search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன்- டிரம்ப் நம்பிக்கை

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. இந்த பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவுள்ளது. வருகிற நவம்பர் 3-ம் தேதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது.

    இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    கொரோனோ வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும் தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் அமெரிக்க அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

    கொரோனா வைரசை கையாண்ட விதம், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, எதிர்கட்சி ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த தேர்தலில் ஆளும் கட்சியின் பலம் குறையலாம் என கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன.

    இந்த நிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:

    இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். நாங்கள் சிறப்பாக வேலை செய்து உள்ளோம். அது நல்ல பலன் தரும். தேர்தல் தினத்தில் நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு எண்களை (வாக்குகள்) பார்க்கப் போகிறீர்கள். 3-வது காலாண்டு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. 4-வது காலாண்டு சிறப்பாக இருக்கும். அதே போல் அடுத்த ஆண்டு சிறந்த பொருளாதார ஆண்டுகளில் ஒன்றாக இருக்கப் போகிறது. எனவே நான் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். அங்கு நான் செய்த மிகப்பெரிய வேலையை பார்ப்பீர்கள்.

    வாக்கெடுப்பில் எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த நாடு இதற்கு முன்பு பார்த்திராத வகையில் வாக்கெடுப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்.

    கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒருபோதும் நான் நம்புவதில்லை. கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போதும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எனக்கு எதிராக இருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்புகள் பொய்யானவை என்பதை நிரூபித்தன.

    இந்த முறையும் அப்படியே நடக்கும். கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்யாக்கப்படும். நான் மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆவேன். அமெரிக்காவின் பொருளாதாரத்தை பலப்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஜனாதிபதி டிரம்பிடம், சீன அதிபர் ஜின்பிங்கை மீண்டும் சந்தித்துப் பேசுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என டிரம்ப் பதிலளித்தார்.

    மேலும் கொரோனா வைரஸ் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க தவறிய சீனாவின் இயலாமை குறித்து அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    இதுபற்றி அவர் பேசுகையில் “வைரசை மறைத்து அதை உலகுக்கு கட்டவிழ்த்து விட்டதற்கு சீனாவை நாங்கள் முழுமையாக பொறுப்பாக்குகிறோம். அதைத் தடுத்து இருக்கலாம். அவை நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். இந்த பிரச்சினையில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக மாறிவிட்டது” எனக் கூறினார்.
    Next Story
    ×