search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா தேவையை சமாளிக்க 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு

    கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    கொரோனாவால் எழுந்துள்ள தேவையை சமாளிக்க ஏற்றவகையில், 40 ஆயிரம் டாக்டர்கள், நர்சுகளுக்கு கிரீன் கார்டு வழங்க அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பலன் அடைவார்கள்.

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஏறத்தாழ 13 லட்சத்து 23 ஆயிரம் பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. 78 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றும் உள்ளது.

    இந்தநிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கும் தேவையை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளை சேர்ந்த 40 ஆயிரம் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்து பணியாற்ற ஏதுவாக ‘கிரீன் கார்டு’ வழங்குவதற்கு அந்த நாட்டின் நாடாளு மன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சுகாதார பராமரிப்பு தொழிலாளர் பின்னடைவு சட்ட மசோதா என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத ‘கிரீன் கார்டு’களை வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்க வகை செய்துள்ளது.

    பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதாவை எம்.பி.க்கள் அப்பி பிங்கெனாவர், பிராட் சினைடர், டாம் கோலே மற்றும் டான் பேகன் ஆகியோர் தாக்கல் செய்தனர். இரு கட்சி செனட் துணை மசோதாவை செனட் சபை எம்.பி.க்கள் டேவிட் பெர்ட்யூ, டிக் டிர்பின், டாட் யெங் மற்றும் கிறிஸ் கூன்ஸ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    ‘கிரீன் கார்டு’ வழங்க வகை செய்யும் இந்த மசோதா குறித்து அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் பேட்ரிஸ் ஏ ஹாரீஸ் கருத்து தெரிவிக்கையில், “இதை கேட்பதில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுகிற டாக்டர்கள் ஆர்வமுடன் உள்ளனர். பயன்படுத்தப்படாத 15 ஆயிரம் கிரீன் கார்டுகள், முன்வரிசையில் நின்று பணியாற்றுகிற டாக்டர்களுக்கு சுமையை குறைக்கும். அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வருகிறார்கள்” என குறிப்பிட்டார்.

    இந்த மசோதா சட்டமாகிறபோது, 15 ஆயிரம் டாக்டர்களுக்கும், 25 ஆயிரம் நர்சுகளுக்கும் ‘கிரீன் கார்டு’கள் வழங்கப்படும் என அறிக்கை ஒன்று கூறுகிறது.

    இந்த சட்டத்தின் மூலம், அமெரிக்காவில் ‘எச்-1பி விசா’ அல்லது ‘ஜே-2 விசா’க்களில் பணியாற்றி வருகிற இந்திய நர்சுகளும், டாக்டர்களும் பலன் அடைய முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×