search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓரக்கல்-டிக்டாக்
    X
    ஓரக்கல்-டிக்டாக்

    டிக்டாக்கின் அமெரிக்க உரிமம் வி்ற்பனைக்கு அல்ல - தொழில்நுட்ப கூட்டாளியாக ஓரக்கல் நிறுவனத்தை இணைந்துக்கொண்ட பைட் டான்ஸ்

    டிக்டாக்கின் அமெரிக்க உரிமம் விற்பனை செய்யப்படவில்லை. மாறாக தொழில்நுட்ப உதவிகளுக்காக ஓரக்கல் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் நிறுவனம் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன்:

    தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. 

    இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. 

    மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்த மோதலின் ஒரு பகுதியாக சீனாவின் பிரபலமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைவிதிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு உத்தரவு பிறப்பித்தார். 

    அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

    டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட்டான்ஸ் 90 நாட்களில் அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட வேண்டும். அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலி செப்டம்பர் 20-ம் தேதி முதல் தங்கள் நாட்டில் செயல்பட தடை விதிக்கப்படும் என டிரம்ப் காலக்கெடு விதித்தார்.

    இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், டுவிட்டர், ஓரக்கல் போன்ற தொழில் நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன. தனது நிறுவனத்தின் அமெரிக்க பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய விருப்பம் இல்லாததால் அந்நிறுவனத்தை போட்டி பட்டியலில் இருந்து பைட் டான்ஸ் நிறுவனம் நீக்கியது.

    இதையடுத்து, அமெரிக்காவின் மற்றொருமொரு தொழில்நுட்ப நிறுவனமும், இந்த போட்டியில் பங்கேற்றதுமான ஓரக்கல் எனப்படும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பைட் டான்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிறுவனமுடனான ஒப்பந்தத்தில் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமம் ஓரக்கல் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்படவில்லை. மாறாக டிக்டாக் நிறுவனத்தின் தொழில்நுட்ப கூட்டாளியாக ஓரக்கல் நிறுவனத்தை இணைத்துக்கொள்ள பைட் டான்ஸ் நிறுவனம சம்மதம் தெரிவித்துள்ளது.

    தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளுக்காக மட்டுமே ஓரக்கல் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் நிறுவனம் கூட்டணி வைத்துள்ளதாகவும், டிக்டாக்கின் அமெரிக்க உரிமம் தொடர்ந்து சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமே நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்திற்கு தொழில்நுட்ப கூட்டாளியாக ஓரக்கல் நிறுவனத்தை பைட் டான்ஸ் நிறுவனம் தேர்ந்தெத்துள்ளது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் பைட் டான்சின் இந்த தொழில்நுட்ப கூட்டாளி ரீதியிலான முடிவுக்கு அமெரிக்க அரசு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்படும் பட்சத்தில் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமம் தொடர்ந்து பைட் டான்ஸ் நிறுவனத்திடமே நீடிக்கும். ஆனால், தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் ஓரக்கல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவேளை இந்த கூட்டணி நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் டிக்டாக்கின் அமெரிக்க உரிமம் முழுமையாக ஓரக்கல் நிறுவனத்திடமே விற்பனை செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவின் டிக்டாக் உரிமம் தொடர்பாக பைட் டான்ஸ் - ஓரக்கல் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி மற்றும் அது தொடர்பான ஒப்பந்தகள் குறித்து அமெரிக்க அரசு அடுத்த வாரம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×