search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாரதிய ஜனதாவுக்கு எதிரான போரில் வெல்லவே தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்: கமல்ஹாசன்
    X

    பாரதிய ஜனதாவுக்கு எதிரான போரில் வெல்லவே தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்: கமல்ஹாசன்

    • மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது.
    • பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பற்றியும் பேட்டி அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:

    40 ஆண்டுகளாக எனது நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளோம். அந்த பணிகளை அதிகாரத்தின் மூலமாக அரசியலுக்கு வந்து செய்ய நினைத்தோம்.

    அதன் விளைவாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி உதயமானது. லஞ்ச ஊழலை இல்லாத அரசியலை உருவாக்கவே புதிய கட்சியை தொடங்கி பயணித்து வருகிறோம்.

    முன்பு தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து டி.வி.யையெல்லாம் உடைத்ததாக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பின்னர் பதில் கூறுவேன்.

    அதற்கு பதில் அளிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. மக்கள் பற்றி யோசித்தே இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவெடுத்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சி பாசிசத்தை நோக்கியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. தேச நலனுக்கு எதிரான போராகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.

    அதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாலேயே இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியுடன் கைகோர்த்துள்ளோம்.

    பாரதிய ஜனதா கட்சியினர் தங்களை மாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    அதற்கான அறிகுறிகளும் அவர்களிடம் தென்படவில்லை. தி.மு.க.வுடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. எனது சொந்த வாழ்க்கையை பற்றி இந்த நேரத்தில் யோசிக்கவில்லை. எனது கட்சியின் முன்னேற்றத்துக்காகவும், சொந்த அரசியல் முன்னேற்றத்துக்காகவும் நான் சுயநலத்தோடு சில முடிவுகளை எடுத்திருக்கலாம்.

    எனது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் எண்ணிக்கையை பார்ப்பது முக்கியம் இல்லை. பாராளுமன்றத் தேர்தலே முக்கியம் என்று கருதி தேசத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தி.மு.க. கூட்டணியில் 3 அல்லது 4 இடங்களை எங்களால் எளிதாக கோரி இருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதே முக்கியம் என்று தோன்றியது. எனது கருத்தை நிரூபிக்க தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்றே கட்சியினர் கூறினார்கள்.

    ஆனால் அதை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும். நாம் கூட்டணியை பலப்படுத்தலாம் என்று நான் கூறிவிட்டேன். மற்றத் தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு சலுகைகளை அளிக்கவே தயாராக இருந்தனர். ஆனால் நாங்கள் அதனை ஏற்கவில்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு இது கடைசி கோட்டையாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

    இந்தியா முழுவதும் இந்த மறுமலர்ச்சியை பேச்சாக மாற்றி இருக்கிறார்கள். வாழ்வாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் சூழ்ச்சியாகவே இதனை பார்க்கிறேன்.

    இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை யோசனையை முதலில் மக்கள் நீதி மய்யம்தான் முன் வைத்தது. ஆனால் அதனைப் பற்றி நினைக்காமல் தி.மு.க. அதனை செயல்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியே வெல்லும். மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக தற்போதைய சூழலில் இந்தியா கூட்டணியின் அடையாளமாக ராகுல் காந்தியே உள்ளார்.

    தமிழகத்தில் கவர்னர் அவரது வேலையை சரியாக செய்யாமல் உள்ளார். தமிழகத்தில் திராவிட அரசியலை எப்போதுமே வீழ்த்த முடியாது. தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    Next Story
    ×