என் மலர்
உலகம்

காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக ரூ.9000 கோடி கட்டணம்?.. வெள்ளை மாளிகை விளக்கம்
- முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும்
- காசா மக்களை வெளியேற்றி ஆபிரிக்க நாடுகளில் குடியமர்த்திவிட்டு அந்நகரை சொகுசு ரிசார்ட் நகரமாக மாற்ற உள்ளதாக டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் காசா போர் கடந்த அக்டோபர் மாதம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் 20 அம்சங்களின் ஒரு பகுதியாக டிரம்ப் உருவாக்கியுள்ள 'காசா அமைதி வாரியத்தில்' உறுப்பினராக சேர நாடுகள், 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,087 கோடி) செலுத்த வேண்டும் என்று தகவல் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசா அமைதி வாரியத்தின் வரைவு சாசனத்தின்படி, உறுப்பினராக விரும்பும் நாடுகள் பெரும் தொகையைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
குறிப்பாக, முதல் ஆண்டிலேயே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை வழங்கும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் என்றும், மற்ற நாடுகளுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு இருக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில், "இந்த வாரியத்தில் சேர்வதற்கு எந்தவிதமான குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணமும் கிடையாது.
காசாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நீண்டகால அர்ப்பணிப்பைக் காட்டும் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து மட்டுமே அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தின் முதல் தலைவராக டிரம்ப் செயல்படுவார். இதில் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
காசாவில் ஹமாஸிற்குப் பதிலாக புதிய காவல் படையை உருவாக்க சர்வதேச படை ஒன்றை அமைக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசா மக்களை வெளியேற்றி ஆபிரிக்க நாடுகளில் குடியமர்த்திவிட்டு அந்நகரை சொகுசு ரிசார்ட் நகரமாக மாற்ற உள்ளதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான ஏஐ வீடியோ ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார்.






