என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
சென்னை :
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* கவர்னர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்.
* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
* மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்குவோம்.
* பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்துவோம்.
* குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
* வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும்.
* நீட் தேர்வுக்கு மாற்றாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை.
* தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
* தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
* சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
* 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படும்.
* வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க நலவாரியம்.
* நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை.
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
- திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா,மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிடுகின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ், சேலம் தொகுதியில் அண்ணாதுரை, திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா,
மயிலாடுதுறை தொகுதியில் ம.க.ஸ்டாலின், கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான்,
அரக்கோணம் தொகுதியில் பாலு, தர்மபுரி தொகுதியில் அரசாங்கம், ஆரணி தொகுதியில் கணேஷ்குமார், விழுப்புரம் தொகுதியில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயரை பாமக அறிவிக்கவில்லை.

- ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
- 15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்தவகையில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான அவரது முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அதன் விவரம் வருமாறு:-
அரக்கோணம், கிருஷ்ணகிரி
ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் (பாண்டியநல்லூர்) நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா கந்தனேரி கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.
2-ந்தேதி மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட கார்னேஷன் திடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு வள்ளலார் மைதானம் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கரூர் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாமக்கல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
நீலகிரி, கள்ளக்குறிச்சி
4-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீலகிரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் மார்க்கெட் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 4 மணிக்கு காரமடை மேட்டுப்பாளையம் ரோடு காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு கோவை தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா மைதானம் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
5-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 5.30 மணி தியாகதுருகம் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசிகிறார். இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தேனி, பொள்ளாச்சி
6-ந்தேதி மாலை 4 மணிக்கு தஞ்சை தொகுதிக்குட்பட்ட திலகர் திடர் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாகை (தனி) தொகுதிக்கு உட்பட்ட அவுரி திடல் பொதுக்கூட்டத்திலும், 7-ந்தேதி மாலை 4 மணிக்கு திருவள்ளூர் (தனி) தொகுதியிலும், இரவு 7 மணிக்கு வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பெரவலூர் சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
8-ந்தேதி மாலை 4 மணிக்கு சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு மதுரை தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
9-ந்தேதி மாலை 4 மணிக்கு தேனி தொகுதிக்குட்பட்ட பங்களாமேடு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
10-ந்தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், இரவு 7 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகர் அம்மா திடல் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
மத்திய சென்னை, தென்சென்னை
11-ந்தேதி ஆரணி தொகுதிக்குட்பட்ட சேவூர் பைபாஸ் ராஜ்பிரியா திருமண மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட அண்ணாசிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
12-ந்தேதி மாலை 4 மணிக்கு நாமக்கல் தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு பரமத்தி வேலூர் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு சேலம் தொகுதிக்குட்பட்ட கோட்டை மைதானம் பொதுக்கூட்டத்திலும்,
13-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு ஈரோடு தொகுதிக்குட்பட்ட கனிராவுத்தர்குளம் பொதுக்கூட்டத்திலும்,
14-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட அரியலூர் காமராஜர் திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் துறையூர் சாலை மற்றும் இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,
15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சின்னமலை வேளச்சேரி சாலை பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
- கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும்.
- ஓட்டுபோடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை.
சென்னை:
பொதுத் தேர்தல்களில் அதிக அளவில் வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதில் ஒவ்வொரு முறையும் இந்திய தேர்தல் கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான புதிய உத்திகளையும் வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய நடவடிக்கையாக, வாக்காளர் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வாக்காளர் கையேடு என்ற 8 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகத்தை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இந்த கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும். அந்த புத்தகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை; அதற்கான விண்ணப்பப் படிவங்களின் விவரங்கள்; வாக்காளர் பட்டியலில் பெயரை ஆன்லைனில் தேடும் முறை; வாக்குச்சாவடி இருக்கும் இடத்தை அறியும் முறை;
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் மாற்று ஆவணங்கள் பற்றிய விவரங்கள்; வரிசையில் நிற்பதில் இருந்து ஓட்டு போடுவதுவரை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்; ஓட்டுபோடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை;
இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ள வழிகாட்டி சேவை செயலிகள் பற்றிய விவரங்கள்; வீட்டில் இருந்தே வாக்களிக்கும் தபால் ஓட்டு வசதி; உறுதியாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி போன்ற தகவல்கள் அதில் உள்ளன.
- ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
- தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
தேனி:
தமிழக பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தேனியில் தொடங்குகிறார். இதற்காக நாளை இரவு தேனிக்கு வரும் அவர் ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
அன்று இரவு தேனியில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுநாள் (24-ந் தேதி) தேனி அல்லிநகரம், பெரியகுளம், மூன்றாந்தல் ஆகிய இடங்களில் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
- விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
- உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலை அருகே சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள ஒரு தையற் கடையில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்குமார் ஆகிய இருவரும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.
பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து, சப்- கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், எந்தவித அனுமதியின்றியும் மத்திய அரசின் திட்டத்தில் கடனுதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு விநியோகித்த விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள், கணினிகளை பறிமுதல் செய்தும், மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில்:-
"தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம், ஆனால் இங்கு உரிய அனுமதி பெறாமல் தையற் கடையில் வைத்து சிலர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினார்.
உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது.
- தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் திட்டமிட்டு உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜனதாவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை வாயிலாக தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசை விமர்சித்தும் பிரசாரம் செய்தார்.
இந்த சூழலில், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தொடர்ந்து, நெல்லையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். நெல்லையில் பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில், பிரதமர் மோடி தி.மு.க. அரசை கடுமையாக சாடினார். அதன்பிறகு, சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வரவேற்பு, பிரதமர் மோடிக்கு உற்சாகத்தை அளித்தது. இதே உற்சாகத்துடன் பிரதமர் மோடி மீண்டும் தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 15-ந்தேதியும், கோவைக்கு 18-ந்தேதியும், சேலத்துக்கு 19-ந்தேதி பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜனதா தொண்டர்களை சந்தித்தார். பிரதமரின் தொடர் வருகை பா.ஜனதா தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக, மீண்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய 4 இடங்கள் அல்லது கூடுதலாக ஒரு இடம் என 5 இடங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகத்திற்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்ய இருப்பது உற்சாகத்தை அளிப்பதாக, பா.ஜனதா தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
- ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு.
- மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.
- பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே வாய்ப்பு இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளை பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இதில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு அடைந்துவிட்டது. தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இதையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திருச்சி சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான மேடை
இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் கட்-அவுட்
இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
இன்று இரவு தஞ்சாவூரில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை (சனிக்கிழமை) தஞ்சை மற்றும் நாகை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
- இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக் மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக தேனீ, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரம்பத்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
- பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






