search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிரான்சில் கோர விபத்து - மலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

    பிரான்சில் எஸ்.ஏ.எப். நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பாரீஸ்:

    பிரான்சை சேர்ந்த எஸ்.ஏ.எப். என்ற தனியார் விமான நிறுவனம் பேரிடர் காலங்களில் தேடல் மற்றும் மீட்பு பணிகளையும், பிற விமான சேவைகளையும் வழங்கி வருகிறது.

    இந்தநிலையில் உயரமான மலைகளில் மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து பயிற்சிக்காக எஸ்.ஏ.எப். நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பொன்வில்லார்ட் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் ஆல்ப்ஸ் மலையில் சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானி ஹெலிகாப்டரில் இருந்து குதித்தார்.

    அடுத்த சில நொடிகளில் ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஹெலிகாப்டர் மலையில் விழுவதற்கு முன்பு அதில் இருந்து குதித்ததால் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும் நகர முடியாத அளவுக்கு அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த விமானியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் மோசமான வானிலை காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×