search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"

    • தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது.
    • 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

    நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக லீக்கானதாக குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண் பெற்றனர் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

    இன்றைய விசாரணையின்போது நீட் மறுதேர்வு கிடையாது. தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஒட்டுமொத்த சிஸ்டமும் மீறப்பட்டுள்ளது அல்லது தேர்வின் புனிதம் மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு தற்போதைய நிலையில் வருவது மிகவும் கடினமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் சரி என என்டிஏ மதிப்பெண் வழங்கியுள்ளது.
    • ஏதாவது ஒன்று தவறு என்றால் மதிப்பெண் இழக்கும் அபாயம் இருந்ததால் எதையும் தேர்வு செய்யவில்லை- மாணவி.

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 60 பேர் முழு மதிப்பெண் பெற்றது, 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தேர்வு எழுதியவர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது.

    இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டது.

    கடந்த வார விசாரணையின்போது, தேசிய தேர்வு முகமை தேர்வுகள் நடைபெற்ற நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக முடிவை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி என்டிஏ (National Testing Agency) முடிவுகளை வெளியிட்டது. அப்போது ஏற்கனவே அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு மையத்தில் ஆறு பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இந்த நிலையத்தில் 682-தான் அதிகபட்ச மதிப்பெண் எனத் தெரியவந்தது.

    இந்த நிலையில் மாணவி ஒருவர் 29-வது கேள்விக்கு குழப்பமான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அணு தொடர்பான கேள்விக்கு ஆப்சன் 2 மற்றும் ஆப்சன் 4 ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. நான் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தால் ஒரு மதிப்பெண் குறைந்து விடும் என்பதால் பதில் அளிக்க தவிர்த்துவிட்டேன்.

    இதனால் நான் 720-க்கு 711 மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு மதிப்பெண் அளித்திருந்தால் 4 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முன்னேறியிருப்பேன். 311-வது தரவரிசை பெற்றுள்ள அந்த மாணவி ஒரு கேள்விக்கு இரண்டு பதில் எப்படி சரியானதாக இருக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆப்சன் 2-ஐ தேர்வு செய்துள்ளதால் 44 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஐஐடி டெல்லி மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து நாளைக்கு சரியான விடையை தெரிவிக்குமாறு ஐஐடி டெல்லி இயக்குனருக்கு நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்த விசாரணையின்போது நீதிமன்றம் "இரண்டு ஆப்சனுக்கும் மதிப்பெண் கொடுக்கும் முடிவுக்கு என்டிஏ ஏன் வந்தது?" எனக் கேட்டது.

    அதற்கு என்டிஏ சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "ஏனென்றால் இரண்டுமே சாத்தியமான பதில்கள்" என்றார்.

    உடனே மனு தாக்கல் செய்தவர் "அதற்கு வாய்ப்பே இல்லை. ஆப்சன் 2 "atoms of each elements are stable and emit their characteristic spectrum" எனச் சொல்கிறது. பழைய புத்தகத்தில் "atoms of each element" என உள்ளது. ஆனால் புதிய புத்தகத்தில் "atoms of most elements" என உள்ளது. இது ஆப்சன் 4-ல் கேட்கப்பட்டுள்ளது. இரண்டும் சரியாக இருக்க முடியாது" என்றார்.

    என்டிஏ "மாணவர்கள் புதிய புத்தகத்தை பயன்படுத்தியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 4 சரியான பதிலாக கொடுக்கப்பட்டது. 4.2 லட்சம் மாணவர்கள் ஆப்சனை 2-ஐ தேர்வு செய்து 4 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்தது.

    "இரண்டையும் சரியான பதில்களாக நீங்கள் கருதியிருக்க முடியாது. நீங்கள் எந்த விருப்பத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    "மேலும், எங்களை கவலையடையச் செய்வது என்னவென்றால், நீங்கள் செய்ததன் பலனை நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளனர்" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இத்துடன் இன்றைய விசாரணையை முடித்து நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

    • சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக போலீசார் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் மீது குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது.

    குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார்? போன்ற கேள்விகளை உச்சநீதிமன்றம் அரசு நோக்கி எழுப்பியது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு முறைகேடான தகவல்களை பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் சட்டம் போடப்பட்டது என வாதங்களை முன்வைத்தார்.

    அரசு தரப்பு குற்றச்சாட்டை மறுத்த சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிட்டதால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    அத்துடன் ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றததிற்கு மாற்றக்கோரிய மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்.
    • நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும்.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுத்தாக்கல் செய்த மாணவர்களில் எத்தனை பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று  கேள்வி எழுப்பியது.

    நீட் தேர்வில் தேர்வான 1.8 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமாவது மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மருத்துவ படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    • பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார்.
    • இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    கடந்த 2009 ஆம் ஆண்டு கடுமையான குறைபாடுகள் இருந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனக்கு விற்றதாக பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார்.

    இந்த வழக்கில், பழுதடைந்த பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக புதிய காரை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

    ஆனால் பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். தனக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பழைய காருக்கு பதில் புதிய காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது.
    • கைது செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தல்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில முதல்வராக இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபான கொள்ளை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

    இதனைத் தொடர்நது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர். போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    ஆனால், சிறையில் இருந்து கொண்டே மக்களுக்காக பணியாற்றுவேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக உள்ளார்.

    அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் மதுபானக் கொள்கை உருவாக்கி அதை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.

    அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இந்த வழக்கு விசாரணையின்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல்வர் பதவி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் "தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா... அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக்கூடாது என உத்தர விட முடியுமா? என்ற எங்களுக்குச் சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் டெல்லி மாநில முதல்வர். அவர் வகிப்பது முக்கியத்துவமும் செல்வாக்கும் கொண்ட பதவி. நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. ஆனால் அந்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவாலிடமே விட்டுவிடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

    • மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும்.
    • மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.

    மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். "மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும். அதை நாங்கள் விரும்பவில்லை. பெண்களைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இது அவர்களுக்குப் பாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மேலும் "மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடுங்கள்" என்று கூறி வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் முடித்து வைத்தார். 

    • நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம்.
    • சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது.

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

    நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.

    எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

    இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

    ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய அரசை நோக்கி பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்,

    கசிந்த நீட் வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?, வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன?, நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?, நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள் பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா?

    நீட் தேர்வுத்தாள் கசிவு நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை நிலைப்பாடாக கொண்டாலும் 2 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டால் மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுவதில்லை. ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தெளிவாகிறது. நீட் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் அறிய விரும்புகிறோம். எந்த கட்டத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது?, கசிவுக்கு காரணமானவர்கள் மீதும், பலனடைந்தவர்கள் மீதும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    டெலிகிராம், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவியுள்ளது. ஒரு இடம் மட்டும் இல்லாமல் பல இடங்களில் பெருமளவில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    வினாத்தாள் கசிவின் தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும். எத்தனை மாணவர்களின் தேர்வு முடிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்ட மாணவர்களின் இருப்பிடங்கள் எங்கே உள்ளது.

    இறுதியாக நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை மத்திய அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
    • பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 8-ந்தேதி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில்தான் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் மத்திய தேர்வு முகை மற்றம் மத்திய அரசு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்த மறுப்பு தெரிவித்து விட்டது.

    உச்சநீதிமன்றம் தீர்வை ரத்து செய வேண்டும். மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்மட்ட தேர்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மனுக்களை ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

    மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "நீதிமன்றம், NEET-UG-ஐ மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய அரகு மற்றும் NTA) உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயமற்றதாகவும் கடுமையானதாகவும் மட்டுமல்ல, மீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மீறப்பட்டதாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வின்போது வினாத்தாள் லீக்கானதாக குற்றச்சாட்டு.
    • தேர்வு முடிவில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை எழுப்பியது.

    எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின்போது பேப்பர் லீக்கானதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ரிசல்ட் வெளியானபோது 60-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்ணும், 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது.

    இதனால் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தேசிய தேர்வு முகமை முறைகேடு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தது. மத்திய அரசும் பேப்பர் லீக்கானதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றது.

    என்றபோதிலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தில் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பான பொதுநல வழக்கு, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 8-ந்தேதி நீதிமன்றம் நடைமுறைகள் தொடங்க இருக்கிறது.

    மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் நேற்று, உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது.
    • YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்தார்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.

    இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்

    இதனையடுத்து, ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் அவரை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய தடை விதித்த ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

    மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. வரும் 6ம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ×