search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korean Air Flight"

    • புல்வெளியில் தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
    • விமானத்தில் இருந்த 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்தனர்.

    மணிலா:

    தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணிகள் விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்தது. விமானம் நேற்று இரவு மேக்டன்-செபு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, அங்கு கனமழை பெய்துகொண்டிருந்ததால் 2 முறை விமானத்தை தரையிறக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது.

    மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறங்க முற்பட்டார். அப்போது, கனமழை காரணமாக மழைநீர் தேங்கியதால் விமான ஓடுதளம் வழுவழுப்புடன் இருந்துள்ளது. விமானி தரையிறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்வெளியில் பாய்ந்தது. இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.

    இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 173 பேரும் அவசரகால வழி வழியாக விமானத்தில் இருந்து வெளியேறி தப்பித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    புல்வெளியில் பாய்ந்த விமானத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளம் சரிசெய்யப்பட்ட பின் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×