக்கும் முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறப்பு.

    நவராத்திரி கொண்டாடும் நாட்களில் இரவில் பூஜை நடத்த வேண்டும். அப்போது சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வசதி படைத்தவர்கள் பரிசு பொருளும் கொடுக்கலாம். பரிசு பொருளில் குங்கும சிமிழ் இடம் பெறுவது நல்லது.

    கடைசி நாள் ஆயுத பூஜை அன்று பூஜையை சிறப்பாக நடத்தலாம். மறுநாள் விஜயதசமி. கொலு வைப்பவர் கள் அதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்தான் கொலுவை கலைக்க வேண்டும்.

    விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். குழந்தை களை பள்ளியில் சேர்க்கலாம். புதிய கலை பயில்வோர், இந்த நாளில் தொடங்கலாம்.

    வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரியம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும். திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தி னால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.

    ×