என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை பைக்குகள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, அரசு பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

    கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாகனங்கள் எந்த வழியாக சென்று வாகன நிறுத்தங்களை அடையாளம் என தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் முடிந்த அளவு அரசு பஸ்களில் திருப்பதி மலைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்ரோவுடன் இணைந்து மேக் எ கால் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 300 போலீசார் வரைய வைக்கப்பட்டுள்ளனர்.

    அவசர உதவி தேவைப்படும் பக்தர்கள் போலீசாரையோ அல்லது தேவஸ்தான அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளலாம்.

    முடியாத பட்சத்தில் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு

    ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.

    • வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது.
    • உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வேளாண் வணிகத் திருவிழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.

    * தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது.

    * வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது.

    * விவசாயிகளுக்கு வேளாண் வணிக வாய்ப்புகளை தெரிந்து கொள்ளும் தளமாக உள்ளது.

    * விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.

    * வேளாண் அதிகரிப்பதுடன் உழவர்களின் வாழ்வும் உயர வேண்டும்.

    * வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி அறிவித்தது தி.மு.க. அரசு.

    * உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும்.
    • இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சட்ட பேரவை தலைவராக சி.பா. ஆதித்தனார் சிறப்பாக பணியாற்றினார்.

    அவர் அமர்ந்த நாற்காலியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்னை அமர வைத்தார் . இதனை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

    தினத்தந்தி பத்திரிகையை நிறுவி அதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தமிழை பரப்பியவர் என்றார். பின்னர் அவரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மறைந்த தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும். சிலருக்கு ஜென்ம சனி இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த சனியின் மொத்த உருவமாக சீமான் இருக்கிறார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.

    அண்ணா, எம்.ஜி.ஆர்.பற்றி சீமான் தெரிவித்த கருத்து குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மறைந்த தலைவர்கள் பற்றி இது போன்று பேசுவது ஏற்புடையது அல்ல. கண்டிக்கத்தக்கது என்றார்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் கூறும்போது, கட்சித் தலைவர்களை சீமான் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல. அவரது கட்சிக்கும் நல்லது கிடையாது.

    சீமான் தனது பேச்சையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அவரையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மறைந்த தலைவர்களை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.

    இந்நிலையில், இந்த கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    .

    • கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFOல் பதிவு செய்துள்ளனர்.
    • இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னோடி கொள்கைகள் மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக மத்திய அரசின் EPFO தரவுகள் வெளியாகியுள்ளது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு சராசரியாக 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    2021–22 முதல் 2024–25 வரை, மாநிலம் 52 லட்சத்திற்கும் அதிகமான நிகர ஊதிய உறுப்பினர்கள் EPFOல் பதிவு செய்துள்ளனர். இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    இதற்கு முந்தைய ஆட்சியில் 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தை விட பின்தங்கியிருந்தது -

    2022-23 ஆம் ஆண்டில் 14 லட்சத்திற்கும் அதிகமான EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து ஆண்டுக்கு 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

    2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பது உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கூறியதை விட 20% அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

    • ரசியல் தலைவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும், தொழில்த்துறை தலைவர்களையும் சந்திக்கிறார்.
    • அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார்

    மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ராகுல் காந்தி தென்னமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

    4 நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணத்தில் அரசியல் தலைவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும், தொழில்த்துறை தலைவர்களையும் சந்தித்து உரையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

    ராகுல் பயணிக்கும் 4 நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும் அவரின் அவற்றுள் பிரேசில், கொலம்பியா நாடுகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

    அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார் என்றும் மாணவர்கள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
    • கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்.

    நடிகர் தனுஷ் நடித்து இயக்கி உள்ள 'இட்லி கடை' திரைப்படம் வருகிற 1-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் தனுசுடன், நித்யாமேனன், ராஜ்கிரண், அருண் விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தனது வாழ்நாளில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து எடுத்ததாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் தெரிவித்திருந்தார். மேலும் அப்போது ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

    விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று காலை பிரத்தியேகமான கேரவன் மூலம் நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா, மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் தனது குலதெய்வ கோவிலான கருப்பசாமியை வழிபட வந்தார்.



    கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு தனது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதிகாலை நேரத்தில் பாதுகாவலர்களுடன் கேரவனில் வந்து வழிபாடு செய்த தனுஷ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அவரது வருகை குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அவர்களுக்கு கையசைத்தபடியே தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

    • வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.
    • போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.

    சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தியா ஒருபோதும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை மறக்க முடியாது.

    * வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.

    * வேளாண் துறையில் நவீன கண்டுபிடிப்புகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் நிதி அறிவித்து ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளேன்.

    * மண்ணுயிர் காத்து பல்லுயிர் காக்கும் எங்களின் முயற்சிக்கு நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன்.

    * மத்திய அரசு 2070-க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் 2050-க்குள் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    * வேளாண் பல்கலை. மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

    * போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.

    * வேளாண்மையையும் உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
    • வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன.

    பெட்ரோல், டீசல் கார்கள் பழைய டிரெண்ட் ஆகி விட்டன. ஆட்டோமொபைல் துறையில் இப்போதைக்கு, எலெக்ட்ரிக் கார்களும், சிஎன்ஜி கார்களும் தான் அதிகமாக விற்பனையாகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விலை குறைப்பு நடவடிக்கைகளில், கார் வாங்க திட்டமிடுபவர்கள், பெட்ரோல்-டீசல் மாடல்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.

    கார்களில் எலெக்ட்ரிக் சிறந்ததா, இல்லை சிஎன்ஜி சிறந்ததா? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்...

    சிஎன்ஜி

    'கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்' என்பதன் சுருக்கம்தான் சிஎன்ஜி இயல்பான கார்களில், கூடுதலாக கியாஸ் சிலிண்டர்களை பொருத்தி, சிஎன்ஜி கியாஸ் நிரப்பி காரை இயக்குவார்கள்.

    எலெக்ட்ரிக்

    மின்சாரத்தில் இயங்கும் கார் இது. வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

    இயக்கத்திறன்

    எலெக்ட்ரிக்-சிஎன்ஜி-யை விட பெட்ரோல், டீசல் என்ஜின் கார்களை விடவும் எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்திறன் அசாத்தியமானது. பெட்ரோல் கார்களை விடவும் மின்னல் வேக இயக்கத்திறனை எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன.

    சிஎன்ஜி - எலெக்ட்ரிக் கார்களை விட, கொஞ்சம் குறைவான இயக்கத்திறனே சிஎன்ஜி கார்களுக்கு உண்டு. இருப்பினும், நெடுஞ்சாலை, மலைப்பாதைகளில் சூப்பராக இயங்கும்.

    எரிபொருள்

    எலெக்ட்ரிக்:

    எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான மின்சக்தியை வழங்கும் இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர பயன்பாட்டில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் இ-சார்ஜிங் வசதி இருப்பதால், தைரியமாக வாங்கலாம். ஆனால் நெடுஞ்சாலை பயணங்களை மட்டும், கவனமாக திட்டுமிட்டு பயணிக்க வேண்டும்.

    (சார்ஜ் நிரப்ப 30 நிமிடம் தொடங்கி, சில மணி நேரங்கள் ஆகலாம்)

    சிஎன்ஜி:

    சிஎன்ஜி நிரப்பும் ஸ்டேஷன்கள் சென்னையில் நிறைய காணப்படுகிறது. சென்னையை தாண்டினால் நெடுஞ்சாலைகளிலும் நிறைந்திருக்கிறது. அப்படியே, சிஎன்ஜி கியாஸ் தீர்ந்து விட்டாலும் கவலையில்லை, பெட்ரோல் வசதியை தேர்ந்தெடுத்து, பெட்ரோலில் பயணிக்கலாம். இருவிதமான வாய்ப்புகளை, சிஎன்ஜி கார் வழங்குகிறது.

    (பெட்ரோல் நிரப்புவதுபோல சில நிமிடங்களில், சுலபமாக கியாஸ் நிரப்பலாம்)

    சிக்கனம்

    வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிஎன்ஜி-யை விட குறைவான செலவிலேயே இயங்குகிறது. எலெக்ட்ரிக் காரின் முழு சார்ஜிற்கும் சுமார் 200 ரூபாய் செலவாகலாம். ஆனால் அதன் மூலம் 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம். அதுவே, சிஎன்ஜி-யில் 200 ரூபாயில் 60 கிலோமீட்டர்கள் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.

    விலை

    கார்களின் விலை நிலவரப்படி, எலெக்ட்ரிக் கார்களை விட சிஎன்ஜி கார்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலையில் கூட சிஎன்ஜி கார்களை வாங்கலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சத்திலேயே சிஎன்ஜி சாதனத்துடன் அசத்தலான செடான் காரை வாங்கிவிட முடியும். அதுவே எலெக்ட்ரிக் ரகமாக இருந்தால், செடான் மாடலை வாங்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். அதனால் விலை நிலவரப்படி, பட்ஜெட் பிரியர்களின் தேர்வாக இருப்பது, சிஎன்ஜி தான்.

    • மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர், எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர்.

    * மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    * நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர்.

    * தான் பெற்ற அறிவை மக்களின் பசி போக்க பயன்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்.

    இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்ற வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    ×