search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையா வழக்கு தள்ளுபடி

    லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை இங்கிலாந்து ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச்செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை இங்கிலாந்து ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.

    ‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (வயது 64).

    இவர் இந்தியாவில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் முறையாக திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.

    இதற்காக விஜய் மல்லையா மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் இந்திய கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளன. ஆனால் இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பதற்கு அவர் இந்தியா வர மறுத்து விட்டார்.

    இதையடுத்து அவரை சட்டப்படி இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    ஆனால் இதற்கு எதிராக விஜய் மல்லையா, லண்டனில் உள்ள இங்கிலாந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஸ்டீபன் இர்வின், எலிசபெத் லாயிங் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது.

    விசாரணை முடிந்த நிலையில் விஜய் மல்லையாவின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் இருவரும் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-

    இந்த வழக்கை பொறுத்தமட்டில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு, இந்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் கூறிய காரணங்களைவிட, மூத்த மாவட்ட நீதிபதி பரந்த அளவில் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக கூறியதை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். இந்தியாவின் குற்றச்சாட்டுகளுடன் 7 அடிப்படை அம்சங்கள் ஒத்துப்போவதை நாங்கள் பார்க்கிறோம்.

    எனவே நாடு கடத்தலுக்கு எதிரான விஜய் மல்லையாவின் வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா, இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும்.

    அதற்கு ஐகோர்ட்டு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

    விஜய் மல்லையா அப்படி மேல்முறையீடு செய்யாவிட்டால், இந்தியா, இங்கிலாந்து நாடுகள் இடையேயான கைதிகள் ஒப்படைப்பு சட்டத்தின்கீழ், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தீர்ப்பை சி.பி.ஐ. வரவேற்றுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர். கே.கவுர் நேற்று கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தீர்ப்பு சி.பி.ஐ.யின் கடினமான, துல்லியமான விசாரணையை உறுதிப்படுத்துகிறது. கோர்ட்டு செயல்முறையில் இருந்து தப்பிப்பதற்காக, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இது குறிப்பிடத்தகுந்த ஒரு சாதனை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×