search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை மியான்மர் உடனடியாக நிறுத்தவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர்
    X

    ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை மியான்மர் உடனடியாக நிறுத்தவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர்

    ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது மியான்மர் அரசு நடத்திவரும் தாக்குதல்களை உடனே நிறுத்தவேண்டும் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
    நியூயார்க்:

    மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வங்காளதேசத்திற்கும், இந்தியாவிற்கும் தப்பியோடி உள்ளனர். இதற்கு பல தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமைச்செயலகத்தில் மியான்மர் பிரச்சனை குறித்து பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை மியான்மர் அரசு உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, வன்முறைக்கு முடிவுகட்டவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மியான்மர் அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    நெருக்கடியின் மூலகாரணங்களைக் வேரறுக்க ஒரு பயனுள்ள செயல்திட்டத்தை கையாளுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராக்கின் மாநில முஸ்லிம்களுக்கு நிரந்தர அல்லது தற்காலிக குடியுரிமை அளித்து, அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் உரிமைகள் கொடுத்து ஒரு சாதாரண வாழ்க்கையையாவது வாழ வழிவகுக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக நிலவிவந்த பிரச்சனை இப்பொழுது மியான்மரின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இப்பகுதியை சீர்குலைத்துவிட்டது.  சுமார் 3 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் வங்காளதேசத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இது அப்பகுதியில் ஏற்பட்ட பேரழிவு போன்றதாகும்.

    பல மக்கள் தற்காலிக குடியேற்றங்களில் அல்லது தங்களுக்குத் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ளும் மக்கள் குழுக்களுடன் தங்கி இருக்கிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வங்காளதேசத்திற்கு வருகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய வேண்டும் என அனைத்து நாடுகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க முடிவெடுத்துள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை வரவேற்கிறேன்.

    ராக்கின் மாகாணத்தில் அரக்கன் ரோஹிங்கியா பாதுகாப்பு ராணுவம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளேன். ஆனால் பொதுமக்கள் மீதான ராணுவத்தினரின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.நா. முகவர் மற்றும் சர்வதேச அரசு சாரா அமைப்புக்களின் உதவியின் நடவடிக்கைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×