search icon
என் மலர்tooltip icon

    பிலிப்பைன்ஸ்

    • புல்வெளியில் தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
    • விமானத்தில் இருந்த 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்தனர்.

    மணிலா:

    தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணிகள் விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்தது. விமானம் நேற்று இரவு மேக்டன்-செபு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது.

    மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறங்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்துள்ளது. விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளியில் பாய்ந்தது. இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.

    இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    புல்வெளியில் பாய்ந்த விமானத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளம் சரிசெய்யப்பட்ட பின் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது. அப்போது கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
    • கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர். துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது. அப்போது கப்பல் துறைமுகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர்.

    உடனே கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 2 பேரை காணவில்லை. அவர்களை தேடி வருகிறார்கள். கப்பலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக தெரிகிறது.

    • லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு திரும்பினர்.
    • முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டன.

    மணிலா :

    சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தது.

    நீண்ட காலமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்களின் கல்வி சூழலை மோசமாக்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்சில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு திரும்பினர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் சரிபாதி அளவு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இந்த நிலநடுக்கம் அப்ரா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
    • பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    மணிலா :

    தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (பசிபிக் ரிங் ஆப் பயர்) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

    இந்த நிலையில் பிலிப்பைன்சில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள அப்ரா மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.

    மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள அப்ரா மாகாணம் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக குலுங்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

    உள்ளூர் நேரப்படி காலை 8:43 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது அப்ரா மாகாணத்தில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வானுயர கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மேலும் இந்த நிலநடுக்கம் அப்ரா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாகாணத்தில் வீடுகள், கடைகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.

    இந்த நிலநடுக்கமானது அண்டை மாகாணமான பெங்குவெட், நாட்டின் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல இடங்களிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நிலநடுக்கத்தால் இதுவரை 4 பேர் பலியானதாகவும், 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

    படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    இதனிடையே பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக அண்மையில் பதவியேற்ற பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நிலநடுக்கம் தாக்கிய அப்ரா மாகாணத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக கடந்த 1990ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் பலியானது நினைவு கூரத்தக்கது.

    • இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் தாக்கப்படுகிறது.
    • 1990ல் வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர்.

    வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதிகளவில் பொருட் சேதங்கள் ஏற்படுத்தி உள்ளது என்றும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பிழைகளின் வளைவான பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" உடன் அமைந்துள்ள பிலிப்பைன்ஸில் உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் ஏற்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்களால் தாக்கப்படுகிறது. இது உலகின் மிகவும் பேரழிவு பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.

    1990ல் வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிலா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
    • இதில் 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

    விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணைக் கைதியாக போலீஸ் காவலில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×