என் மலர்
அமெரிக்கா
- முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும்
- காசா மக்களை வெளியேற்றி ஆபிரிக்க நாடுகளில் குடியமர்த்திவிட்டு அந்நகரை சொகுசு ரிசார்ட் நகரமாக மாற்ற உள்ளதாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் காசா போர் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் 20 அம்சங்களின் ஒரு பகுதியாக டிரம்ப் உருவாக்கியுள்ள 'காசா அமைதி வாரியத்தில்' உறுப்பினராக சேர நாடுகள், 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,087 கோடி) செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசா அமைதி வாரியத்தின் வரைவு சாசனத்தின்படி, உறுப்பினராக விரும்பும் நாடுகள் பெரும் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
குறிப்பாக, முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் என்றும், மற்ற நாடுகளுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு இருக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில், "இந்த வாரியத்தில் சேர்வதற்கு எந்தவிதமான குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணமும் கிடையாது.
காசாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நீண்டகால அர்ப்பணிப்பைக் காட்டும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து மட்டுமே அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தின் முதல் தலைவராக டிரம்ப் செயல்படுவார். இதில் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
காசாவில் ஹமாஸிற்குப் பதிலாக புதிய காவல் படையை உருவாக்க சர்வதேச படை ஒன்றை அமைக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசா மக்களை வெளியேற்றி ஆபிரிக்க நாடுகளில் குடியமர்த்திவிட்டு அந்நகரை சொகுசு ரிசார்ட் நகரமாக மாற்ற உள்ளதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான ஏஐ வீடியோ ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார்.
- கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் என் டிரம்ப் கருத்து
- டிரம்பின் கருத்துக்கு THE LANCENT இதழ் விளக்கம் அளித்துள்ளது.
பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் மாத்திரை உட்கொண்டால் குழந்தைகளுக்கு 'ஆட்டிசம்' ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என THE LANCENT இதழ் விளக்கம் அளித்துள்ளது.
கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, ADHD ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று The Lancet இதழில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது.
வழிகாட்டுதல்படி எடுத்துக்கொள்ளும் போது, கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் பாதுகாப்பான தேர்வாகவே உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு.
- டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், ரஷியா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும் என்று டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அதன்படி 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
நாம் பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும், அவர்களிடம் எந்தவிதமான வரிகளையும் அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்காமல் மானியம் வழங்கி வருகிறோம்.
இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது உலக அமைதி ஆபத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷியா கிரீன்லாந்தை விரும்புகின்றன. அதை தடுக்க டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது.
அமெரிக்காவின் வசம் இருந்தால் மட்டுமே இந்த புனிதமான நிலப்பகுதியை யாரும் தொடமாட்டார்கள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, இந்த அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
எனவே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே, சுவீடன்,நெதர்லாந்து பின்லாந்து ஆகிய 8 நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் படும்.
அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் வாங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஜூன் 1-ந்தேதி இந்த வரி விகிதம் 25 சதவீதமாக உயரும். கிரீன்லாந்தை முழுமை யாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.
இந்த நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அவை மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன.
கிரீன்லாந்தை சொந்தமாக்க அமெரிக்கா 150 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது. டென்மார்க் மற்றும் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கிரீனலாந்தில் மக்கள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடியை அசைத்தப்படி கிரீன்லாந்து விற்பனைக்கல்ல" என்று முழக்கமிட்டனர்.
- ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு.
- அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாது.
இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் புதிய அரசை அமைப்பதற்கான காலம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
கமேனி போன்ற பலவீனமான தலைவரின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியற்ற நாடாக ஈரான் மாறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
- வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- அப்போது, ஈரான் நிலைமையை அதிபர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார் என்றார்.
வாஷிங்டன்:
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என வெளியான தகவலுக்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ஈரானில் கொலைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அந்நாட்டு அரசுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேற்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட இருந்த 800 மரண தண்டனைகள் நிறுத்தப்பட்டதை அதிபர் டிரம்ப் புரிந்து கொள்கிறார்.
அதிபருக்கு அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்வது தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அதிபர் டிரம்ப் ஈரானை எச்சரித்திருந்தார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானில் நிலவும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.
- போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
வாஷிங்டன்:
வெனிசுலா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது.
கரீபியன் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்தது. இந்த கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையது என தெரிய வந்தது.
- அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.
மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் மற்ற நடிகர்களும் 'பீ குட்' என்ற வாசகம் அடங்கிய பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.
வெனிசுலா மீது அமெரிக்கா எடுத்து வரும் போர் நடவடிக்கை மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக 'நோ கிங்ஸ்' என்ற இயக்கத்தின் மூலம் ருப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் பேசிய மார்க் ருப்பலோ, டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் ஆவார். உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை இவரைப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது. இவர் பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் தண்டனை பெற்ற நபர் ஆவார். வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது என காட்டமாக விமர்சித்தார்.
- இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
- பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.
சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.
இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.
பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர்.
சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.
ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.
அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.
ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
- பாலியல் குற்றவாளி உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கூறியுள்ளார்.
- ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
உலகின் முன்னணி பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் 27 ஆண்டுகளாக மனைவி மெலிண்டா கேட்ஸ் உடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் 2021இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2000 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து இல் 2024 மெலிண்டா விலகி தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
இந்தநிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார்.
ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெலிண்டாவுக்கு பில் கேட்ஸ் மொத்தமாக 1.05 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சமீபத்திய வரி தாக்கல் அறிக்கைகளின்படி இது தெரியவந்துள்ளது.
இதுவே உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை பெண்கள் முன்னேற்றத்துக்கு செலவழிக்க போவதாக மெலிண்டா கூறியுள்ளார்.
சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு போகப்பொருளாக மாற்றிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.
ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
- வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது
- வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.
இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் தாம் தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டிரம்ப் என்று குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா பக்கத்தை பகிர்ந்துள்ளார்.
- தகவல் அறிந்ததும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர்.
- டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வரு கிறது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் செடார்ப்ளப் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 7 வயது சிறுமி உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றார்.
முதலில் தந்தை உள்பட 3 பேரை கொன்ற அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வேறு ஒரு இடத்தில் சிறுமி மற்றும் தனது 2 சகோதரர்களை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்ததும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர்.
விசாரணையில் அவர் 24 வயதான டாரிக்கா எம் மூர் என்பது தெரியவந்தது. அவர் தனது குடும்பத்தி னருடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பு அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.






