என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. இப்ராகிம் ஜட்ரன் 38 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் நவ்சம் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 24 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடியது.4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த நிலையில் ஜேகர் அலி 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷமிம் ஹொசைன் 33 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நூருல் ஹசன் போராடி 31 ரன் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
- மான்செஸ்டரில் யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
- இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது நேற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டம் மீது காரை மோதி, அதன்பின் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
இந்தக் கொடூரமான தாக்குதல் பயங்கரவாதத்தின் தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் கடுமையாக நினைவூட்டுகிறது.
சர்வதேச அகிம்சை தினத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க உலக சமூகம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மான்செஸ்டர் நகர மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணமான சிடொர்ஜொ நகரில் அமைந்துள்ளது அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி.
இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வரும் நிலையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், மாணவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள்ள சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 50க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
- ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னோடியாக இருந்தது அதிமுக.
- அதிகாரத்தை அனுபவித்துவிட்டு இன்று கூக்குரலிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பாலக்கோடு, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
முதலில் பேருந்து நிலையம் அருகே ஓசூர் மெயின் ரோட்டில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் வெள்ளத்திற்கிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சியாளர்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த கட்சி அந்த கட்சி என்று பிரித்துப்பாராமல் அனைவரும் மக்கள் என்பதை உணர்ந்து, இனியாவது அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே கச்சத்தீவைப் பற்றி பேச உங்களுக்குத் தகுதியில்லை. கட்சத் தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி. அப்போதுதான் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலரவைப்பதற்கும் பயன்படுத்திய கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக. இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை. நாடகம் ஆடாதீர்கள்.
ஆனால் அம்மா அவர்கள் மீன்வர்களின் நலன் கருதி, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னோடியாக இருந்தது அதிமுக.
16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த கட்சி திமுக. இதுகுறித்து பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. அதிகாரத்தை அனுபவித்துவிட்டு இன்று கூக்குரலிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
கச்சத்தீவை மீட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க நீங்கள் ஏன்
முயற்சிக்கவில்லை? ஸ்டாலின் எந்த நோக்கத்தில் பேசுகிறார், அடுத்தாண்டு தேர்தல் வருகிறது மீனவர்கள் வாக்கு தேவைப்படுகிறது, அதனால் நாடகத்தை அரங்கேற்றுகிறார். ஏதோ அதிமுகவுக்கு மீனவர்கள் மீது அக்கறை இல்லாததுபோல பேசுகிறார். உண்மையிலே உங்களுக்கு அக்கறை இருந்தால், அப்போதேமீட்டிருக்கலாம். அப்போதெல்லாம் தவறவிட்டுவிட்டு எங்கள் மீது இப்போது குற்றம்
சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்..?
நீங்கள் எப்போது தவறான கருத்தை வெளியிட்டாலும் அதற்கு பதிலடி
கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. மக்களுக்காக இருக்கும் கட்சி அதிமுக, கருணாநிதி குடும்பத்துக்கு இருக்கும் கட்சி திமுக. மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் கட்சியாகத்தான் அதிமுக இதுவரை இருந்துவருகிறது, இனியும் இருக்கும்.
அண்மையில் கரூரில் நடந்த சம்பவத்தில் 41 உயிர்களை இழந்தோம்.
முதல்வர் இரவோடு இரவாக சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், அஞ்சலி செலுத்தினீர்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் ஆட்சியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பருகி 68 பேர் இறந்தார்கள், அப்போது ஏன் போகவில்லை, அவர்களை ஏன் சந்திக்கவில்லை.?. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின மக்கள், ஏழை மக்கள். அவர்களுக்கு ஆறுதல் என் சொல்லவில்லை..?
இப்போது ஏன் கரூருக்கு ஓடோடிச் சென்றார் என்றால் அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடத்தான் சென்றுள்ளார். உண்மையிலே மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக செல்லவில்லை, எல்லா விஷயத்திலும் அரசியல் கணக்கு பார்க்கும் கட்சி திமுக.
எடப்பாடி பழனிசாமிக்கு கொள்கை இல்லை என்கிறார். கொள்கை பற்றி
பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? இண்டியா கூட்டணி என்று பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் இணைந்து அமைப்பை ஏற்படுத்தினர். திமுகவும் இடம்பெற்றுள்ளது. இதில், என்ன வேடிக்கை நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றபோது ஒன்றாக சேர்ந்து பாஜகவை எதிர்க்குமாம், சட்டமன்றத் தேர்தல் வந்தால் பிரியுமாம்.
டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கிறது கெஜ்ரிவால் கட்சி, மேற்குவங்கத்தில் காங்கிரஸை எதிர்க்கிறது மம்தா கட்சி, கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் எதிரிகள். இப்படி மாநிலத்தில் எதிர் எதிராகவும், எம்பி தேர்தலில் ஒன்றாகவும் இருக்கும் நீங்களா கொள்கையுடைய கட்சி? எந்த தேர்தலாக இருந்தாலும். எல்லா தேர்தலிலும் உடன்பட்டு, ஒரே
கொள்கையுடன் இருந்தால்தான் கொள்கை கட்சி என்று பொருள்.
ஆனால் உங்களூக்கு அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்தியில் அதிகாரத்துக்கு வருவதற்கு எந்த வேஷமும் போடத் தயங்காதவர் திமுக தலைவர். அந்த அடிப்படையில்தான் இண்டியா கூட்டணி அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் முரன்பட்ட கருத்துடைய நீங்கள் பேசலாமா? ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கையுண்டு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை என்பது
நிலையானது அது அதிமுகவிடம் இருக்கிறது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த அமைக்கப்படுவது. அதைப்போலதான் திமுக பல தேர்தலில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள், நீங்கள் கூட்டணி அமைத்தால் நல்லது, அதிமுக அமைத்தால் தவறா? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?
1999, 2001 தேர்தல்களில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்துப்
போட்டியிட்டது. மத்தியில் அமைச்சரவையிலும் பங்கு வகித்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி, என்ன நியாயம் இது?
நீங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றால் யாருடன்
வேண்டுமானாலும் கூட்டணி வைப்பீர்கள், யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பீர்கள், அதிமுக அப்படியல்ல. தீயசக்தி திமுகவை வீழ்த்துவதற்கு கூட்டணி வைத்திருக்கிறோம். ஊழல் நிறைந்த திமுகவை நீக்கவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடைய அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது என்றே
புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக யாரோடு கூட்டணி வைத்திருக்கிறது, காங்கிரஸ் கட்சியுடன். அந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருக்கும்போது எமர்ஜென்சி கொண்டுவந்தது, மிசா கொண்டுவந்தது. அப்போது திமுக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். ஸ்டாலினும் மிசாவில் சிறையில் இருந்தார், உங்களை சிறையில் அடைத்த கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள். அதிமுக அப்படியல்ல, திமுகவை அகற்றவே கூட்டணி வைத்தோம்.
திமுக ஆட்சியில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடக்கிறது. ஆந்திராவில் இருந்து வாழைத்தாரை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வரும் லாரியில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். லாரி ஓட்டுநர் சாமி தரிசனம் செய்ய அக்காவையும், அவரது மகளையும் அழைத்துவந்திருப்பதாகச் சொல்கிறார். நம்பத் தயாராக இல்லை என்று காவலர்கள். அந்த 2 பெண்களையும் அழைத்துச் செல்கிறார்கள்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாயின் கண் எதிரே மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 29ம் தேதி நடந்த சம்பவம். இது மன்னிக்க முடியாத சம்பவம். மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த அரசாங்கம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு திறமையற்ற முதல்வர், காவல்துறை அவரிடம் இருக்கிறது, சரியான நிர்வாகம் செய்யவில்லை. இப்படிப்பட்ட அரசு தொடரவேண்டுமா? பயிரை வேலிமேய்கிறது.
அந்த பெண் அழுதுகொண்டிருந்தபோது மக்கள் விசாரித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து அனுப்பிவைத்தனர். மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் சென்று இரண்டு காவலர்களும் கைதாகியுள்ளனர். காவல்துறை என்பது மிக மிக முக்கியமான துறை. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்டது.
இன்றைக்கு திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் காவல்துறை செயல் இழந்து தவறான செயலில் ஈடுபடும் சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்குக் காரணம் போதை பொருள் விற்பனை. கஞ்சா எல்லா இடங்களில் பல வடிவங்களில் விற்பனையாகிறது. கஞ்சாவை தடை
செய்யவேண்டும். ஆனால் பெரும்பாலும் திமுகவினர் துணையோடுதான் கஞ்சா விற்பனை நடக்கிறது, அப்புறம் எப்படி காவல்துறையால கட்டுப்படுத்த முடியும்?
காவல்துறை மானிய கோரிக்கையில் பள்ளி, கல்லூரிக்கு அருகில் 2348 பேர் கஞ்சா விற்றதாக கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் மொத்தமே 148 பேர். மீதமுள்ளவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் எல்லோரும் திமுகவினர். அதனால் காவல்துறை கைது செய்யமுடியவில்லை.
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம். இங்கேயே இப்படிப்பட்ட நிகழ்வு நடக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொடூரமான நிகழ்வு நடக்கிறது.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில், எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம்
தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். ஏழை மக்களை பாதுகாத்தோம். ஆனால், இவர்களுக்கு வீட்டில் இருக்கும் பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. அடுத்து யார் அதிகாரத்துக்கு வருவது என்ற அதிகாரப்போட்டி ஸ்டாலின் குடும்பத்தில் நடக்கிறது. ஒரு முதல்வர் இருந்தாலே தாக்குபிடிக்க முடியாது, தமிழகத்தில் நான்கு அதிகார மையம் இருக்குது, ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின். கருணாநிதி குடும்பத்துக்கு மக்கள் பற்றி கவலையில்லை.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர்.
போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். கொரோனா காலத்தில் அதிமுக அரசு விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ஸ்டாலின் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை அப்போதும் கூட ஆட்சியைப் பராமரிக்க முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் கொரோனா காலம் மக்களை வீட்டிலேயே தங்கவைத்தோம் எவ்வளவு கஷ்டம், ஆட்சியாளர்களுக்குத்தான் தெரியும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அப்போதும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம்.
மக்கள் பாதிக்கப்படும்போது மீட்டெடுத்த அரசு அதிமுக அரசு. கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது.
அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும். நம் பகுதி முழுக்க விவசாயம் நிறைந்த பகுதி, நான் வரும்போது பார்த்தேன் எல்லா வீட்டுக்கு முன்பாகவும் கறவை மாடு கட்டியிருக்கிறது. நானும் விவசாயி, இன்றுவரை விவசாயம் செய்கிறேன். விவசாயியின் உப தொழில் கால்நடை வளர்ப்பு. அதைக் கருத்தில்கொண்டு, கறவை பசு அதிக பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலப்பின பசுக்களை ஆராய்ச்சி மூலம் உருவாக்கி நம்முடைய விவசாயிகளுக்கு கொடுக்க நினைத்தேன்.
ஒரு நாளைக்கு ஒரு பசு 45 லிட்டர் பால் கொடுக்கும். அதற்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை தலைவாசல் கூட்டுரோட்டில் ஆயிரம் கோடியில் ஆயிரத்து ஐம்பது ஏக்கரில் கட்டுவதற்கு முற்பட்டேன், இடையில் கொரோனா வந்தது காலதாமதம் ஆனது. ஆனாலும், கால்நடை மருத்துவக் கல்லூரியை திறந்துவிட்டேன், 90% பணிகள் முடிந்துவிட்டது எஞ்சிய 10% பணிகள் தான் நிலுவையில் இருந்தது, திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் அப்படியே கிடப்பில் போட்டனர்.
நான் தொடர்ச்சியாக வலியுறுத்தியதால் திறந்துவைத்தனர். பின்னர் அப்படியே விட்டுவிட்டனர், விவசாயிகள் விரோத அரசு திமுக அரசு. சாதாரண திட்டமா அது? மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கலப்பின பசுக்களை விலையில்லாமல் கொடுத்து இந்தியாவிலேயே பால் உற்பத்தியில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலை அடைவோம். கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
சிந்து மாடு, கிடாரி கன்று போட்டால் வளர்க்கிறோம், அதே காளை கன்று போட்டால் விற்பனை செய்துவிடுகிறோம். இது என் கவனத்துக்கு வந்தவுடனே விவசாயி என்ன கன்று வேண்டும் என்று விரும்பும் கன்றை அந்த பசு ஈன்றும் அளவுக்கு விஞ்ஞான முறையில் அந்த திட்டத்தை கொண்டுவந்தேன். ஊட்டியில் 50 கோடியில் அப்பணியை துவக்கினேன், பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
கால்நடை பூங்காவில் ஆடு ஆராய்ச்சி நிலையம் இருக்குது, நாம் வளர்க்கின்ற ஆடு ஒரு வருடத்துக்கு 20 கிலோ கிடைக்கும், அதே ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக உருவாக்கப்படும் ஆடு ஒரு வருடம் வளர்த்தால் 40 கிலோ எடை கிடைக்கும் அதையும் நிறுத்தினர். இதேபோல கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, மீன் வளர்ப்பு இதையெல்லாம் அந்த ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டுவந்தேன். அவை எல்லாவற்றையும் முடக்கிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் காலநடைப் பூங்காவில் ஆராய்ச்சி தொடங்கப்படும், கலப்பின பசு, ஆடு, கோழி, பன்றி அனைத்தும் வளர்ப்பதற்கு உங்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்படும், இலவசமாக பசு வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் தான் கிராமப்புற
பொருளாதாரம் மேம்பட விலையில்லா ஆடு, மாடு, கோழி கொடுத்தோம். இத்திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும். இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தன கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் 12 கோடி ரூபாய் கொடுத்தோம், சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம், ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்தோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம், வக்ப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல் தர்கா புனரமைப்பு நிதி வழங்கினோம், இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில்
நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம், டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டது.
அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்துக் கொடுத்தோம், மறைந்த அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கினோம், திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் அமைத்தோம், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலை வாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
மஞ்சு விரட்டு வீர விளையாட்டாக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திருவிழா காலங்களில் மஞ்சு விரட்டு இந்த மாவட்டத்தில் நடைபெற அதிமுக அரசு உதவும். பாலக்கோட்டில் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி கட்டினோம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொடுத்தோம், சுயநிதி பாலிடெக்னிக்கில் 10,500 ரூபாய் கட்டணம் இருந்தது.
சர்க்கரை ஆலையில் செயல்படும் அதனை அரசு கல்லூரியாக மாற்றி 2000 ரூபாய் செலுத்தினால் போதும் என மாற்றினோம். தென்பெண்ணையாற்றின் குறுக்கே இனேக்கல் புதூரில் அணைக்கட்டில் இருந்து கால்வாய் மூலம் தர்மபுரி மாவட்டம் தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவரும் வழியில் அம்மன் ஏரி முதல் நரியன ஏரி வரை 36 ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் நிரப்பும் திட்டத்துக்கு 13.02.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 18-01-2021 அன்று மக்கள் கிராம சபை கூட்டத்தை அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நடத்தினார், அப்போது ஆட்சிக்கு வந்தால் தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவருவோம் என்றார், 53 மாதம் ஓடிப்போச்சு இதுவரை நிறைவேற்றவில்லை இப்படித்தான் மக்களை ஏமாற்றுகிறார். 14 ஏரிகளுக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தையும் திமுக தொடங்கவில்லை. இதுவும் அதிமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
கும்மனூர் கிராமத்தில் வேளாண்மை பட்டயக் கல்லூரி அமைக்க 92 ஏக்கர் நிலம் தேர்வாகி அரசாணை பிறப்பிக்கப்பட்டது, ஆண்டுதோறும் 80 மாணவர்கள் படிக்க அரசாணை வழங்கப்பட்டது. அதை திமுக ரத்து செய்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் திறக்கப்படும்.
இங்கு வந்திருக்கும் அத்தனை பேரும் பத்திரமாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், வாகன ஓட்டிகள் பத்திரமாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித், விராட் இடம் பெறுவார்களா என்பது நாளை தெரிய வரும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இப்போது அவர்கள் ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஆடும் வீரர்களாக உள்ளனர்.
இவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பார்களா என்ற கேள்வி விவாதப் பொருளாக உள்ள நிலையில், இந்த இரண்டு சீனியர் வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தயாராக உள்ளனர். ஆனால், அவர்களை பிசிசிஐ தேர்வுக்குழு, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வு செய்யுமா? என்ற தகவல் நாளை வெளியாக உள்ளது.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அதிகாரப்பூர்வ விளம்பர டீசரை (Official Promotional Teaser) ஒளிபரப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், கோலி மற்றும் ரோகித் சர்மாவின் புகைப்படங்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. இதுவும் அவர்கள் அணியில் இருப்பது உறுதி என்பதற்கான அடையாளம் என்று நம்பப்படுகிறது.

ரோகித் சர்மாவை பொறுத்தவரை மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்றதில் இருந்து, ஒருநாள் அணியின் கேப்டன்சி பொறுப்பில் பெரிய தோல்விகளைச் சந்திக்கவில்லை. அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கத் தேர்வாளர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் அடித்திருந்தார். ரோகித் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு உதவிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.
- இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.
மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இந்த மாதம் 19-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் பேக்கப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சன் கடைசியாக 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
- ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல்.
ஜி.எஸ்.டி., வரி நீக்கம் மற்றும் குறைப்பு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., சார்பில் அரிசி கடை வீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தையும், தமிழையும் மோடி என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெருமளவு விலை குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சனை செய்கிறது என தி.மு.க. அரசு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. ஆனால் வரி பகிர்வு 50 சதவிகிதம் வழங்கப்பட்ட பின்னரும் மத்திய அரசின் பகிர்வில் இருந்து மேலும் 41 சதவீதத்தை வழங்குகிறது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
டாஸ்மாக் நடத்தி குடும்பங்களை சீரழித்து வருகின்றனர். மேலும் 10 ரூபாய் பாலாஜி வாங்கும் 10 ரூபாயையும் சேர்த்துக் கொள்கின்றனர். வரி வசூலிக்கும் முறையை சீரமைத்ததால் 13 சதவீதம் தமிழக வரி வருவாய் உயர்ந்துள்ளது. எத்தனை வரி வருவாய் கொடுத்தாலும் நாம் வாழ்வது குப்பைக்கு மத்தியில் தான். கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதே கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். 200 தொகுதி அல்ல 2 தொகுதி கூட ஜெயிக்க முடியாது. தமிழக மக்கள் உங்கள் வேஷத்தை பார்த்து வருகின்றனர். கரூரில் மக்கள் துயரத்தை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திட்டமிடப்பட்டு கலவரம் செய்ய ஏதோ நடைபெற்று உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. தோட்டத்து விவசாயிகள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலை உள்ளது.
பெண்கள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல். மின் கட்டணம் கட்ட முடியாமல் சிறு நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.
திராவிட மாடல் என்பது மக்கள் நல அரசு அல்ல, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்பதே., பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. உங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சி கிடையாது. அடிமட்ட தொண்டர் கூட மேடைக்கு வர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
- தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி இன்று காலை தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகப் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் பட்டு வேட்டிகள், படுக்கை விரிப் புகள், மற்றும் பருத்தி ஆடைகள், நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தவர் பயன்படுத்தும் ஆடைகள் என விதவிதமான ஆடைகள் கண்காட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம், திருபுவனம், ஆரணி, சேலம், ராசிபுரம், திருப்பூர் என கைத்தறி மற்றும் பட்டுக்கு பெயர் பெற்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் விதவிதமான சேலைகள் பட்டு வேட்டிகள் படுக்கை விரிப்புகள், விரிப் புகள் என விதவித மான அனைத்து வகையான ஆடைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
கைத்தறி நெசவாளர்களால் வடிவமைக்கப்பட்ட பூம்பட்டு புதுமணப்பட்டு மாங்கல்ய பட்டு, பருத்தி நூலால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள், தாய் மார்கள் பயன்படுத்தக்கூடிய தாய்-சேய் பெட்டகம் என்று அழைக்கப்படும் சிறப்பு பை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தாய்-சேய் பெட்டகப்பையில் குழந்தைகளுக்கு தேவையான பால் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவர்களை வைப்பதற்கு தனித்தனியாக உள்பகுதியில் பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் நிறுவனத்தின் மூலமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்கள் அனைத்துக்கும் 30 சதவீதம் முதல் 50 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரிஜினல் பட்டு சேலைகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிஜினல் பட்டுச்சேலைகள் ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் ஆயிரம் ரூபாயில் இருந்தும் சேலைகள் கிடைக்கிறது.
பூம்புகார் நிறுவனம் சார்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரங்கில் ரூ.250-லிருந்து ரூ.12 லட்சம் வரையில் கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருவள்ளுவர் சிலை, கலைஞர் கருணாநிதி சிலை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
ஐம்பொன் லட்சுமி சிலை ஒன்று ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கையில் விளக்குடன் கூடிய ஒரு ஜோடி பாவை விளக்கு ஒன்று ரூ.12 லட்சத்துக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அரியானா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கைத்தறி துணி வகைகளும் கண்காட்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். கண்காட்சியின் முகப்பில் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்த எந்த வகையான சேலைகள் கண்காட்சியில் உள்ளன என்பது பற்றிய தகவல்களும் விரிவாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை, ஜெயங்கொண்டம், மதுரை, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, வேலூர், கோவை, சேலம் ஆகிய ஊர்களில் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் துணி வகைகள் ஆகியவைகள் பற்றி விரிவான விளக்கங்களுடன் கண்காட்சி பலகை வைத்திருப்பதும் பொது மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.
தீபாவளியை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதால் வரும் நாட்களில் மக்கள் அதிக அளவில் கண்காட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களான நாளையும் மறுநாளும் கண்காட்சியை பார்வையிட்டு பெண்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'டீசல்' படத்தின் டீசர் வெளியானது.
டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், டீசல் படத்தின் "ஆருயிரே" பாடல் வெளியானது.
பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் சைபர் குற்றங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
என் மகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாள். சில வீடியோ கேம்களை நீங்கள் எதிர் திசையில் யாருடனும் விளையாடலாம். நீங்கள் தெரியாத ஒருவருடன் விளையாடுகிறீர்கள்.
நீங்கள் விளையாடும்போது, சில சமயங்களில் அங்கிருந்து ஒரு செய்தி வரும்... அப்படி என் மகளுக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
"நீங்கள் ஆணா பெண்ணா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு என் மகள் பெண் என்று பதிலளித்தாள். பின்னர் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், உங்களுடைய நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்ப முடியுமா? என்று இருந்தது. இதனால் பயந்துபோன என் மகள், எல்லாவற்றையும் அணைத்துவிட்டு என் மனைவியிடம் சென்று நடந்தவை குறித்து கூறினார்.
இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் சைபர் குற்றத்தின் ஒரு பகுதி... நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு வாரமும் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில், சைபர் வகுப்பு (Cyber Period) என்று ஒரு வகுப்பு இருக்க வேண்டும். அங்கு குழந்தைகளுக்கு இது குறித்து விளக்க வேண்டும் என்று நான் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் குற்றம் தெருக் குற்றங்களை விடப் பெரிதாகி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தக் குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல், ஜடேஜா, ஜூரல் ஆகியோர் சதம் விளாசினர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ராகுல், கில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் விளாசிய கையோடு கில் (50) ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவரும் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ஜூரல் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு இருவரும் சதம் அடித்து அசத்தினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவுக்கு சில ஓவர்களே இருந்த நிலையில் ஜூரல் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்தது.ஜடேஜா 104 ரன்னுடனும் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






