என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
    • கடலூர் தொகுதி வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், கடலூர் தொகுதி வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாகவும், அவரது விருப்பம் இல்லாமலே அவரது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில் அத்தகைய செய்திகளுக்கு தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

    • பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
    • மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி போட்டியிடுகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

     மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிடுகின்றனர்.

     இதையடுத்து தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்கும் கேப்டன் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு தனது தந்தையிடம் ஆசி பெற்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்
    • புதுச்சேரி தொகுதியில் நமசிவாயம் போட்டியிடுகிறார்

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில், விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா களம் காண்கிறார். புதுச்சேரி தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    திருவள்ளூர் - பொன்.பாலகணபதி,சென்னை வடக்கு - பால் கனகராஜ், திருவண்ணாமலை - அஸ்வத்தாமன், நாமக்கல் - கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகின்றனர்.

    திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி - வசந்தராஜன், கரூர் - செந்தில்நாதன், தென்காசி - ஜான்பாண்டியன், சிதம்பரம் - கார்திகேயனி, நாகப்பட்டினம் - எஸ்.ஜி.எம். ரமேஷ், தஞ்சாவூர் - முருகானந்தம் போட்டியிடுகின்றனர்.

    திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதாரணிக்கு இந்த தேர்தலில் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
    • தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    திருச்சி:

    திருச்சி சிறுகனூரில் திருச்சி மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

    பின்னர் திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் இது.

    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். பா.ஜ.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கெஜ்ரிவாலை கைது செய்து கொண்டு போனார்கள். இந்துத்துவா அஜண்டா ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம், இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி.

    இவ்வாறு வைகோ கூறினார்.

    • தி.மு.க.வில் பெரும்பாலான வேட்பாளர்கள் 25-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
    • விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களும் 25-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில் தி.மு.க.வில் பெரும்பாலான வேட்பாளர்கள் 25-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இதில் சில வேட்பாளர்கள் 27-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

    இதே போல் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பொறுத்தவரை 40 தொகுதி வேட்பாளர்களும் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.

    அதன் பிறகு 25-ந்தேதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடியாதவர்கள் 27-ந்தேதி மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதே போல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களும் 25-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இதே போல் மற்ற கட்சி வேட்பாளர்களும் 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார்.

    பெரம்பலூர்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார். திமுகவில் முதல் ஆளாக அருண்நேரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    • மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
    • நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம் என்று சீமான் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்தார்.

    ஈரோடு தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில், வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர்.

    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் பேட்டி அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:

    40 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளோம். அந்த பணிகளை அதிகாரத்தின் மூலமாக அரசியலுக்கு வந்து செய்ய நினைத்தோம்.

    அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி உதயமானது. லஞ்ச ஊழலை இல்லாத அரசியலை உருவாக்கவே புதிய கட்சியை தொடங்கி பயணித்து வருகிறோம்.

    முன்பு தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து டி.வி.யையெல்லாம் உடைத்ததாக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பின்னர் பதில் கூறுவேன்.

    அதற்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சி பாசிசத்தை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. தேச நலனுக்கு எதிரான போராகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.

    அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாலேயே இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியுடன் கைகோர்த்துள்ளோம்.

    பாரதிய ஜனதா கட்சியினர் தங்களை மாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    அதற்கான அறிகுறிகளும் அவர்களிடம் தென்படவில்லை. தி.மு.க.வுடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. எனது சொந்த வாழ்க்கையை பற்றி இந்த நேரத்தில் யோசிக்கவில்லை. எனது கட்சியின் முன்னேற்றத்துக்காகவும், சொந்த அரசியல் முன்னேற்றத்துக்காகவும் நான் சுயநலத்தோடு சில முடிவுகளை எடுத்திருக்கலாம்.

    எனது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் எண்ணிக்கையை பார்ப்பது முக்கியம் இல்லை. பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தி.மு.க. கூட்டணியில் 3 அல்லது 4 இடங்களை எங்களால் எளிதாக கோரி இருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம் என்று தோன்றியது. எனது கருத்தை நிரூபிக்க தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்றே கட்சியினர் கூறினார்கள்.

    ஆனால் அதை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும். நாம் கூட்டணியை பலப்படுத்தலாம் என்று நான் கூறிவிட்டேன். மற்றத் தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு சலுகைகளை அளிக்கவே தயாராக இருந்தனர். ஆனால் நாங்கள் அதனை ஏற்கவில்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு இது கடைசி கோட்டையாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

    இந்தியா முழுவதும் இந்த மறுமலர்ச்சியை பேச்சாக மாற்றி இருக்கிறார்கள். வாழ்வாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன்.

    இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை யோசனையை முதலில் மக்கள் நீதி மய்யம்தான் முன் வைத்தது. ஆனால் அதனைப் பற்றி நினைக்காமல் தி.மு.க. அதனை செயல்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும். மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக தற்போதைய சூழலில் இந்தியா கூட்டணியின் அடையாளமாக ராகுல் காந்தியே உள்ளார்.

    தமிழகத்தில் கவர்னர் அவரது வேலையை சரியாக செய்யாமல் உள்ளார். தமிழகத்தில் திராவிட அரசியலை எப்போதுமே வீழ்த்த முடியாது. தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    • கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.
    • 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது

    கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கடந்த 1998-ல் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி. ஆனார். தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது.

    இதையடுத்து 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆர்.நல்லகண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக எம்.பி. ஆனார்.

    2004 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். 2014-ல் 4-வது முறையாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ம் இடத்தை பிடித்தார்.

    பின்னர் 2019-ல் பா.ஜ.க. சார்பில் 5-வது முறையாக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை தொகுதியில் பா.ஜ.க. வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 2 முறை இந்த தொகுதியை பா.ஜ.க. வென்றபோது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சாதித்துள்ளது. ஆனால் இந்த முறை தி.மு.க., அ.தி.மு.க.வும் தனித்தனியாக களம் காண்கின்றன. இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. இதில் அண்ணாமலை வெற்றிக்கணக்கை தொடங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது.
    • கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.

    சென்னை:

    தேர்தல் வந்தால் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது பல காட்சிகள் ஒவ்வொரு கட்சியிலும் திரைமறைவில் நடப்பது வழக்கமானதுதான்.

    முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது. இதில் பலர் எதிர்பார்க்கப்பட்டவர்கள். சிலர் புதுமுகங்கள் ஆவார்கள்.

    ஆனால் பா.ஜனதா ஓசையின்றி தொகுதிகளையும் அதில் பிரபலங்களையும் தேர்வு செய்து வந்துள்ளது.

    தெலுங்கானா கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்து தென்சென்னையில் களம் இறக்கி உள்ளது.

    அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட போதும் நீலகிரியில் தி.மு.க.வின் ஆ.ராசாவை எதிர்த்து களம் இறக்கி உள்ளது.

    அண்ணாமலை போட்டியிடுவாரா? என்று எதிர்பார்த்த நிலையில் அவரை கோவை தொகுதியில் களம் இறக்கி இருக்கிறது. எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரனை நெல்லை தொகுதியில் போட்டியிட வைத்துள்ளது.

    கன்னியாகுமரியில் நன்கு அறிமுகமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் களம் இறக்கி உள்ளது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை வேலூரிலும் பாரிவேந்தரை பெரம்பலூரிலும் களத்தில் இறக்கி உள்ளது.

    அதே போல் கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி.யான நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.

    • காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வம், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
    • பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ப.ராஜ்குமார் எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக எஞ்சியுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

    தி.மு.க. போட்டியிடும் 21 வேட்பாளர்களில் 10 பேர் ஏற்கனவே களம் கண்ட அனுபவசாலிகள். 11 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 21 பேரில் 3 பெண்கள், 19 பட்டதாரிகள், 3 முதுநிலை பட்டதாரிகள், 2 டாக்டர்கள், 6 வக்கீல்கள், முனைவர் பட்டம் பெற்ற 2 பேரும் அடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர்களின் கல்வி மற்றும் இதர பின்னணி பற்றிய விவரம் வருமாறு:-

    1. வடசென்னை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு வயது 54. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான இவர், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் இதே தொகுதியில் 2-வது முறையாக களம் காண்கிறார்.

    2. தென் சென்னை வேட்பாளரான சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் (61), கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத்தன்மைக்கு சொந்தக்காரர். எம்.ஏ., எம்.பில் படித்துள்ளார். முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை தங்கபாண்டியன் முன்னாள் அமைச்சர் என்பதும், தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2-வது முறையாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    3. மத்திய சென்னையில் களம் இறங்கும் தயாநிதி மாறன் (57), பி.ஏ. படித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் மகன். இவரும் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் இதே தொகுதியில் 2004 பாராளுமன்ற தேர்தல் முதல் தொடர்ந்து 6-வது முறையாக போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    4. ஸ்ரீபெரும்புதூரில் களம் காணும் டி.ஆர்.பாலு (83), பி.எஸ்சி. படித்துள்ளார். வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், 1986-ம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக இருந்தார். 1996 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மத்திய இணை மந்திரி ஆனார்.

    தொடர்ந்து 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர். 2009 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2019 தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    5. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வம் (50), விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்.காம். எம்.பில் மற்றும் வக்கீலுக்கு படித்துள்ளார். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தற்போது இவருக்கு 2-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    6. அரக்கோணம் தொகுதியில் களம் இறங்கும் எஸ்.ஜெகத்ரட்சகன் (76), எம்.ஏ. படித்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் (1999, 2009 மற்றும் 2019) 3 முறை வெற்றி பெற்றுள்ளார். மத்திய இணை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது 4-வது முறையாக அரக்கோணம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    7. வேலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கதிர் ஆனந்த் (49), பி.காம்., எம்.பி.ஏ. படித்துள்ளார். கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் துரைமுருகனின் மகன். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கி, வெற்றி வாகை சூடிய அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    8. தர்மபுரி வேட்பாளரான ஆ.மணி (55), வக்கீல் ஆவார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவருக்கு தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    9. திருவண்ணாமலையில் களம் காணும் சி.என். அண்ணாதுரை (51), விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பி.காம் பட்டதாரியான இவர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2014-ம் சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    10. ஆரணி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தரணிவேந்தன் (58), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாய தொழில் செய்கிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், தேர்தல் களத்தை சந்திப்பது முதல் முறை ஆகும்.

    11. கள்ளக்குறிச்சி வேட்பாளரான தே.மலையரசன் (49) பி.காம் படித்துள்ளார். வணிகம் செய்கிறார். உடையார் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார்.

    12. சேலம் தொகுதியில் களம் இறங்கும் டி.எம்.செல்வ கணபதி (65), எம்.ஏ. மற்றும் வக்கீலுக்கு படித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். 1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சேலம் தொகுதி எம்.பி.ஆனார். 2008-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். 2010-ம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக இருந்தார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    13. ஈரோடு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே.இ.பிரகாஷ் (48) பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். 'டைல்ஸ்' விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார். தி.மு.க.வில் இளைஞரணி மாநில துணை செயலாளராக உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    14. நீலகிரி (தனி) தொகுதியில் களம் இறங்கும் ஆ.ராசா (60) பி.எஸ்.சி., பி.எல். படித்துள்ளார். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த இவர், பெரம்பலூர் தொகுதியில் 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நீலகிரி தொகுதியில் 2009, 2014, 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். 2 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். தற்போது 4-வது முறையாக நீலகிரி தொகுதியில் களம் காண்கிறார்.

    15. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ப.ராஜ்குமார் (59) எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். விவசாய தொழில் செய்கிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். கோவை மாநகராட்சி மேயராக (அ.தி.மு.க.) 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    16. பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான கே.ஈஸ்வரசாமி (47), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். நூற்பாலை நடத்தி வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இவர், முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

    17. பெரம்பலூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள கே.என்.அருண் நேரு (40), ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். அரிசி ஆலை நடத்தி வருகிறார். ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் கே.என்.நேருவின் மகன் ஆவார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. அப்போது வழங்கப்படாத வாய்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது. இவரும் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

    18. தஞ்சை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி (45), வக்கீல் ஆவார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், தஞ்சை தொகுதியில் 6 முறை வெற்றி வாகை சூடிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு பதிலாக களம் இறக்கப்பட்டுள்ளார்.

    19. தேனி தொகுதியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் (62), எம்.ஏ. படித்தவர். விவசாய தொழில் செய்கிறார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்தவர். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவரை பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக்கினார் ஜெயலலிதா. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது அவருக்கு தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    20. நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்கும் கனிமொழி (56), மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் ஆவார். எம்.ஏ. படித்துள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர். பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக இருந்த அவர், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக களமிறங்கி மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது தூத்துக்குடி தொகுதியில் 2-வது முறையாக களம் காண்கிறார்.

    21. தென்காசி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் ராணிஸ்ரீகுமார் (40), சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றியவர். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் புதுமுக வேட்பாளர் ஆவார்.

    ×