என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய பள்ளி இயக்கம்.
    • புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் இயக்கம்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி சென்னையில் நாளை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இண்டிகோ விமான நிறுவனம் நேற்று 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
    • இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    புதுடெல்லி:

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக நேற்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்நிலையில், விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு தொடர்பான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உள்ள அறிவுறுத்தல்களை விமான போக்குவரத்து இயக்குனரகம் திரும்பப் பெறுகிறது.

    இதுதொடர்பாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களிடமிருந்து செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் அவசியம் குறித்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்ட பத்தியில் உள்ள அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதன்மூலம் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.
    • பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!

    மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும்.

    சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.

    முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. 'உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு' எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, 'சிக்கந்தர் மலை' எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!

    சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. 'இந்துக்களின் விரோதி' என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

    • மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர்.
    • திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை.

    மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னணியில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த நாஞ்சில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். திராவிட சித்தாந்தம் கொண்ட இவர் தவெகவில் இணைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயம்.

    யார் இந்த நாஞ்சில் சம்பத்?

    துரை வைகோ போலவே எப்போதும் கழுத்தில் துண்டுடன் இருப்பவர் நாஞ்சில் சம்பத். மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர். முதலில் திமுகவில் இருந்த இவர் வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது, அவருடன் இணைந்து வெளியேறியவர். பின் மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தார். அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை. பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். 


    வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பன்முகத்தன்மையை சிதைத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.

    அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

    தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

    மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

    பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது.

    இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளார்.

    • எதிர்பார்ப்புக்கு தள்ளுபடி விலை, அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் என பல காரணங்கள் இருக்கலாம்
    • கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

    தமிழ்நாடு மட்டுமின்றி நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புத்தகப் பிரியர்களும் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது சென்னை புத்தக கண்காட்சியைத்தான். அதற்கு தள்ளுபடி விலை, அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இடம் என பல காரணங்கள் இருக்கலாம். இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள புத்தகக்கண்காட்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    48வது புத்தக கண்காட்சி நடப்பாண்டு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது 49வது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. எப்போதும்போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம்தான் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதன்படி 49ஆவது சென்னை புத்தகக் காட்சி வரவிருக்கும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ளது. கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தொகுதிகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டார்.

    • விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷியா உதவி செய்து வருகிறது என அதிபர் விளாடிமிர் புதின் பேட்டி அளித்துள்ளார்.

    மேலும் அவர்," கூடங்குளத்தில் 6 அணு உலைகளில் 3 ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

    கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.

    இந்தியாவிற்கு எண்ணெய், நிலக்கரி, எரிவாயு வழங்கும் நம்பிக்கையான நாடு ரஷியா" என்றார்.

    • நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
    • திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.

    திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது.

    * நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.

    * 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

    * ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.

    * திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.

    * இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜூ மிரட்டுகிறார்.

    * பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய் பிரசாரம் செய்கிறார்.

    * மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம்.

    * திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.

    * நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
    • கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.

    இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.

    • 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    இதில் மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து அசத்தினார். இது அவரது 25-வது டெஸ்ட் அரை சதம் ஆகும். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார். அவர் 45 ரன்கள் எடுத்த போது இந்த வரலாற்றை படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக ஸ்மித் 827 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக வார்னர் (753), ஹெட் (752), ரூட் (639) ஆகியோர் உள்ளனர்.

    ×