என் மலர்
உலகம்
- பலத்த சூறாவளி வீசியதால் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
- உடல் எடை 50 கிலோவுக்கு குறைவான நபர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
பீஜிங்:
சீன தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாளாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.
இதையடுத்து, பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. ரெயில், பஸ் சேவை பாதிக்கப்பட்டன.
பீஜிங்கில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. வாகனங்கள், கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவான நபர்கள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்படக் கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியது.
- இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
- ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 பேர் உயிரிழநதனர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை ராணுவப்படையினர் நேற்று திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 2,400 பேர் முகாம்களிலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐ.நா தேரிவித்துள்ளது.
- ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 83 பேர் காயமடைந்ததாக தெரிவித்தார்.
- 2023 க்குப் பிறகு உக்ரைன் பொதுமக்கள் மீதான ரஷியாவின் மிகக் கடுமையான தாக்குதலாகும்.
ரஷியா உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்காவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் உக்ரைன் - ரஷியா இருவருமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் வடகிழக்கு நகரமான சுமி நகரின் மீது ரஷியா இன்று பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 83 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இது 2023 க்குப் பிறகு உக்ரைன் பொதுமக்கள் மீதான ரஷியாவின் மிகக் கடுமையான தாக்குதலாகும்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். மக்கள் தேவாலயம் செல்லும் நாளில் தெருக்கள், குடியிருப்பு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
- அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடிமக்கள் அல்லாத அனைவரும் அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
- தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டனர். மேலும் அமெரிக்காவில் பல்வேறு விசாக்கள் மூலம் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கு இணங்கவில்லையென்றால் எந்த அடைக்கலமும் இருக்காது. அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 11-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியை மாற்றுபவர்களும் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும், தவறினால் அவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1பி உள்ளிட்ட செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.
ஆனாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களுடன் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
வடக்கு காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-அஹ்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து உருக்குலைந்தது.
- லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
- உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மியான்மரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.54 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
- ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
- சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பங்கேற்க வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷியா ஏவிய ஏவுகணை ஒன்று இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது.
இதுதொடர்பாக உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
உக்ரைனின் குசும் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை ரஷியா ஏவுகணை ஒன்று தாக்கியது. இந்தியாவின் நட்பு நாடு என கூறும் ரஷியா, இந்திய வணிகங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான மருந்துகள் அழிகின்றன என தெரிவித்துள்ளது.
- போல்சனரோ வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
- அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
சாவ் பாவ்லா:
பிரேசிலின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெய்ர் போல்சனாரோ.
இவர் நேற்று முன்தினம் வடகிழக்கு பிரேசிலில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவரது அரசியல் கட்சி தெரிவித்தது.
வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் உள்ள ஒரு சிறிய நகரமான சாண்டா குரூசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வலி கடந்த 2018 செப்டம்பரில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக்குத்தின் நீண்டகால விளைவுகளுடன் தொடர்புடையது என அவரது லிபரல் கட்சி தெரிவித்தது.
மருத்துவமனையில் போல்சனாரோவை கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.
- அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது.
- அமெரிக்க பொருட்கள் மீது சீனா 34 சதவீத வரி விதித்தது.
நியூயார்க்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
- இதை வெறும் கண்களால் காண முடியும்.
- வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும்.
இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும். எனவே இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.
வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.
வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. இதன் பின்னணியிலேயே PINK MOON என்று பெயர் வந்தது.
- பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது.
- நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் தேசம் குறித்த தகவல் வௌியாகவில்லை.
பாகிஸ்தானில் இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தினால் பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், சாக்வால் மற்றும் மியான்வாலி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பெஷாவர், மர்தான், மொஹ்மாந்து மற்றும் ஷாப்கதார் ஆகிய நகரங்களில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் தேசம் குறித்த தகவல் வௌியாகவில்லை.
- 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
- குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குறைந்தது 60,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல்நல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஏனெனில் காசாவுக்குள் வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வருகிறது.
மார்ச் 2 முதல், எந்த மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் வாகனங்களும் காசாவிற்குள் நுழையவில்லை. 23 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. 21 ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையை சீர்குலைத்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்ட அமைப்பு, மூன்று வாரங்களுக்கும் மேலாக காசாவிற்கு புதிய பொருட்களை கொண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளது. காசாவில் தற்போதுள்ள இருப்புக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருக்கும், இதனால் லட்சக்கணக்கானோர் கடுமையான பசியின் அபாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காசாவின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தடுப்பூசிகளும் மறுக்கப்படுகின்றன. இது சுகாதார நெருக்கடியை மோசமாக்குகிறது. UNRWA செய்தித் தொடர்பாளர் ஜூலியட் டூமா கூற்றுப்படி, "குழந்தைகள் பசியுடன் தூங்கப் போகிறார்கள். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வெகுஜன பட்டினிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது."
மற்றொரு அடியாக, இஸ்ரேலின் மெகோரோட் நிறுவனம் காசாவின் 70% நீர் விநியோகத்தை துண்டித்தது. மீண்டும் நீர் வழங்கப்படாவிட்டால் ஒரு பேரழிவு தரும் நீர் நெருக்கடி ஏற்படும் என்று காசா அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கு மத்தியில் இஸ்ரேலின் கொடிய வான்வழித் தாக்குதல்களால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குழந்தைகள் மீது எதிர்மறையான அதீத அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.






