என் மலர்tooltip icon

    உலகம்

    • போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
    • ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். காசா நகரமே மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருவதால் போரை நிறுத்த பல நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. ஆனாலும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

    இது வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கூட உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. காசாவில் இருந்து இந்த ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன.

    இதையடுத்து இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சேத விவரம், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

    போருக்கு பயந்து வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் மீது தான் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

    இந்த சண்டையில் 35 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
    • உதவி செய்ய தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

    இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.

    இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    • தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர்.
    • காம்யா என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.

    உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏற, சிறந்த உடல்தகுதியும், தன்னம்பிக்கையும் வேண்டும்.

    ஆனால் தற்போது எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் பலரும் ஏறி சாதனை படைத்தது வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இளம்வயது இந்திய பெண் என்ற சாதனை படைத்தார்.

    இதே போல் சில நாட்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாளத்தை சேர்ந்த பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்

    மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான அவர் மே 12 முதல் 25 வரையிலான காலகட்டத்தில் 3 முறை எவரெஸ்ட் சிகரத்தில் எறியுள்ளார்.

    எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறுவது மிகவும் சிரமமானது. சிலரால் மட்டும் தான் இந்த சாதனையை படைக்க முடியும் என்ற நிலை மாறி தற்போது தினமும் இந்த சாதனையை பலர் படைத்தது வருகின்றனர்.

    இதற்கு காரணம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எண்ணற்றோர் ஆர்வம் காட்டுவதும் தான்.

    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று அவர் கிண்டலடித்துள்ளார். 

    • 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

     

     

    இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • நான் நாயில் இருந்து வேறு ஒரு விலங்காக மாற ஆசைப்படுகிறேன்.
    • பூனையும், நரியும் மிகவும் சிறியவை என்பதால் எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

    விலங்குகள் மீது சிலருக்கு அதீத அன்பு இருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது தீராத காதல் கொண்ட ஜப்பானை சேர்ந்த டோகோ என்ற வாலிபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

    இந்நிலையில் டோகோ தற்போது இன்னும் சில விலங்குகள் போல தன்னை மாற்றி கொள்ள ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டோகோ கூறியிருப்பதாவது:-

    நாய்களுக்கும், மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகள் இருக்கும். கால்கள், கைகளை வளைப்பது என மனிதர்களில் இருந்து நாய்கள் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன. எனவே நாய் போல நடப்பது மிகவும் கடினம். நான் தற்போது என் கை, கால்களை நாய்களை போன்று மாற்றுவதற்கு வழிகளை ஆராய்ந்து வருகிறேன். பொதுவாக நாய்கள் அசுத்தமாகும் போது அவற்றின் ரோமங்களில் அழுக்கு படிந்து வருகிறது. அதனை சுத்தம் செய்ய அதிக உழைப்பு செலுத்த வேண்டி உள்ளது.


    எனவே நான் நாயில் இருந்து வேறு ஒரு விலங்காக மாற ஆசைப்படுகிறேன். அது பாண்டா அல்லது கரடி, நரி, பூனை என வேறு ஏதேனும் ஒரு விலங்கு போல மாற ஆசை உள்ளது. பூனையும், நரியும் மிகவும் சிறியவை என்பதால் எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. நிச்சயம் ஏதாவது ஒரு நாள் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

    • 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
    • போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்றுள்ளார்.

    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றது.

    113 ரன்களுக்கு ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் போப்பையை தன் வசமாக்கியது.

    இந்த வெற்றி கொல்கத்தா அணியின் பத்து ஆண்டு கால எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி கனடிய பாடகர்- ராப்பர் டிரேக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கிராமி விருது பெற்ற ராப்பர் டிரேக், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக 250,000 அமெரிக்க டாலர்கள் பந்தயம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 கோடி ) வென்று இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.73 கோடி பரிசை வென்றுள்ளார்.

    கிரிக்கெட் பந்தயத்தில் டிரேக்கின் முதல் முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் ரக்பியில் பந்தயம் கட்டியிருக்கிறார்.

    முன்னதாக, 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். டிரேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எனது முதல் கிரிக்கெட் பந்தயத்தை கொல்கத்தா மீது வைக்கிறேன்" என்று படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

    போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்று கோடியில் வென்றுள்ளார்.

    இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி பந்தயம் கட்டி, டிரேக் இப்போது சுமார் ரூ.3.73 கோடியை பெற்றுள்ளார். இதன் மூலம், டிரேக் சுமார் 1.7 கோடி லாபத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
    • விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    உலக அளவில் ஒரு வருட காலத்தில்  300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

     

    குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல்,செக்ஸ்டிங் (ஆபாச உரையாடல்) செய்தல், பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்துதல், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக்மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் என எண்ணிலடங்கா குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

     

     

    மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றுகிறார். உலகம் முழுவதும் இந்த வகை குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியமாக உலகின் ராட்சத பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவில் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

     

    • இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.
    • விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கத்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான கியூ.ஆர். 017 என்ற விமானம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து இன்று மதியம் 1 மணியளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் போது துருக்கி நாட்டின் மேலே சென்றபோது, இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.

    இதில் விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து விமானம் டப்ளின் நகரில் தரையிறங்கியது. விமானம் நடுவானில் குலுங்கிய தகவல் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விமான நிலையதில் இருந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காயமுற்ற பயணிகளுக்கு உதவினர். முன்னதாக லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் இதேபோன்று நடுவானில் குலுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 73 வயது முதியவர் உயிரிழந்தார். 

    • இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
    • பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3-வது பொதுத்தேர்தலாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் வரும் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும். இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும். இது தேசிய உணர்வை உருவாக்கும். கட்டாய தேசிய சேவையின் கீழ் 18 வயது இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு ராணுவத்தில் சேரவேண்டும். இதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் செலவிடும் என தெரிவித்தார்.

    • மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
    • புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்க தேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கதேச கடலோர மாவட்டங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பெரும் அபாய சமிக்ஞை எண். 10 ஒலிக்கப்பட்டுள்ளது. அங்கு மீன்பிடி படகுகள், இழுவை படகுகள் மற்றும் கப்பல்கள் மறு அறிவிப்பு வரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வங்கதேச மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர் எம்.டி. மொஹிபுர் ரஹ்மான் சின்ஹுவாவிடம் கூறுகையில், "பத்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் இருந்து குறைந்தது 8,00,000 பேர் ஏற்கனவே தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றார்.

    மேலும், அங்கு கனமழை எதிரொலியால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    • நாய்களுக்கு பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.
    • நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    நாய்கள் விமானம் பயணம் செய்வதற்கான புதிய ஆடம்பர விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் என அழைக்கப்படும் புதிய விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியது. நியூ யார்க்-இன் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.

    "முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன," என்று பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணிகளைச் சித்திரவதை செய்து பேருந்துக்குத் தீவைத்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று (மே 26) கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திராசிண்டாவிலிருந்து தேரா இஸ்மாயில் கானுக்குச் செல்லும் பேருந்தை, தரபன் தெஹ்சில் என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய TTP பயங்கரவாதிகள், பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறி சித்திரவதை செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பேருந்தை தீவைத்து எரித்து சாம்பலாக்கிய பின் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அப்பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

     

    ×