என் மலர்
உலகம்

கிரீன்லாந்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்த டிரம்ப்
- கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு.
- டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், ரஷியா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும் என்று டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
அதன்படி 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத புதிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
நாம் பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும், அவர்களிடம் எந்தவிதமான வரிகளையும் அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்காமல் மானியம் வழங்கி வருகிறோம்.
இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது உலக அமைதி ஆபத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷியா கிரீன்லாந்தை விரும்புகின்றன. அதை தடுக்க டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது.
அமெரிக்காவின் வசம் இருந்தால் மட்டுமே இந்த புனிதமான நிலப்பகுதியை யாரும் தொடமாட்டார்கள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, இந்த அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.
எனவே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,நார்வே, சுவீடன்,நெதர்லாந்து பின்லாந்து ஆகிய 8 நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் படும்.
அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் வாங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஜூன் 1-ந்தேதி இந்த வரி விகிதம் 25 சதவீதமாக உயரும். கிரீன்லாந்தை முழுமை யாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.
இந்த நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அவை மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றன.
கிரீன்லாந்தை சொந்தமாக்க அமெரிக்கா 150 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது. டென்மார்க் மற்றும் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கிரீனலாந்தில் மக்கள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடியை அசைத்தப்படி கிரீன்லாந்து விற்பனைக்கல்ல" என்று முழக்கமிட்டனர்.






