என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.
    • கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார்.

    கடந்த 21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    2007 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்தோணி அல்பானீஸ் அமைச்சரானார். ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த அவர் கெவின் ரூட்டின் குறுகியபதவிக் காலத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.

    2019 ஆம் ஆண்டு எதிர்பாராத தோல்விக்குப் பிறகு அவர் தொழிலாளர் கட்சியின் தலைவரானார். பத்து ஆண்டுகால லிபரல்-தேசிய கூட்டணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 2022 இல் அவர் பிரதமரானார்.

    • வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர்.
    • உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர்.

    வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நகரின் 12 இடங்களை ட்ரோன்கள் தாக்கின. தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.

    இரவு முழுவதும் ரஷ்யா 183 வெடிக்கும் டிரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. அவற்றில், 77 உக்ரேனிய பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டன. மேலும் 73 தொலைந்து போயின. ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் மூன்று ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "உக்ரைனில்  ஒவ்வொரு இரவும் ஒரு கொடுங்கனவாக மாறி, உயிர்களை பலிவாங்குகிறது. உக்ரைனுக்கு பலத்த வான் பாதுகாப்பு தேவை. எங்கள் அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளிடமிருந்தும் வலுவான மற்றும் உண்மையான முடிவுகள் தேவை" என்று இன்று அதிகாலையில் X இல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

    கடந்த புதன்கிழமை உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா மேலும் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரஷியாவின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.       

    • காலை நேரத்தில் வங்கி அருகே வெடிகுண்டு உடன் சென்றுள்ளார்.
    • கையில் இருக்கும்போதே வெடிகுண்டு வெடித்துள்ளது.

    கிரீஸ் நாட்டின் வடக்கு நகரான தெசாலோகினி நகரில் பெண் ஒருவர் வெளிப்படையாக கையில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது திடீரென வெடித்ததில் உடல் சதறி பலியானார்.

    இன்று காலை 5 மணிக்கு ஒரு வங்கி அருகில் 38 வயது பெண் ஒருவர் கையில் வெளிப்படையாக வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது குண்டு வெடித்ததில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதில் சாலையோரம் இருந்து பல கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.

    அந்த பெண் மீது கடந்த காலங்கில் பல கொள்ளை வழக்குகள் இருந்ததாகவும், தற்போது தீவிர இடதுசாரி குழுக்களடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்
    • பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நதிநீர் தடுக்கப்பட்டது.

    இந்நிலையில் சிந்து நதியின் நீரை இந்தியாவிற்குத் திருப்பிவிடுவதற்காக கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்புகளும் அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

    ஜியோ நியூஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் பங்கான தண்ணீரை இந்தியா திருப்பிவிட முயற்சிப்பது அவர்களின் நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறினார்.

    "இந்தியா அத்தகைய கட்டமைப்பை (அணையை) உருவாக்க முயற்சித்தால், பாகிஸ்தான் அதை அழித்துவிடும்" என்று ஆசிப் கூறினார்.

    நதிநீர் நிறுத்தம் பாகிஸ்தானின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், இரத்தம் ஓடும் என்று தெரிவித்திருந்தார்.   

    • அதன்படி சிங்கப்பூரில் இன்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
    • ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

    சிங்கப்பூரில் இன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இதில், 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    அதன்படி சிங்கப்பூரில் இன்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது.

    அதேவேளையில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை உடனே தொடங்கப்படும்.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்தது.

    மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

    • வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவர் ஆவார்.
    • சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் கருத்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    பஸ்லூர் ரஹ்மான் தனது பேஸ்புக் பதிவில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவில் உள்ள 7 வடகிழக்கு மாநிலங்களையும் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகியவற்றை) வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு  பரிந்துரைத்துள்ளார்.

    இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

    இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் நிலையின்மை நீடித்து வரும் சூழலில், முன்னாள் ராணுவ தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி.
    • ராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் 450 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி, இது பாகிஸ்தானால் சோன்மியானி ரேஞ்சில் சோதிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, 'எக்சர்சைஸ் சிந்து' என்ற இராணுவப் பயிற்சியின் கீழ் சோதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பு பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தின் போர் தயார்நிலையை உறுதி செய்வதும், ஏவுகணையின் நவீன தொழில்நுட்ப அமைப்பை சரிபார்ப்பதும் இந்த ஏவுகணை சோதனையின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளது.

    உலகளாவிய ஃபயர்பவர் தரவரிசையின்படி, இராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
    • ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    லண்டன்:

    இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி தனது மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி அடைந்தார். அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம், ஹாரி இங்கிலாந்தில் இருக்கும்போது தானாகவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது. இதை எதிர்த்துதான் ஹாரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த போராட்டத்தை என் தந்தை இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.

    எனது போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது. இந்த பாதுகாப்பு விஷயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால் நான் இனி சண்டையிட விரும்பவில்லை.

    ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக, அவர்கள் பல விஷயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் என் குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இரு நாடுகளும் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதற்கிடையே இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தின.

    இந்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் தனித்தனியாக தொலைபேசியில் பேசினார்.

    இதுதொடர்பாக காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பதிவில், "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் கவலையளிக்கின்றன. நிலைமையைத் தணிக்க இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பதற்றம் அதிகரிப்பு யாருக்கும் உதவாது. இதை தெரிவிக்க ஜெய்சங்கர் மற்றும் இஷாக் தார் ஆகியோருடன் பேசினேன்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், "ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காஜா கல்லாசுடன் பேசினேன். அப்போது பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதித்தேன். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்ததை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய நாடுகளின் தூதா்களை சந்தித்தாா். அப்போது மோதல் ஏற்படுவதற்கான பதற்றத்தைத் தவிா்க்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள் என அவர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • போப் பிரான்சிசின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    • நான் அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

    வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அடுத்த போப் ஆக யாரை வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, நானே அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், போப் தோற்றத்தில் டிரம்ப் இருக்கும் இருக்கும் AI புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    • இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
    • பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் கிராம மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

    பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது. தற்போது இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. இதையடுத்து மருந்து விநியோகத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் 'அவசர' நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில், இந்தியாவின் பதிலடிக்கு பயந்து, எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டில் உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் கிராம மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

    • பிலிப்பைன்சில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் வரிசையாக நின்றன.
    • அந்த வாகனங்கள் மீது ஒரு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் முன்னால் வரிசையில் நின்ற ஒரு கார் மீது மோதியது.

    இந்த சங்கிலித் தொடர் விபத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது 2 பஸ்களுக்கு இடையில் ஒரு மினி வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வேனில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல், நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு காருக்குள் இருந்த தம்பதியும் உடல் நசுங்கி பலியாகினர்.

    காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வலியில் அலறி துடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×