search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    ஜனநாயக கட்சியினரை சாடிய டிரம்ப் - ‘‘பதவி நீக்க நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது’’

    ஜனநாயக கட்சியினர் தன்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வா‌ஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்துகிறது. இதில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்க்கப்படும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உக்ரைனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் டிரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை) ஜனநாயக கட்சி தொடங்கி உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் டிரம்ப் ஜனநாயக கட்சியினரின் இந்த முயற்சி வேடிக்கையானது என்றும் வரலாற்று ஊழல் என்றும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஜனநாயக கட்சியினர் தன்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் நான் மேலும் மேலும் கற்றுக் கொள்ளும்போது, இது பதவி நீக்கும் முயற்சியல்ல ஆட்சியை கவிழ்க்க முயலும் சதி என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் நோக்கம் கொண்டது. அது மட்டும் இன்றி அவர்களின் வாக்கு, சுதந்திரங்கள், மதம், ராணுவம், எல்லைச் சுவர் மற்றும் அமெரிக்காவின் குடிமகனாக இருக்க கடவுள் கொடுத்த உரிமைகள் ஆகியவற்றையும் பறிப்பதற்கான முயற்சி இது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×