search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாண்ட்விச் சாப்பிட்டவரை போலீஸ் விசாரித்த காட்சி
    X
    சாண்ட்விச் சாப்பிட்டவரை போலீஸ் விசாரித்த காட்சி

    ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

    அமெரிக்காவில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவரை போலீஸ் ஒருவர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    கலிபோர்னியா:

    கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் விரிகுடா பகுதி விரைவு ரெயில் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள காண்ட்ரா கோஸ்டா நகர ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் ஸ்டீவ் பாஸ்டர் என்பவர் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது காலை உணவாக பிளாட்பாரத்தில் வைத்து சாண்ட்விச் சாப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்தார். ‘ரெயில் நிலையங்களில் உணவுப்பொருட்கள் சாப்பிடுவது கலிபோர்னியா மாநில விதிமுறைகளுக்கு எதிரானது. விதிமுறையை மீறிய உங்களை காவல் நிலையம் கொண்டு செல்கிறேன்’ என கூறினார்.

    ரெயில் நிலையத்தில் அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் குற்றம் சாட்டுவதாக ஸ்டீவ் பாஸ்டர் குறிப்பிட்டார். ஆனால் அந்த போலீஸ்காரரோ, காவல் நிலையம் கொண்டு செல்வதாக அவரை பிடித்து இழுத்தார். இதை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    பொதுமக்களில் ஒருவர், ரெயில் நிலைய பிளாட்பாரங்கள் அருகில் உணவுப்பொருட்கள் விற்கும் கடை ஏன் உள்ளது? இங்கு உணவு உண்பது சட்டவிரோதமானது என்பதற்கான எந்த அறிவிப்புகளும் இல்லையே? என கேள்வி எழுப்பினார். அறிவிப்புகள் உள்ளன என மற்றொரு காவல்துறை அதிகாரி இன்னொரு வீடியோவில் தெரிவித்தார்.

    இதையடுத்து 3 காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஸ்டீவ் பாஸ்டரை கைவிலங்கிட்டு தனி அறைக்கு அழைத்துச்சென்றனர்.

    இது குறித்து ரெயில்வே போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் ‘கலிபோர்னியா விதிகளின் படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவுப்பொருட்கள் உண்பது சட்ட விரோதமானது. பாஸ்டர் கைது செய்யப்படவில்லை. விதிமுறைகள் மீறியதற்காக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னைப்பற்றிய விவரங்களை போலீசாரிடம் கூற மறுத்ததால் சட்டபூர்வமாக கைவிலங்கிடப்பட்டார்’ என கூறினார்.
    Next Story
    ×