search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார நிறுவனம்
    X
    உலக சுகாதார நிறுவனம்

    கொரோனா தொற்று தீவிர பரவலை எட்டியுள்ளது- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
    ஜெனீவா:

    உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது.

    எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.

    உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.

    நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும்.

    உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.

    அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

    நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன.

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும்.

    கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது.

    ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×