search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுக்கு சங்கர் கைது"

    • 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
    • சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    தேனி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.

    தேனி அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது காரில் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி வழங்கியது தொடர்ந்து பரமக்குடி அருகே காரைக்குடியை சேர்ந்த மகேந்திரனிடம் கஞ்சா பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரிடம் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


    புதுக்கோட்டை சிறையில் இருந்த பாலமுருகனிடம் இந்த கஞ்சாவை பெற்று விற்பனை செய்ததாக மகேந்திரன் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நான் அங்கு பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் கஞ்சா பெற்று மகேந்திரனுக்கு கஞ்சா வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியுள்ளார். மற்றபடி சவுக்கு சங்கரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. சமூக வலைதளங்களில் தான் அவரது பேச்சை கேட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    • பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

    யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசி கைதாகியுள்ள சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்ணுரிமை பெண் பாதுகாப்பு எனப் பெண்கள் நலனுக்காக வெயில் என்றும் பாராமல் மழை என்றும் பாராமல் புயல் என்றும் பாராமல் வெள்ளம் என்றும் பாராமல் கடுமையாக மக்கள் பணியாற்றும் நமது பெண் காவலர்களை மகளிர் காவல் துறையை குறித்து கேவலமாக பேசியதற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்

    பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

    அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும் மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக சவுக்கு சங்கர் அவர்கள் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

    பாரதி, அம்பேத்கர், பெரியார் போன்ற தத்துவார்த்த தலைவர்கள் கண்ட புதுமை பெண்கள் நாங்கள். சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டவர்கள் தமிழக காவல்துறையை சார்த்த மகளிர் காவலாளிகள். அவர்கள் பெண் என்பதினால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது. எங்கள் பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ் தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம்.

    பெண்ணினத்தை போற்ற கண்ணியத்தை அளவுகோலாக வைத்து எடைபோடுங்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
    • மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர்.

    தேனி:

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவரை போலீசார் வேனில் கோவைக்கு அழைத்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னர் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. போலீஸ் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர். காரில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×