search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College students protest"

    • மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
    • தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ 100-ல் இருந்து 140-ம், ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரிகளில் தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், நுழைவு கட்டணங்கள் மிக கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறி அதனை கண்டித்து கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தியுள்ளனர்.

    இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ 100-ல் இருந்து 140-ம், ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது.

    சான்றிதழுக்கு ரூ.500 ஆக இருந்த கட்டணம் தற்போது ஆயிரமாக உயர்ந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், இது போல் இதரக்கட்டணங்களும் பல மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளது. இதனைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை கைவிட வலியுறுத்தியும் கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாணவிகள் முடியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவாகி வைரலானது.
    • மாணவிகளிடம், வாலிபர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவரும் அவரது வகுப்பு தோழியும் கோட்டயம் சந்திப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த 3 மாணவர்கள் மாணவிகளை ஈவ்டீசிங் செய்தனர். இதற்கு மாணவரும், அவரது தோழியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதில் ஆத்திரமடைந்த கும்பல் மாணவரையும், தோழியையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்திற்கு கல்லூரி மாணவ-மாணவிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் முடிகளை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    மாணவிகள் முடியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவாகி வைரலானது.

    இதற்கிடையே மாணவிகளிடம், வாலிபர்கள் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட தகவல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் பாலியியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை ஒரு கும்பல் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கக்கோரியும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியை தவறாக கையாள்வதால், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    இந்த சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூகத்தில் இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அதிகபட்சமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆசிரியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெருங்கோபத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சுமூக உறவு நிலவும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதுடன், கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

    குறிப்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கும் வகையில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மேலும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் எவ்வித பாரபட்சம் இல்லாமல் அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறினார்.
    பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்ககோரியும் விழுப்புரத்தில் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு (வயது 27), சபரிராஜன் (27), சதீஷ் (27), வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இளம்பெண்களை ஆபாசபடம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்ககோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர்.

    பின்பு அவர்கள் பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்ககோரியும் இன்று அவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
    தூத்துக்குடி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடியில் வ.உ.சி.கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    கல்லூரி மாணவ- மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவியது.  #PollachiAbuseCase
    புதுவை சட்டக்கல்லூரியில் கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் கேட்டை பூட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PondicherryGovernor #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார்.

    காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு செய்வதற்காக கிரண் பேடி இன்று வருவதாக அறிவித்து இருந்தார்.

    12.50 மணிக்கு அவர் கல்லூரிக்கு வருவதாக இருந்தது. ஆனால் முன் கூட்டியே 11.45 மணிக்கே சட்டக்கல்லூரிக்கு வந்தார்.

    முதல்வர் அறைக்கு சென்ற அவர், முதல்வர் மற்றும் பேராசிரியருடன் மழைநீர் சேகரிப்பு பற்றி பேசினார்.

    பின்னர் ஆய்வு செய்வதற்கு புறப்பட்டார். அப்போது ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு கவர்னரை சந்திக்க வந்தனர்.

    அவர்கள் கல்லூரி விடுதியிலும், கல்லூரியிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவற்றை செய்து தரும்படி கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு கவர்னர் நான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் எங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

    அதற்கு கவர்னர் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.

    கவர்னரிடம் அவர்கள் நீங்கள் எல்லா வி‌ஷயங்களிலும் தலையிடுகிறீர்கள். எங்கள் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற ஏன் மறுக்கிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் மாணவர்களை கவர்னர் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டனர்.

    மாணவர்கள் வாக்குவாதம் செய்ததால் கவர்னர் அங்கிருந்து புறப்பட தயார் ஆனார். உடனே மாணவர்கள் கேட் அருகே மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி கவர்னர் அங்கிருந்து சென்று விடாமல் தடுக்கும் வகையில் செய்தனர்.

    மேலும் சில மாணவர்கள் மெயின் கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் கவர்னரால் கல்லூரியை விட்டு வெளியே வர முடியவில்லை.

    இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் மாணவர்கள் அவரை வெளியே செல்ல விடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

    எனவே, மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக மாணவர்கள் சமாதானம் அடைந்தனர். அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் அப்புறப்படுத்தி கவர்னர் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள்.

    பின்னர் மெயின் கேட்டின் ஒரு பகுதியை மட்டும் போலீசார் வலுக்கட்டாயமாக திறந்தனர். அதன் வழியாக கார் வெளியே சென்றது.

    இந்த சம்பவம் காரணமாக சட்டக்கல்லூரியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் பரபரப்பு ஏற்பட்டது. #PondicherryGovernor #Kiranbedi
    ஆரல்வாய்மொழியில் தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உள்ளது.

    இக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை வகுப்புகள் தொடங்கியதும், மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இது போல கல்லூரி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பல்கலைக்கழக தேர்வுகள் முன்பு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக நடத்தப்படும்.

    ஆனால் இப்போது பல்கலை கழக தேர்வுகள் அனைத்தும் ஆங்கில வழியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பல்கலைக்கழகம் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    இது பற்றி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    மனோன்மணியம் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளை இனி மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் எனக்கூறியுள்ளது.

    இதனை கண்டித்து போராட்டம் நடத்துவதாக மாணவ-மாணவிகள் கூறியுள்ளனர். அவர்களின் போராட்டம் குறித்து பல்கலை கழக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் எடுக்கும் முடிவுகள் படியே தேர்வுகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர் .
    ×