search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்கொரியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முககவசம் அணிய தேவையில்லை

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அந்த கொடிய வைரசால் சீனாவுக்கு அடுத்தபடியாக கடுமையான விளைவுகளைச் சந்தித்த நாடு தென் கொரியா.
    சியோல்:

    தென்கொரியாவில் வரும் ஜூலை மாதம் முதல், கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அந்த கொடிய வைரசால் சீனாவுக்கு அடுத்தபடியாக கடுமையான விளைவுகளைச் சந்தித்த நாடு தென் கொரியா. பிப்ரவரி மாத தொடக்கத்தில் சீனாவும் தென் கொரியாவும்தான் வைரஸ் பிடியில் சிக்கியிருந்தன.

    அதிவேகமாக பரவும் வைரஸ் தொற்று, செய்வதறியாது தவிக்கும் அரசு, நெருக்கடியை சமாளிக்க முடியாத மருத்துவ நிறுவனங்கள் என ஆரம்பகட்டத்தில் தென்கொரியா மிக மோசமான சூழலை எதிர்கொண்டது.

    அதேவேளையில் குறுகிய காலத்திலேயே கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் அதற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பு மூலமாக வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக மாறியது தென்கொரியா.

    ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் தென்கொரியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது.

    வைரஸ் பரவலின் வேகம் பலமடங்கு அதிகரித்தது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

    ஆனாலும் கொரோனா வைரசின் முதல் அலை பாதிப்பில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட தென்கொரிய அரசு தீவிரமாக செயல்பட்டு 2-வது அலையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இந்த சூழலில் கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழிக்க கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தென்கொரிய அரசு தொடங்கியது.

    முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 65 முதல் 74 வயதுக்கு உட்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 5 கோடியே 20 லட்சம் பேரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    ஆனால் அங்கு இதுவரை 7.7 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

    எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வரும் ஜூலை மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    தலைநகர் சியோலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அந்த நாட்டு பிரதமர் கிம் பூ கியூம் “வரும் ஜூன் மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் பெரிதளவில் கூடவும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

    நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்” என்றார்.
    Next Story
    ×