என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும்
- ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் "குடும்பத்தின் புதிய உறுப்பினரைச் சந்திக்கத் தயாராகுங்கள். புதன்கிழமை, பிப்ரவரி 19. #AppleLaunch" என்று பதிவிட்டுள்ளார்.
ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அதன் அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதுதொடர்பாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
சிப்செட்:
ஐபோன் SE 4 , ஐபோன் 16 இல் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த 3nm ப்ராசசர் A18 சிப்செட்டைக் கொண்டிருக்கும். இதன்மூலம், தேவைப்படும் பயன்பாடுகள் மற்றும் கேம்களை எளிதாகக் கையாள முடியும். கூடுதலாக, SE சீரிஸில் முதல் முறையாக மேம்பட்ட AI அம்சங்களுடன் ஆப்பிள் நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
டிஸ்ப்ளே
ஐபோன் SE 4, ஐபோன் 14 போன்ற முந்தைய மாடல்களைப் போலவே, 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.
டைனமிக் ஐலேண்ட் க்கு பதிலாக நாட்ச் - முறை இதில் இருக்கலாம். மேம்பட்ட பாதுகாப்பிற்காக முந்தைய டச் ஐடி மாற்றியமைக்கப்பட்டு, இதில் ஃபேஸ் ஐடி முறை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பில்ட் டிசைன்:
ஐபோன் SE 4, ஐபோன் 14 ஐப் போலவே தட்டையான பக்கவாட்டு அலுமினியம் மற்றும் கண்ணாடி கட்டுமானத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கேமரா:
ஐபோன் SE 4, ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம். இதில் அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாவிட்டாலும், மேம்பட்ட புகைப்படம் எடுப்பதற்கு 2x ஆப்டிகல் ஜூம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டரி:
A18 சிப்செட் மூலம், ஐபோன் SE 4 இல் சிறந்த பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கலாம்.
- தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க. கட்சியில் இருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, தி.மு.க. அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க. கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகி விடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?
தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செங்கோட்டையன் அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்.
- முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணன் செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
புரட்சித் தலைவர் மறைவிற்கு பின்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழிநடத்தியபோது, இயக்கத்திற்கு ஒரு தளபதியாக செயலாற்றியவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவர் உழைப்பிற்கு ஏற்ப புரட்சித் தலைவி உயர்ந்த பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார்.
புரட்சித் தலைவி அவரை எந்தளவிற்கு மதிப்போடும், மரியாதையோடும் வழி நடத்தினார்களோ அதேபோல் இன்றளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார், மூத்த தலைவராக இருக்கக்கூடிய செங்கோட்டையன் அவர்களை மதித்து அழைத்து செல்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணன் செங்கோட்டையனை பொறுத்தவரை இந்த இயக்கத்தோடு ஒன்றிணைந்து இருப்பவர். அவரோடு அந்த மாவட்டத்தில் இருந்த முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.
ஆனால் அதே மாவட்டத்தில் இருக்கின்ற தலைவர் செங்கோட்டையன், பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் நம்முடைய உழைப்பால் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது என்ற சிந்தனையோடு இந்த இயக்கத்திற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. என்ற இயக்கம் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த உரிமையும் இல்லை.
பொதுச்செயலாளர் இ.பி.எஸ். குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை. அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக விமர்சிக்கலாம். எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு டி.டி.வி. தினகரனுக்கு உரிமையில்லை.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பாதுகாப்புக்காக Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டிருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாக த.வெ.க. தலைவர் விஜயை தன்பக்கம் இழுப்பதற்காக Y பிரிவு பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறினார்.
- வா வாத்தியார் படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- வா வாத்தியார் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கார்த்தி நடிக்கும் 26வது படமாக 'வா வாத்தியார்' உருவாக்கி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக 'வா வாத்தியார்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் "உயிர் பத்திக்காம" இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நட்பு தினம் பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது
- சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக காதலர் தினம் மருவி நிற்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறு காதலர் தினம் வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பின்லாந்து:
இங்கு வழக்கமான காதலர் தின மரபுகளுக்குப் பதிலாக, " நட்பு தினம் " பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களை வாழ்த்தியும் பரிசளித்தும் இந்த தினத்தைப் பின்லாந்து மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்:
ஜப்பானில், காதலர் தினத்தன்று பெண்கள் தங்கள் துணைக்கு சாக்லேட்டுகள், பரிசுகள் வழங்கி மகிழ்வார்கள். இந்த பாரம்பரியம் அதோடு முடிவடையவில்லை. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, மார்ச் 14 அன்று, ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது. அப்போது பரிசுகளைப் பெற்ற ஆண்கள் தங்கள் காதலிக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.
டென்மார்க் மற்றும் நார்வே:
டென்மார்க் மற்றும் நார்வேயில், காதலர் தினம் என்பது ஜோடிகளுக்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்களுக்குள் கவிதை அட்டைகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கவிதை அட்டைகளை நேசிப்பவர்களுக்கு தங்களின் பெயரை எழுதாமல் அனுப்புவார்கள். யார் அனுப்பியது என்று அவர் கண்டுபிடித்தால் அவர் ஈஸ்டர் முட்டையை வெல்வார். இல்லையெனில் ஈஸ்டர் முட்டையை அவர் அனுப்பியவருக்குத் தர வேண்டும்.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில், காதலர் தினம் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகள் மிட்டாய், பழம் அல்லது பணத்திற்கு ஈடாக பாட்டு பாடும் ஒரு அழகான பாரம்பரியம் உள்ளது. சிலர் திராட்சை, பிளம்ஸ் அல்லது காரவே விதைகளால் சுடப்பட்ட காதலர் பன்கள் அல்லது "பிளம் ஷட்டில்ஸ்" பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஜெர்மனி:
காதல் மற்றும் காமம் இரண்டையும் குறிக்கும் வகையில், பன்றி சிலைகளையும், பொம்மைகளையும் கொடுத்து ஜெர்மானியர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
பிலிப்பைன்ஸ்:
காதலர் தினத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் இடம் பிலிப்பைன்ஸ். நூற்றுக்கணக்கான தம்பதிகள் வாழ்வில் ஒன்றிணைகிறார்கள். இதற்காக அரசாங்கம் பெரிய அளவிலான விழாக்களை நடத்துகிறது.
தென்னாப்பிரிக்கா:
ரோமானிய பண்டிகையான லூபர்காலியாவை கௌரவிக்கும் விதமாக பிப்ரவரி 15 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதுவரை தாங்கள் ரகசியமாக வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவார்கள்.
தான் காதலிக்கும் ஆடவனின் பெயரைத் துணிச்சலுடன் தங்கள் சட்டைகளில் இடம்பெறச் செய்து காதலனுக்கும், உறவினருக்கும் ஊராருக்கும் தனது காதலை அறியச் செய்வார்கள். பூக்கள் அல்லது சிறிய பரிசுகள் மூலமும் காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
தைவான்:
தைவானில், காதலை வெளிப்படுத்துவதில் பூக்கள் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆண்கள் காதலர் தினத்திலும், மீண்டும் ஜூலை 7 ஆம் தேதியும் காதலிக்கு பெரிய பூங்கொத்துகளை வழங்குகிறார்கள். சரியாக 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீங்கள் பெற்றால், அது யாரோ ஒருவர் காதலை உங்களுக்கு சொல்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தென் கொரியா:
தென் கொரியாவில், காதலர் தினம் என்பது ஒரு மாத கால கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். பிப்ரவரி 14 அன்று, தம்பதிகள் சாக்லேட்டுகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானின் பாரம்பரியத்தைப் போலவே, வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இறுதியாக, ஏப்ரல் 14 அன்று சிங்கிள்ஸ்களுக்கான கருப்பு தினத்துடன் கொண்டாட்டங்கள் முடிவடைகிறது.
பிரேசில்:
பிரேசிலில், திருமணத்தின் ரட்சகனான துறவி புனித அந்தோணியார் விழாவிற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று காதலர் தினம், தியா டோஸ் நமோராடோஸ் (காதலர்கள் தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி மாத காதலர் தினம் கார்னிவலுடன் வருவதால் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவைப் போலவே, பிரேசிலியர்களும் காதலர் தினத்தன்று இரவு உணவிற்கு வெளியே செல்வது, பரிசுகளை பரிமாறிக்கொள்வது, தங்கள் துணையுடன் இரவில் டேட்டிங் செய்வது உள்ளிட்டவை மூலம் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
- தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை வளப்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
- நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் ஃபேர்ப்ரோ 2025 (CREDAI Fairpro 2025) என்ற வீடு விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வீடுகள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் சூப்பர் சென்னை முன்னெடுப்பை அறிமுகம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று தெரிய வைப்பது கட்டிடங்கள் தான்.
* மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் தேவைகள் அனைத்தையும் அரசே செய்துவிட முடியாது.
* ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ததற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
* தமிழகம் மிகவும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
* வீடுகளின் தேவை அதிகரித்து வருவதை கணக்கிட்டு புதிய திட்டங்களை தீட்ட வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை வளப்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
* கோவை, மதுரைக்கான திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும்.
* சென்னையின் நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
* கட்டடங்களுக்கான ஒப்புதல் வழங்கும் கால அளவு குறைந்துள்ளது.
* தமிழகத்தில் அனைவரின் சொந்த வீடு கனவை நனவாக்க சுயசான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* சுயசான்றிதழ் திட்டத்தின்கீழ் 51 பேர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.
* தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 48 சதவீத மக்கள் நகரங்களில் வசித்து வருகின்றனர்.
* செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன பேருந்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்படும்.
* புத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்.
* சென்னை நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளின் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை
* நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.
* அனைத்து தரப்பு மக்களின் சொந்த வீடு கனவு திட்டத்தை நிறைவேற்ற திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.
- டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
- ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான மற்ற வாக்குகளில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதம் மட்டுமே இருந்ததாக தேர்தல் ஆணைய புள்ளி விபரபட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 20-ந்தேதி நிலவரப்படி நாடுமுழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கையில் 22.8 சதவீதமாக இருந்தது. அதே சமயம் 60 முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் பங்கு 14.7 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் 18 முதல் 29 வயதுடைய இளம் வாக்காளர்களின் பங்கு 18 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. அதிகபட்சமாக அசாமில் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். இது ஜார்க்கண்டில் 28.4 சதவீதமாக உள்ளது. அதேநேரம் டெல்லியில் 30 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
- 13-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பஜாஜ் குடும்பம் உள்ளது.
- 18-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் உள்ளது.
புதுடெல்லி:
ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.7.85 லட்சம் கோடி ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானி மேற்பார்வையிட்டு வருகிறார்.
4-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் மிஸ்திரியின் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி ஆகும். இவர்களின் குடும்பம் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கிறது.
இந்தியாவை சேர்ந்த ஜிண்டால் குடும்பம் 7-வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.2.43 லட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் ஓபி ஜிண்டால் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பம் 9-வது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடி ஆகும். 7 தலைமுறைகளாக இந்த குடும்பம் உலோகங்கள், சிமெண்ட் மற்றும் நிதி சேவை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
13-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பஜாஜ் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.1.74 லட்சம் கோடி ஆகும். இவர்கள் பஜாஜ் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.
18-வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.
- கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
- அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர்.
மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா, "கள்ளக்காதல் என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். தனது மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற கணவரின் வாதத்தை நிராகரித்தார்.
இவ்வழக்கில் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சத் தொகையாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி அலுவாலியா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
"ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும், மனைவி கள்ளக்காதல் கொண்டிருக்கிறாள் என்று கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், "கணவரின் சொற்ப வருமானம் இடைக்கால ஜீவனாம்சத் தொகையை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது" என்றும் நீதிமன்றம் கூறியது. விண்ணப்பதாரர் தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர் என்பதை முழுமையாக அறிந்தே ஒரு பெண்ணை மணந்திருந்தால், அதற்கு அவரே பொறுப்பு.
ஆனால் அவர் ஒரு திறமையான நபராக இருந்தால், அவர் தனது மனைவியை பராமரிக்க அல்லது இடைக்கால ஜீவனாம்சத் தொகையை செலுத்த சம்பாதிக்க வேண்டும்.
- போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.
- காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதல் என்பது இனம், மதம், நாடு, மொழி என்ற வரையறைகளுக்குள் சிக்காமல் உலகமெங்கும் பரவி நிற்கும் ஒன்று. ஐந்தறிவு மிருகங்கள் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை காதல் என்பது வாழ்வை அர்த்தமாகும் உணர்வு. அந்த உணர்வு ஒவ்வொருவரிடத்திலும் அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் தோன்றியிருக்கவே செய்யும்.
அது பள்ளி பருவமாக இருந்தாலும், தள்ளாடும் வயோதிகமாக இருந்தாலும் காதல் துளிர்க்கும் தருணங்கள் வாழ்வின் முழுமையை உணர வைக்கும் வல்லமை கொண்டவை. காதலை வெறுமனே உடலின் பாற்பட்ட ஈர்ப்பு என்று கருதுபவர்கள் பரிதாபத்திற்குரியர்கள். காதலின் உண்மை சாராம்சம் அறியாதவர்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு காதலுக்கு எதிராக எத்தனை கற்பிதங்களை உருவாக்கினாலும், தனிமனித உள்ளங்களுக்குள் சுடர்விடும் பொறியை, உயிர்வாழ்தலின் உண்மைப் பொருளை சமூகத்தால் மூடி வைக்க முடியாது.
காதலால் நிரம்பிய உலகம் வஞ்சகம் அற்ற வன்முறை அற்ற அன்பின்பாற்பட்டதாக இருக்கும். ஒருவரை ஒருவர் சுரண்டவும் ஏமாற்றவும் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்துள்ள வர்க்கங்கள் முதலான போலி படாடோபங்களை சுக்குநூறாக உடைத்து அன்பை உலக நெறியாக போதிக்கும் வல்லமை வேறெதையும் விட காதலுக்கு மட்டுமே உண்டு.
வேறெதையும் விட மனிதனை இயக்கும் சக்தி, மேற்கூரிய போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.
உலகின் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை காதலின் விசை நிகழ்த்தும் அதிர்வுகள் உயிர்போடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். காதல் என்றுமே அழிவதில்லை. அதை குறிப்புணர்த்தும் விதமான இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது. ஐபில் கோபுரம் சாட்சியாக காதலை காதலுக்காகவே ஆன தினத்தில் கொண்டாடி வருகின்றனர். காதலர்கள் தங்களுக்குள் கிரீட்டிங் அட்டைகள், சாக்லெட்டுகள், பரிசுகளை பரிமாறி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இவை எதுவும் இல்லாமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் அடுத்த வேலை உணவுக்கே வழியில்லாத மனிதர்கள் வாழும் பஞ்சப் பிரதேசம் ஒன்றில் இளம் காதலி தனது மனங்கவர்ந்த காதலனின் கையைப்பற்றி முத்தமிடுகிறாள்.
- ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும்.
- சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நான் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக தி.மு.க. அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒரு சமுதாயம் பின்தங்கி இருந்தால் கூட ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு சமூகமும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பில் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் திட்டம் வகுக்க வேண்டியது அவசியம் ஆகும். அத்தகைய திட்டத்தை வகுப்பதற்கு தேவையான தரவுகளை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமாக மட்டும் தான் திரட்ட முடியும். அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. நிறுவனர் வலியுறுத்தி வருகிறார்.
அதேபோல், சமூகநீதியையும், சம நீதியையும் நிலை நிறுத்துவதற்கும் சமூகநீதியை பாதுகாப்பதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். குறிப்பாக, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு தமிழ்பாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தி.மு.க. அரசு மறுக்கிறது.
அண்டை மாநிலமான தெலுங்கானா சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்தது மட்டுமின்றி அதனடிப்படையில் அம்மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதுள்ள 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத்திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. ஆனால், இதை எதையுமே உணராத தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும், மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசின் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த பத்தாம் தேதி சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், "சமூகநீதியைக் காப்பதற்கான கடமையை தமிழக அரசு செய்யத் தவறிய நிலையில், அதை சுட்டிக்காட்டி கடமையை செய்ய வைக்க வேண்டியது சமூகநீதி அமைப்புகளின் பொறுப்பு ஆகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் சார்பில் சென்னை மாநகரில் மாபெரும் போராட்டத்தை நடத்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூகநீதி கூட்டமைப்புக் கட்சிகள் இணைந்து வரும் 20-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் எ.கே.மூர்த்தி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.பாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர். தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இணைப் பொதுச்செயலாளர் தமிழாசன், தமிழ்நாடு யாதவ மகாசபை செயலாளர் வழக்கறிஞர் சேது மாநவன், வெள்ளாளர் முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணா சாவணம், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து இரமோஷ் வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தவிர சமூகநீதியில் அக்கறை கொண்ட மேலும் பல அமைப்புகளின் நிர்வாகிகளும் இத்தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம்.
- மூத்த வீரர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவிலும், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இந்திய அணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது மட்டும் இரண்டு வாரங்கள் குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கிறது. இந்தத் தொடர் 19 நாட்கள் நடப்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல முடியாது. இந்த நிலையில் இந்திய அணி மூத்த வீரர் ஒருவர் தனது குடும்பத்தை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது உடன் அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
தனது குடும்பத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, இந்த சுற்றுப் பயணத்திற்கு வீரர்கள் தங்கள் மனைவிகளை உடன் அழைத்து வர வாய்ப்பில்லை.
இதில் விதிவிலக்கு கேட்டு மூத்த வீரர்களில் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரிடம் கொள்கை முடிவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவானது என்பதால், வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி இல்லை. ஒருவேளை விதிவிலக்குகள் அளிக்கப்பட்டால் கிரிக்கெட் வாரியம் எந்த செலவையும் ஏற்காது. சம்பந்தப்பட்ட வீரர்தான் முழு செலவுகளையும் ஏற்க வேண்டி இருக்கும்.
ஆனால் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்த மூத்த வீரர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.






