என் மலர்
உலகம்
- ரஷியாவுக்கு வரும் உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என ஜெலன்ஸ்கி தடாலடியாக அறிவித்தார்.
- அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டின் அணுசக்தி விதிகளை புதின் புதுப்பித்தார்.
உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்றும், அது ஏற்படாது என்று நம்புவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
ரஷிய அரசு ஊடக தொலைக்காட்சியில் பேசிய அவர், உக்ரைனில் உள்ள மோதலை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வர ரஷியாவிடம் வலிமையும் வழிமுறைகளும் உள்ளன என்று புதின் கூறினார்.
ரஷிய பிரதேசத்தில் உக்ரேனிய தாக்குதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "அந்த (அணு) ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் அவை தேவைப்படாது என்று நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக மே 8 முதல் மே 10 வரை இரண்டாம் உலகப்போரில் ரஷிய வெற்றி தின அணிவகுப்பை முன்னிட்டு 3 நாள் போர் நிறுத்தத்தை புதின் முன்மொழிந்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு அன்றைய தினம் வரும் உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என தடாலடியாக அறிவித்தார்.
ரஷியா அணு ஆயுதத்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டின் அணுசக்தி விதிகளை புதின் கடந்த நவம்பர் 2024 இல் புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
- இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என உத்தரவு.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதேபோன்று இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்களும் பாகிஸ்தான் துறை முகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது.
இந்திய கொடிகளுடன் வரும் எந்த கப்பல்களையும் பாகிஸ்தான் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என்றும் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறை முகங்களுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் கடல்சார் விவகார அமைச்சகத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் பிரிவு உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.எம்.-21 சாதனங்களுக்குத் தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லை.
- உக்ரைனுக்கு பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்துவிட்டது.
பாகிஸ்தானில் பீரங்கி வெடிமருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, பாகிஸ்தான் நான்கு நாட்களுக்கு மேல் போரைத் தொடரும் நிலையில் இல்லை என்பது THERIYAVNATHULLATHU .
அவர்கள் தங்கள் ஆயுதங்கள் காட்சிக்காக அல்ல என்று வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், உண்மையான நிலைமை இதற்கு முற்றிலும் நேர்மாறாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்குத் தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை.
எம்.109 ஹவிட்ஜர்ஸ் ரக பீரங்கிகளுக்கு வேண்டிய எறிகுண்டுகளும், பி.எம்.-21 சாதனங்களுக்குத் தேவையான ராக்கெட்டுகளும் போதிய அளவில் இல்லாத சூழலில் நிலவுகிறது.
உக்ரைனுக்கு அதிகளவில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விட்டதால், பாகிஸ்தானின் கையிருப்பில் குறைந்த அளவே ஆயுதங்கள் உள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பீரங்கி வெடிமருந்துகளுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதும், காலாவதியான தொழில்நுட்பங்கள் காரணமாக பாகிஸ்தானிய ஆயுத தொழிற்சாலைகள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இயலாமையும் அங்கு பீரங்கி வெடிமருந்துகளின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியாவுடன் நீண்டகாலப் போரை நடத்துவதற்கு பாகிஸ்தானிடம் நிதி மற்றும் இராணுவ வளங்கள் இல்லை என்று முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷிய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில் பேசினார்.
- இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷிய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பேட்டியில் பேசிய அவர், இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க எங்களுக்கு ஆர்வம் இல்லை.
இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம் என்று கூறினார்.
முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசியும் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். எல்லைகளில் 130 ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன.
- கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது.
இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய ஊடக நிறுவனமான ஹயோம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணை தரையிறங்கிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. மேலும் பயணிகள் முனையத்திலிருந்து புகை எழுவதை காட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இந்த வெற்றி அணிவகுப்புக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
- நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரைன் - ரஷியா போர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முடிவின்றி நடைபெற்று வருகிறது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று முதல் முறையாக 1 நாள் மட்டும் தாற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாதம் ரஷியாவில் வெற்றி அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த வெற்றி அணிவகுப்புக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலகத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
எனவே இதனை முன்னிட்டு மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை 72 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். மேலும் உக்ரைன் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷியாவின் போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளார்.
ரஷியாவின் அழைப்பின் பேரில் வரும் 9 ஆம் தேதி ரெட் சதுக்க அணிவகுப்பைக் காண வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷிய பிரதேசத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, அவர்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
இதற்கிடையில், உக்ரைனில் ரஷிய ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் 12 பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் நடந்தன.
இந்த தாக்குதலில் கட்டிடங்கள், பொது உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. உக்ரைன் அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
- இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
ஆறு வயது பாலஸ்தீன- அமெரிக்க சிறுவனை குத்திக் கொன்ற அமெரிக்க முதியவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவின் வசித்து வந்த ஜோசப் என்ற வயது 73 முதியவரின் வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டின் அருகே அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ஜோசப் மீது இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- நியூ மெக்சிகோ ஒயிட்ஸ் நகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 புள்ளிகளாக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.ஆனால்
உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதே போல நியூ மெக்சிகோ ஒயிட்ஸ் நகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
- தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா சிமி பள்ளத்தாக்கில் உள்ள வுட்ராஞ்சல் பகுதியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உயிர் இழந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் விழுந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினார்கள். இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- பிரேசிலில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.
- ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரேசிலியா:
பிரேசிலில் அதிபர் லுலா டா சில்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில் சமூக பாதுகாப்புத் துறை மந்திரியாக உள்ளவர் கார்லோஸ் லூபி.
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் இருந்து சுமார் ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கார்லோஸ் வீட்டில் நுழைந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சொகுசு கார், நகை உள்பட ரூ.1,500 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கார்லோஸ் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன.
இந்நிலையில், கார்லோஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று பாதுகாப்புடன் நடந்தது.
- காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி சிங்கப்பூரில் நேற்று 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் போட்டி நிலவியது. ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87ல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10-ல் வெற்றி பெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- தலையணையிலிருந்து தலையைத் தூக்கக்கூட முடியாத நிலையில் இருந்ததால் நான் உதவினால் மட்டுமே அவளால் எழுந்துகொள்ள முடியும்.
- தலை மொட்டையடிக்கப்பட்டது மற்றும் கழுத்து உடைக்கப்பட்டிருந்தது.
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் கடந்த 2022 முதல் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் ரஷிய சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உக்ரைன் பெண் பத்திரிகையாளரின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் ஓராண்டுக்கு முன்னர், 27 வயதான உக்ரேனிய பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷ்சினா ரஷிய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் செய்தி சேகரித்துகொண்டுந்தபோது கடத்தப்பட்டார். பல மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு, அவரின் சிதைக்கப்பட்ட உடல் ஒரு பையில் சமீபத்தில் உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விக்டோரியா ரோஷ்சினாவின் உடலில் கண்கள், மூளை மற்றும் குரல்வளை ஆகியவை அகற்றப்பட்ட நிலையில் இருந்தன. இது அவர் அனுபவித்த சித்திரவதைக்கான ஆதாரங்களை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இப்போது உலகம் முழுவதும் மனித உரிமைகள் குறித்து சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மே 3, உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில் விக்டோரியா உலகெங்கிலும் அரசு அதிகாரங்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களின் சின்னமாக மாறியுள்ளார்.

விக்டோரியா அடைக்கப்பட்டிருந்த ரஷியாவின் 'பிசாசுகளின் அறை' என்று அழைக்கப்படும் டாகன்ரோக்கில் உள்ள SIZO-2 சிறைச்சாலை, இப்போது சித்திரவதை செய்யும் இடமாக மாறிவிட்டது.
ஒரு காலத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறைச்சாலையாக இருந்த இந்த இடம், இப்போது ரஷியாவால் உக்ரேனிய கைதிகளை சித்திரவதை செய்யும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு கொண்டுவரப்படும் கைதிகள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு அடிக்கப்படுகின்றனர். மின்சார நாற்காலி, தலைகீழாக தொங்கவிடுதல் போன்ற பயங்கரமான சித்திரவதைகள் இங்கு நடப்பதாக முன்னாள் கைதிகள் தெரிவித்தனர். விக்டோரியாவும் இந்த சிறைக்குக் கொண்டுவரப்பட்டார், அங்கு அவர் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு ஆளானார்.
விக்டோரியா முதலில் எனர்கோடரிலும் பின்னர் மெலிடோபோலிலும் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நான்கு மாதங்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிய பிறகு, அவர் SIZO-2 சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் இங்கேயே கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
உக்ரேனிய புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அவரது உடலில் மின்சார அதிர்ச்சி, உடைந்த விலா எலும்புகள், கழுத்து எலும்புகளில் எலும்பு முறிவுகள் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இவை அனைத்தும் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு சித்திரவதை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
சிராய்ப்புகள், இரத்தக்கசிவுகள், உடைந்த விலா எலும்பு மற்றும் மின்சார அதிர்ச்சிக்கான சாத்தியமான சான்றுகள் உள்ளிட்ட சித்திரவதைக்கான வெளிப்படையான அறிகுறிகளை இது காட்டியதாக உக்ரைனிய வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகத்தின் போர்க்குற்றத் துறையின் தலைவர் யூரி பெலூசோவ் தெரிவித்தார்.

விக்டோரியாவுடன் இருந்த சிறைத் தோழர் ஒருவர் கூறுகையில், அவளின் எடை 30 கிலோவாகக் குறைந்தது. தலையணையிலிருந்து தலையைத் தூக்கக்கூட முடியாத நிலையில் இருந்ததால் நான் உதவினால் மட்டுமே அவளால் எழுந்துகொள்ள முடியும். நான் அவளைத் தூக்கி நிறுத்துவேன், அவள் மேல் படுக்கையைப் பிடித்து நிமிர்ந்து நிற்பாள்" என்று கூறினார்.
கடந்த பிப்ரவரியில் 757 உக்ரேனிய உடல்கள் பரிமாற்றத்தின் மூலம் அவரது உடல் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அந்த உடல் அடையாளம் தெரியாத ஆண் என்றும், மாரடைப்பால் இறந்ததாகவும் முத்திரை குத்தப்பட்டிருந்தது.
டிஎன்ஏ சோதனைகளில் அந்த உடல் விக்டோரியா ரோஷ்சினாவின் உடல் என்பது தெரியவந்தது. அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது, தலை மொட்டையடிக்கப்பட்டது மற்றும் கழுத்து உடைக்கப்பட்டிருந்தது.
அவரது முக்கிய உடல் பாகங்கள் அகற்றப்பட்டதால், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் 2022 ஆம் ஆண்டுக்கான 'பத்திரிகைத் துறையில் துணிச்சலுக்கான விருது'- ஐ பெற்றவர் விக்டோரியா ரோஷ்சினா .
அவர் மரியுபோல் மற்றும் உக்ரைனின் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது மரணம் ரஷியாவின் போர்க்குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதினின் "பிசாசுகளின் அறை" பற்றிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த, சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து உக்ரைன் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை நடத்தி வருகிறது.






