search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா
    X
    பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா

    பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க மறுத்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

    சவுதி வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வாவை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ரியாத்;

    பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்த நாடு சவுதி அரேபியா. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு நீடித்து வந்தது. சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகித்து வருகிறது.

    இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். 

    பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்த சலுகையில் 3 பில்லியன் டாலர்கள் கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் சவுதி ஒப்புதல் அளித்தது.

    இந்த சலுகை மூலம் சவுதியில் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றிருந்தது.

    இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து வருகிறது.

    மேலும், சவுதி தலைமையிலான அந்த கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார். 

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய குரேஷி,’காஷ்மீர் விவகாரத்தில்
    நீங்கள் (சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு) இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன். 

    இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என நான் மீண்டும் மரியாதையுடன் கூறுகிறேன்’ என்றார்.

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியின் இந்த கருத்து சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலும், ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலும் இருந்தது.

    சவுதி இளவரசர் சல்மான் - இந்திய பிரதமர் மோடி

    பாகிஸ்தான் மந்திரியின் கருத்தால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியது

    இதன் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது.
    இதன் மூலம் 3 பில்லியன் டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடனுதவியும், 3.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    2018 ஆம் ஆண்டு அறிவிப்பின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகையை உடனடியாக திரும்பித்தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. 

    இதையடுத்து, சீனாவின் உதவியுடன் சவுதி அரேபியாவின் கடனை பாகிஸ்தான் அடைத்தது.

    இந்த அதிரடி நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு முறிவடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது. சவுதி வழங்கியவந்த கச்சா எண்ணெய் மற்றும் நிதி கடனுதவி நிறுத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தான் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்திக்க உள்ளது.

    இதற்கிடையில், ஷா குரேஷியின் கருத்து தொடர்பாக மன்னிப்பு கோரவும், ரத்து செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் நிதியை மீண்டும் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் கடந்த திங்கள் கிழமை சவுதி அரேபியா வந்தடைந்தனர்.

    இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அரசு சார்பில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து தங்கள் நிலைபாடு தொடர்பாக மன்னிப்பு கேட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கான முயற்சிகளும் பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா, அவருடன் வந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    இதனால், சவுதி நாட்டின் பாதுகாப்புத்துறை துணை மந்திரியான இளவரசர் காலித் பின் சல்மான் பின் அப்துல்லாஸை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நடத்தினார்.

    பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் மறுத்துவிட்டதால் இம்ரான்கான் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. மேலும், சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின் இந்த முடிவு இந்தியாவுடனான சவுதி அரசின் நட்பை மேலும் அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





    Next Story
    ×