search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா 3-வது அலை: மலேசியாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்

    மலேசியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு இருப்பதால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது. இதையடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது.

    இதனால் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதன் பின் வைரசின் பரவலின் 2-வது அலை தென்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பரவல் கட்டுக்குள் வந்தது.

    இந்தநிலையில் மலேசியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு இருக்கிறது. சபா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது.

    இதையடுத்து மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    கோலாலம்பூர், புத்ர ஜெயா, சிலாங்கூர், சபா, கெடா, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், திராங் கானு உள்ளிட்ட மாநிலங்களில் நிபந்தனையுடன் கூடிய கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு டிசம்பர் 6-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறும் போது, ‘கட்டுப்பாடு ஆணைகள் அமலில் இருக்கும் போது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளும், குழந்தை பராமரிப்பு மையங்களும் மூடப்படும்.

    குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்க வீட்டுக்கு இருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார். மலேசியாவில் இதுவரை கொரோனாவுக்கு 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 பேர் பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×