என் மலர்
தலைப்புச்செய்திகள்
- திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-26 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி இரவு 8.14 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 7.51 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், புன்னைநல்லூர் உள்பட அம்மன் கோவில்களில் அபிஷேகம்
இன்று தேய்பிறை சஷ்டி விரதம். பாபநாசம் சிவபெருமான் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்கார கருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை, ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-இரக்கம்
மிதுனம்-ஊக்கம்
கடகம்-நற்சொல்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-பாராட்டு
துலாம்- வாழ்வு
விருச்சிகம்-நலம்
தனுசு- சாதனை
மகரம்-தனம்
கும்பம்-பயணம்
மீனம்-கடமை
- டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
- செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.
ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் சாஹின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "டெல்லி ஆப்கான் தூதரகத்தில் பெண் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை. அனுமதி பாஸ்கள் குறைவாகவே இருந்ததால், சிலரால் அதைப் பெற முடியவில்லை. வெளியுறவு அமைச்சர் முத்தாகி பல பெண் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும்.
ரிஷபம்
துணிச்சலோடு செயல்படும் நாள். செய்தொழில் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம்பற்றிச் சிந்திப்பீர்கள்.
மிதுனம்
நம்பிக்கைக்கு உரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். தொழில் தொடர்பாக தொலை தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
கன்னி
தேவைகள் பூர்த்தியாகித் திருப்தி காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை.
தனுசு
விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் திருப்தி தரும் தகவல் வரலாம்.
மகரம்
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.
கும்பம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
மீனம்
முன்னேற்றம் கூடும் நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். வரவு உண்டு.
- அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார் என்றார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை செனட் சபை சமீபத்தில் வழங்கியது.
ஆறு நாள் பயணமாக செர்ஜியோ கோர் நேற்று இந்தியா வந்தார். மாலையில் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர்.
செர்ஜியோ கோருடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, கோரின் பதவிக் காலத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்படும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், செர்ஜியோ கோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா மதிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் வலுவான தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வரும் நாட்களில் வலுவடையும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பராக டிரம்ப் கருதுகிறார். தற்போது கூட இரு தலைவர்களும் போனில் மிகச் சிறந்த உரையாடலை நிகழ்த்தினர். இது வருகிற நாட்கள் மற்றும் மாதங்களில் தொடரும் என தெரிவித்தார்.
- இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
- இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
காசா:
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.
இதனையடுத்து காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
- ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள்.
- எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும் என்றார்.
பாட்னா:
ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ரகோபூரிலிருந்து போட்டியிட வேண்டுமானால், ரகோபூரின் மக்கள் என்னுடன் நிற்க வேண்டும். இன்று நான் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் நாளை கட்சிக் கூட்டத்தில் முன்வைப்பேன். ஓரிரு நாட்களில், யார் போட்டியிடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பீகார் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். இது இருக்கை பகிர்வு அல்ல. இது ஊழலைப் பகிர்ந்து கொள்வது - யார் அதிகமாக கொள்ளை அடிப்பார்கள், யார் அமைச்சராக வருவார்கள், யார் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், யார் கொள்ளையில் அதிக பங்கைப் பெறுவார்கள் - இது அதற்கான போராட்டம்.
இது நீண்ட காலத்திற்கு தொடரும். ஏனென்றால் நாம் கூட்டணி அமைத்தவுடன் பொதுமக்களை மீண்டும் முட்டாளாக்குவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
சிலர் சாதியின் பெயரால் தங்களை விற்றுவிடுவார்கள். சிலர் இந்துக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ மாறுவார்கள். சிலர் ஐந்து கிலோ தானியத்திற்கு, சிலர் ஐநூறு ரூபாய்க்கு வாக்களிப்பார்கள். ஆனால் இது நடந்தால், உங்கள் மூலம் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் கீழ் வாழத் தயாராக இருங்கள். பிறகு யாரையும் குறை சொல்லாதீர்கள்.
ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் நிறைய ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள். எனவே, எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், இந்த பரிதாபகரமான நிலையில் வாழத் தயாராக இருங்கள்.
நாம் அவரை நம்பினால், அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) 18 ஆண்டுகளில் 4-5 லட்சம் வேலைகளை வழங்கினர். இப்போது அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 கோடி வேலைகளை வழங்குவதாகச் சொல்கிறார். இதன் பொருள் ஒன்றுதான்: நீங்கள் ஒரு முட்டாள் அல்லது நீங்கள் அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள் என தெரிவித்தார்.
- முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அபுதாபி:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக ஆடி 95 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும், தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வங்கதேச வீரர்கள் சிக்கினர்.
இறுதியில், வங்கதேசம் அணி 28.3 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் 2-0 என கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஏற்கனவே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 0-3 என இழந்தது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
- விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நாட் ஸ்கைவர் நிலைத்து ஆடி சதமடித்து அசத்தி 117 ரன்கள் எடுத்தார். டாமி பியூமண்ட் 32 ரன்கள் எடுத்தார் .
இலங்கை அணியில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக ஹசினி பெராரா 35 ரன்னும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை 45.4 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் சோபி எகிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நாட் சீவர் பிரண்ட், சார்லொட் டீன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.
- மதுரையில் இருந்து தொடங்கி வருகிற 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார். அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற பிரசாத பயணத்தை நடத்தி வருகிறார். த.வெ.க. தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில் கரூர் சம்பவத்தையடுத்து அவரது சுற்றுப்பயணம் சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும் மாநில அரசின்குறைபாடு களையும் தி.மு.க.வுக்கு எதிரான விமர்சனங்களையும் முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளன.
மதுரையில் நாளை மாலை பா.ஜ.க.வின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் இருந்து தொடங்கி வருகிற 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அங்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது.
முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் பிரசார சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அந்த வகையில் பா.ஜ.க. பிரசார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க இருக்கிறார்கள். இது தொடர்பாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை புறநகர் மேற்கு கழகத்தில் மதுரை புறநகர் மேற்கு மற்றும் அண்டை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்
பா.ஜ.க. பிரசார பயணத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்பதால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-4, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் மொனாக்கோவின் வேலண்டினிடம் தோல்வி அடைந்தார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோவின் வேலண்டின் உடன் மோதுகிறார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'மைலாஞ்சி'.
திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் 'மைலாஞ்சி' பாடல்களை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:-
நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் - கதாசிரியர் & இயக்குநர் - தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு.
இவ்வாறு கூறினார்.






