search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்: தீர்ப்பு மீது கடும் விமர்சனம்
    X

    ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்: தீர்ப்பு மீது கடும் விமர்சனம்

    பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவியை இழந்ததோடு விசாரணையை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

    மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு கோர்ட்டான தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள 3 வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.

    தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் இன்று ஆஜராகி இருந்த நிலையில், அவர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நவாஸ் ஷெரீப், “இந்த தீர்ப்பு பாகிஸ்தான் வரலாற்றில் கருப்பு தினமாகும். இந்த தீர்ப்பு பழிவாங்கும் வகையிலும் வன்மத்தின் அடிப்படையிலும் அளிக்கப்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

    நவாஸ் ஷெரீப் நீதிமன்றம் வருகை தந்ததையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 
    Next Story
    ×