search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுள் சிறை
    X
    ஆயுள் சிறை

    பாகிஸ்தானில் கொலை வழக்கில் சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் சிறை

    பாகிஸ்தானில் கொலை வழக்கில் சினிமா இயக்குனர் மன்சூர் முஜாகித் மற்றும் அவரது தோழி அனாப் ஹமீத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    கராச்சி:

    பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் பைசல் நபி என்பவர் 2014-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

    கராச்சியில் சினிமா இயக்குனரான மன்சூர் முஜாகித்தின் தோழி அனாப் ஹமீத் என்பவருடைய வீட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் மன்சூர் முஜாகித், பைசல் நபி, மசூமா ஜைனப் அபிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விருந்தின்போது, பைசல் நபி, மன்சூர் முஜாகித், அனாப் ஹமீத் ஆகிய 3 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பைசல் நபியை மன்சூர் முஜாகித்தும், அனாப் ஹமீத்தும் சேர்ந்து சுட்டுக்கொன்று விட்டனர்.

    பின்னர் அவர்கள் இருவரும், மசூமா ஜேனப் அபிதி துணையுடன் கொலை செய்யப்பட்ட பைசல் நபி உடலை அப்புறப்படுத்தி எரித்து விட்டனர்.

    இந்த வழக்கில் சிக்கியது தெரிந்த உடன் மசூமா ஜேனப் அபிதி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து சினிமா இயக்குனர் மன்சூர் முஜாகித் மற்றும் அவரது தோழி அனாப் ஹமீத் மீது கராச்சி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கராச்சி செசன்ஸ் நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட பைசல் நபி வாரிசுதாரர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×