என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
    • பலரும் மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.

    இன்றைய நவீன காலத்திலும் வரதட்சணை வாங்கி தான் திருமணம் முடிப்பேன் என்று சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்து திருமணமே நின்றுபோய் பேசு பொருளாகி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் திருமணக்கோலத்தில் ஊர்வலமாக வந்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட தயாராகிறார்.

    அப்போது திடீரென மணமகன் எனக்கு 20 லட்சம் ரொக்க பணமும் ஒரு காரும் தந்தால் தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளின் தந்தை மணமகனின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் என் மகளை திருமணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை என்று... ஆனால் அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் எனக்கு பணம் தான் முக்கியம் என்று சொல்கிறார்.

    இதனை பார்த்த மணப்பெண் எனக்கு இந்த திருமணம் வேண்டாம். பண ஆசை பிடித்த இவரிடம் என்னால் நிம்மதியாக வாழமுடியாது என்று கூறி தனது தந்தையை அழைத்துச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பலரும் அந்த மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.

    • திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு.
    • இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு மூளையாக இருந்தவர் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார்.

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு மூளையாக இருந்தவர் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார். அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது.

    இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படும் போதுதான் நீதி முழுமையடையும். இது ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக மட்டுமல்ல. இது தங்கள் பணியிடங்களிலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி, துணிச்சலுடன், தலைநிமிர்ந்து நடக்கத் தகுதியான ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஆகும். இப்போதும், எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையுடன் நிற்பேன்" என்று மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் இதே கருத்தை தான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
    • குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    மெட்ரோ ரெயிலால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிவதால் மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    இதனை தொடர்ந்து, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த திட்ட அறிக்கையில் மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ. 10,740 கோடியிலும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

    ஆனால் மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதனை மறுத்த மத்திய அரசு அதனை ஆய்வு செய்வதாகவும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது. இதனால் இவ்விவகாரம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

     

    20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

    அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து, கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் கிடைக்காததற்கு தி.மு.க. அரசுதான் காரணம். திட்ட அறிக்கை முறையாக தயாரிக்கப்படாததால் மத்திய அரசு நிராகரித்ததாகவும், 2026ல் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோவைக்கு மெட்ரோ நிச்சயம் கொண்டுவரப்படும் என்றும் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மக்கள் நலத் திட்டங்களை அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க. முடக்கி வைப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் வானதி கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    வானதி சீனிவாசன் கூறியதுபோல் 2026-ல் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வராவிட்டால் அதற்கு கோவை, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிரந்தரமாக மத்திய அரசு அனுமதி மறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே.

    • படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள்.
    • செல்லும் பாதையில் உறுதியாக இருந்தாலே போதும், சினிமாவில் சாதிக்கலாம்.

    படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கூல் சுரேஷ், தற்போது 'உள்ளே செல்லாதீர்கள்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ரெட் புளூ ஸ்டூடியோஸ் சார்பில் ஜி.முத்துமனோகரன் தயாரித்து, சி.இளையராஜா இயக்கியுள்ளார்.

    படத்தின் 'பர்ஸ்ட் லுக்'கை கூல் சுரேசின் நண்பரும், முன்னணி நடிகருமான சந்தானம் சென்னையில் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார். விழாவில் அவர் பேசும்போது, ''படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள். பேய்க்கதை என்பதால் நிச்சயம் நம்பி பார்க்கலாம்.

    நானும், கூல் சுரேசும் டி.ராஜேந்தரின் 'காதல் அழிவதில்லை' படத்தில் துணை நடிகர்களாக நுழைந்தோம். நிறைய பேர் சினிமாவில் வந்து போராடிவிட்டு முடியவில்லை என்று மனரீதியாக சோர்வு அடைந்து சென்றிருப்பதை பார்த்துள்ளோம். ஆனால் கூல் சுரேஷ் கேலி, கிண்டலுக்கு கவலைப்படாமல் இந்த நிலைக்கு வந்துள்ளார்.

    வாழ்க்கையில் விழும் அடிகளுக்கு கவலைப்பட்டாலோ, சோர்ந்து போனாலோ நாம் பிழைக்க முடியாது. அடிகளை தாங்கி, தாண்டி எழுந்து ஓடும்போது தான் உண்மையான வெற்றி கிடைக்கும். செல்லும் பாதையில் உறுதியாக இருந்தாலே போதும், சினிமாவில் சாதிக்கலாம். சினிமா பயணம் சாதாரணம் அல்ல'', என்றார்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை - 29 (திங்கள்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 11.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : சித்திரை பிற்பகல் 2.09 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்த/அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை

    சர்வ ஏகாதசி. சுபமூகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1,008 சங்காபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-புகழ்

    கடகம்-செலவு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-உறுதி

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-தனம்

    தனுசு- வரவு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-அன்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பாசத்தோடு பழகியவர்களின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ரிஷபம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    மிதுனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்துசேரும்.

    கடகம்

    தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும் நாள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    சிம்மம்

    வாட்டங்கள் அகன்று வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கன்னி

    வழக்குகள் சாதகமாக முடியும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    துலாம்

    நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ, வராதோ என்றுநினைத்த பணவரவு ஒன்று கைக்கு கிடைக்கலாம்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் உண்டு.

    தனுசு

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    மகரம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    கும்பம்

    பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவம் ஒன்று நடைபெறும். புதிய நிறுவனங்களில் உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

    மீனம்

    காரிய தாமதம் ஏற்படும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். சோம்பல் காரணமாகத் திட்டமிட்ட காரியம் ஒன்றை மாற்றியமைப்பீர்கள்.

    • நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    சென்னை:

    5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.

    முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங்கும், 3-வது ஆட்டத்தில் இந்திய அணியின் அனாஹத் சிங்கும் வென்றனர். இறுதியில், இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுகள். சொந்த நாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில், ஜோஸ்னா, அபய்சிங், செந்தில்குமார் மற்றும் அனாஹத் சிங் ஆகியோரின் நிதானமும், துணிச்சலும், தரமும் நிறைந்த ஆட்டத்தால் 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.

    இந்திய அணியின் நால்வரில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், இத்தகைய பன்னாட்டு தொடரை சென்னையில் நடத்தியதும் சேர்ந்து இச்சாதனை வெற்றியானது தமிழ்நாட்டின் விளையாட்டுச் சூழலின் ஆழத்தையும், நம்பிக்கையையும், சிறப்பையும் மீண்டுமொரு முறை நிலைநாட்டியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.
    • விடுமுறை நாளில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

    • டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
    • இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.

    அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.

    • தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
    • நயினார் நாகேந்திரன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.

    தற்போது தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    • இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

    தர்மசாலா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

    இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

    • ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
    • ஆண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் வென்றார்.

    கட்டாக்:

    ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப் உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே பொறுப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் முதல் செட்டை 21-14 என வென்றார். இதற்கு பதிலடியாக முகமது யூசுப் 2வது செட்டை 21-13 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ் 21-16 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ×