search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரண தண்டனை
    X
    மரண தண்டனை

    சவுதி அரேபியாவில் சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை ரத்தாகிறது

    சவுதி அரேபியாவில் இனி சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் கொடூர குற்றங்கள் செய்யும் சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. இனி சிறுவர்களாக இருக்கும்போது குற்றங்களைச் செய்தவர்களுக்கு அரசு மரண தண்டனை விதிக்காது என்று அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    கசையடி தண்டனை முறை ரத்து செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு, மன்னரின் அரசாணையை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    சிறார் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கு பதிலாக அதிகபட்சம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்து சிறார் ஜெயிலில் அடைக்க அரசு உத்தரவிட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைய தலைவர் அவாட் அலவாட் தெரிவித்தார். 

    மேலும் இந்த உத்தரவானது ஒரு நவீன தண்டனைச் சட்டத்தை நிறுவுவதற்கு உதவும் என்றும் அலவாட் கூறினார். இந்த முடிவு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

    உலகின் மிக மோசமான மனித உரிமைகள் உள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

    சர்வதேச பொது மன்னிப்பு சபை வெளியிட்ட தகவலின்படி, சவுதியில் 2019 ஆம் ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், ஒருவர் சிறுவனாக இருந்தபோது செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்றவர் என மனித உரிமை ஆணையம் கூறி உள்ளது.
    Next Story
    ×