என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது.
    • பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலாத்தூர், ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், ஆலங்குளம், பாசிங்காபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மதுரை கிழக்கு தொகுதியில் மதுரை-நத்தம் சாலை ரூ.ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டது. மக்களின் நிர்வாக வசதிக்கா மதுரை கிழக்கு தொகுதியில் புதிய வட்டம் அமைக்கப்பட்டது. மூன்றுமாவடி முதல் ஆனையூர் வரை ரூ.50 கோடியில் சாலை அமைக்கப்பட்டது.

    பாண்டிகோவில் அருகே 50 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மதுரையில் செயல்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. கடந்த தேர்தலில் கூறிய வக்குறுதிகளை வெங்கடேசன் நிறைவேற்றவில்லை. எனவே வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரை இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்க்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு என்று பெரியணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னம்பலம், எஸ்.எஸ். சரவணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி இணைச் செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், ஒத்தக்கடை கார்த்திகேயன், மாணவரணி உசிலை முத்துகிருஷ்ணன் பாசறை ராமர், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு.
    • தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன.

    கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்.

    அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

    எனது அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை. இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் உள்ளன. என் வீடு பறிக்கப்பட்டாலும் தமிழர்கள் எனக்காக தங்களது வீடுகளை திறந்து வைத்திருப்பார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது.

    ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் 'ஒரே நாடு ஒரே மொழி' என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?

    தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

    ஊழல் செய்தவர்கள் பா.ஜனதா வைத்துள்ள வாஷிங் மெஷினுக்குள் சென்றால் சுத்தமாகிவிடுகிறார்கள். எனது மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரைத் தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை.

    வேலையில்லா திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி பணம் பெற்றுள்ளது. உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான்.

    விசாரணை அமைப்புகளை வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அரசியல் சாசன ஆன்மா மீது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா என்பது மக்களுக்கானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.
    • 10 ஆண்டுகால பாஜகவின் சாதனையை பற்றி பிரதமர் ஏன் பேசவில்லை என்றார்.

    கோவை:

    கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ.

    திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்.

    நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ராகுல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

    10 ஆண்டுகால பாஜகவின் சாதனையை பற்றி பிரதமர் ஏன் பேசவில்லை?

    வேண்டாம் மோடி என தெற்கில் இருந்து வரும் குரல் இந்தியா முழுவதும் கேட்கட்டும்.

    பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்த பணம் பறிக்கப்பட்டது.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சிக்கும் போய்விடும்.

    அதிமுக பற்றி சொல்ல எதுவும் இல்லை, சிம்ப்ளி வேஸ்ட் என தெரிவித்தார்.

    • மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
    • முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுவும் நவராத்திரி காலத்தின்போது இவ்வாறு செய்ததாக பா.ஜனதாவினர் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் "பா.ஜனதா மற்றும் கோடி மீடியாவை பின்தொடர்பவர்களுக்கான செயல்திறன் பரிசோதனை. இந்த வீடியோ நவராத்திரி தொடங்குவதற்கு முந்தையநாள் எடுக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியிட்டு மக்களை கேலி செய்ய விரும்புகின்றனர் என ராகுல் காந்தி, லாலு யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி, லாலு யாதவ் ஆட்டிறைச்சி சமைத்தது தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நாட்டில் அதிகப்படியாக உள்ள மக்களின் உணர்வுகள் குறித்து கவலை இல்லை. சவான் மாத்தின்போது (இந்திய காலண்டரில் மக்களகரமான மாதம்), அவர்கள் குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று ஆட்டிறைச்சி சமைக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வீடியோவை அப்லோடு செய்து நாட்டு மக்களை கேலி செய்கிறார்கள்.

    எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் தடைபோடுவதில்லை. மாறாக மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை. கோவில்களை அழித்ததோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. அவர்கள் அதை அனுபவித்தார்கள். அதேவழியில் சவான் மாதத்தில் வீடியோக்ளை அப்லோடு செய்து அவர்கள் முகலாயர்கள் காலத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தி மக்களை கேலி செய்து அவர்களின் வாக்கு வங்கிகளை உயர்த்த முயற்சிக்கிறார்கள்.

    அதேவழியில் நவராத்தியின்போது (தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோவை குறித்து) மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? இப்படிச் சொன்னதற்காக இவர்கள் இப்போது என் மீது துஷ்பிரயோகங்களைப் பொழிவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் எல்லையை தாண்டும்போது எது சரி என்று மக்களுக்குச் சொல்வது ஜனநாயகத்தில் எனது கடமை. நான் எனது கடமையைச் செய்கிறேன்.

    அவர்கள் வேண்டுமென்றே நாட்டின் நம்பிக்கைகளைத் தாக்குவதற்காக இதைச் செய்கிறார்கள், இதனால் நாட்டின் பெரும்பகுதியினர் அவர்களின் வீடியோக்களைப் பார்த்து அசௌகரியம் அடைகின்றனர். அவர்கள் சமரச அரசியலை தாண்டி முகலாய சிந்தனைக்கு ஆதாரமாக உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார்.
    • சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

    உள்துறை மந்திரியின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ரோடு ஷோவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில், மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார். பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்து மந்திரி அமித் ஷா உற்சாகமாக கையசைத்தார்.

    • 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
    • காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது.

    மத்திய பாதுகாப்புத் மந்திரி ராஜ்நாத் சிங் இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுசாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தற்போதில் இருந்து இன்னும் சில வருடங்களில் டைனோசர் போன்று அழிந்துவிடும் என அச்சப்படுகிறேன். 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.

    தினசரி காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது. ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது. ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
    • ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்ததை தங்களது வாக்குறுதியை (370 சட்டப்பிரிவு நீக்கம்) நிறைவேற்றியதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நான் கடந்த 50 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வந்துள்ளேன்.

    1992-ம் ஆண்டு ஏக்தா யாத்திரையின்போது லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்ததை திரும்பிப் பார்க்கிறேன். அப்போது நாங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றோம். 2014-ல் வைஷ்ணோ தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, பயங்கரவாதம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொடுப்போம் என வாக்குறுதி வழங்கினோம். மக்களின் ஆசீர்வாதத்தால், வாக்குறுதியை நிறைவெற்றியுள்ளோம்.

    பல தசாப்தங்களுக்கு பிறகு பயங்கரவாதம், பிரிவினைவாதம், கல் எறிதல், போராட்டம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற அச்சம் இல்லாமல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது, ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

    தயவுசெய்து என்னை நம்புங்கள், கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளை விடுவிப்பேன். எனது வாக்குறுதியை நிறைவேற்றிதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முழுவதுமாக மாறியுள்ளது.

    இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்களை சந்திக்க வலுவாக மத்திய அரசு அமைய பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டியிடுகிறார். ஜம்முவில் ஜுகல் கிஷோர் போட்டியிடுகிறார். 

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.
    • எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன் என்றார்.

    நெல்லை:

    நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

    தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.

    எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

    பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

    தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

    இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை.

    தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்கிறேன்.

    மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்.

    ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.

    அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.

    பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.

    உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்தார்.

    • மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • பிப்ரவரி 28-ந்தேதி தனது டெல்லி மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியோ மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜாமின் கிடைக்காமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் சிசோடியா, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி மணிஷ் சிசோடியாவின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.

    மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ எஃப்.ஐ.ஆர்.யை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரை மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.

    துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • லாலு பிரசாத்தின் மூத்த மகள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
    • இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி. இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்லிபுத்ரா தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளார்.

    பா.ஜனதா அதிகாரத்தை இழந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என மிசா பாரதி கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வெளியிடப்பட்டடு தேர்தல் பத்திரம் தொடர்பாக விசாரணை தேவை என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தேன். ஆனால் மீடியாக்கள் நான் கூறியதை திரித்து வெளியிட்டுள்ளன.

    இது தொடர்பாக மிசா பாரதி கூறுகையில் "நான் பிரதமர் பற்றி ஏதும் கூறவில்லை. என்னுடைய முழுக் கருத்தையும் வெளியிடுவதற்குப் பதிலாக, சிதைக்கப்பட்ட பகுதியை மீடியா வெளியிட்டுள்ளது. இது பா.ஜனதாவின் எஜெண்டா.

    வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் முன்னதாக அளித்த வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி ஏதாவது பேசியிருக்கிறாரா?. எந்த பிரச்சனை குறித்தும் பா.ஜனதா பேசுவதில்லை." என்றார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இதுபோன்ற கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் பதவி மிகவும் மரியாதைக்குரியது. நாட்டில் இருந்து ஏதும் மறைக்கப்படவில்லை. மாட்டுத்தீவனம் ஊழலில் அவரது தந்தை தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் ஊழலில் மூழ்கியுள்ளது. அவள் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    ×