என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் உள்கட்சி மோதலால் அ.தி.மு.க. தவித்து வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு கட்சியின் தலைமை பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வில் ஆள் ஆளுக்கு கருத்துக்களை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்ததும் அடுத்தடுத்து அவர் தெரிவித்த கருத்துக்களும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
செங்கோட்டையனின் கருத்துக்கு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் புதிய பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை மையமாக வைத்து செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் சேர தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோடு அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்கு வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்னும் 6 மாதம் பொறுமையோடு காத்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இப்படி ஓ.பி.எஸ்.சை சேர்க்கும் விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இதுபற்றி அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர முன் வந்தால் அவர்களை நிச்சயம் வரவேற்க வேண்டும் என்பதில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியுடனேயே உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.
ஏனென்றால் ஓ.பி.எஸ்.சின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி இருந்து உள்ளன. அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது முதல் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டது வரை எதை மறந்து விட்டு ஓ.பி.எஸ்.சை கட்சிக்குள் சேர்த்துக் கொள்வது? என்பதே எடப்பாடி பழனிசாமியின் கேள்வியாக இருந்து வருகிறது.
இருப்பினும் அவரது மனதை மாற்றி ஓ.பி.எஸ்.சை மீண்டும் கட்சியில் சேர்த்து உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்கிற கருத்து அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய தலைவர்களின் விருப்பமாகவே இருந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள முன்னணி நிர்வாகிகள் இதுபற்றி அவரிடம் தொடர்ந்து எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர், "ஓ.பி.எஸ்.சை சேர்ப்பது பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி அந்த பேச்சை அப்படியே முடித்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நம்மால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அ.தி.மு.க. தலைமையிடம் எடுத்து கூறியுள்ளனர். எனவே தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் போது ஓ.பி.எஸ். உள்ளிட்ட பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக பெரிதாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
- மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சிறையில் இருந்து காதல் கடிதங்கள் எழுதி வருகிறார்.
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வருகிறார்.
இதனிடையே சிறையில் இருந்துகொண்டே ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுதிய காதல் கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசாக கொடுத்த ஜெட் விமானத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குறிக்கும் விதமாக ஆங்கிலத்தில் ஜேஎஃப் என்று விமானத்தில் எழுதப்பட்டுள்ளது
இது தொடர்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "ஜெட் விமானத்தை எனது காதலி ஜாக்குலினுக்கு அனுப்புகிறேன். இந்த விமானம் குற்றச்செயல்களால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கவில்லை.
அடுத்த பிறவி என்று எனக்கு இருந்தால், அதில் நான் ஜாக்குலின் உடைய இதயமாகப் பிறக்க விரும்புகிறேன். அவருக்குள் நான் "துடித்துக் கொண்டே இருக்க" விரும்புகிறேன். நீ என் காதலியாக இருப்பதால் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதன் நான்தான். ஜாக்குலின் போன்ற மிகவும் அழகான மற்றும் அற்புதமான பெண் காதலியாக கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
பேபி, நீ எப்போதும் வேலை மற்றும் படப்பிடிப்பிற்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருப்பாய். இப்போது இந்த ஜெட் விமானத்துடன், உன் பயணம் உன் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
- தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
- தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
சென்னை:
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?
இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?
இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம்.
- எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
சென்னை:
தமிழக முதலமைச்சரை தலைவராக கொண்ட திஷா எனப்படும் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அவ்வப்போது கூட்டப்படும்.
மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க இந்த குழுவின் கூட்டம் நடை பெறுவது வழக்கம். இந்த குழுவின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாநில அளவிலான 4-வது கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் திட்டப் பணிகள் பற்றி விளக்க உரையாற்றப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் முதலச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை நிகழ்த்தினார்.
சமீபத்தில் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் செங்கோட்டையன் உறுப்பினராக உள்ளதால் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு முன்பு நடந்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
- ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்தது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் ப்ரொபசலை ஓபன்ஏஐ நிறுவனம் நிராகரித்துள்ளது. OpenAI விற்பனைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எலான் மஸ்க்கின் கோரிக்கை தொடர்பாக ஓபன்ஏஐ சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று கிண்டலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் சில விமர்சனத்தையும், சில வரவேற்பையும் பெறும். அப்படி வரவேற்பை பெற்ற இளம்பெண்ணின் வீடியோ அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா என்ற பெண் காந்த கண்ணால் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் வைரலானார். இதையடுத்து மோனலிசாவை சினிமாவில் நடிக்க வைப்பதாக இயக்குநர் ஒருவர் பொதுவெளியில் அறிவித்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோனலிசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நகைக்கடையை திறந்து வைத்துள்ளார்.
தொழிலதிபர் பாபி செம்மனூர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையை மோனலிசா திறந்து வைப்பதாக வெளியான தகவலை அடுத்து நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகைக்கடை திறப்பு விழாவில் மோனலிசாவுக்கு விலை உயர்ந்த நெக்லஸை அணிவித்து அழகு பார்த்த நிகழ்வு தற்போது பேசு பொருளாகி உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மோனலிசா மலையாளத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
- சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.
இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், திரைப்படம் “இதயம் முரளி”
- தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக சமீபத்தில் நடைபெற்றது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், "இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் "இதயம் முரளி" படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒளிபரப்பட்டபோது, ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் படத்திற்கு, இதயம் முரளி தலைப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இப்படத்தில் பங்கு பெற்றுள்ள நடிகர்கள் குழு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அவர்களுடன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட
நடிகை கயாது லோஹர் பேசியதாவது…
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். இது தான் நான் ஒப்பந்தாமகிய முதல் தமிழ்ப்படம், இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக உங்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது…
ரசிகர்கள் எனக்கு தந்து வரும் அன்புக்கு நன்றி. இப்படத்தின் கதை பற்றி இப்போது சொல்ல மாட்டேன், உங்களுக்கு நிறைய ஆச்சரியம் உள்ளது. நம்முடைய கல்லூரி காலங்களில் நாம் நிறைய பேரை சந்திப்போம், பல அனுபவங்கள் இருக்கும், அதை ஞாபகப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும். இந்த டீம் ஃபேமிலி மாதிரி, ஷூட்டிங் மிக ஜாலியாக இருக்கிறது. படம் மிக நன்றாக இருக்கும் நன்றி.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது…,
தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி.
நடிகர் அதர்வா பேசியதாவது…,
ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.
காதலின் மெல்லிய உணர்வுகளை கொண்டாடும் ஒரு படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
- பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனால் சீமானின் புகைப்படம் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.
இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான புகைப்படம் அது. 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்.. பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள். பிரபாகரனை சந்தித்தது குறித்து யாருக்கு நிரூபிக்க வேண்டி இருக்கு. எனக்கு அவசியம் இல்லை என்று சீமான் கூறியிருந்தார்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், பிரபாகரன் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார் என்றும் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
- கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.
- அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 5 அன்று ரூ.42,80,3611.66 கோடியாக இருந்த மொத்த சந்தை மூலதனம், அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில் சரிவுக்கு பிறகு இப்போது ரூ.40,09,9281.11 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சந்தை ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளது. கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.
தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
- சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது.
- 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்றிரவு பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறி ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரை இறங்கியது. இதையடுத்து அங்கிருந்து இந்தியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் 119 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்துகிறது. 119 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் இன்றிரவு பஞ்சாப் மாநிலத்துக்கு வர உள்ளது.
இந்த நிலையில், விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* முதல் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இப்போது, இரண்டாவது விமானம் இங்கு தரையிறங்கும். விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.
* பிரதமர் மோடியும்- டிரம்பும் சந்தித்த நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் நம் மக்களைக் கட்டிப்போட்டிருக்க வேண்டும். டிரம்ப் கொடுத்த பரிசு இதுதானா?
* லாகூர் அமிர்தசரஸிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவில் உள்ளது. எதிரி நாடான பாகிஸ்தான், அமிர்தசரஸ் அருகில் உள்ளது என்று தெரிந்தும், இந்த விமானங்களை இங்கே தரையிறக்க மத்திய அரசு ஏன் தேர்வு செய்தது? இது என்ன வகையான வெளியுறவுக் கொள்கை? விமானங்களை தேசிய தலைநகரில் தரையிறக்க வேண்டும் அங்கிருந்து நம் மக்களை அழைத்து வருவோம்...
* பஞ்சாபியர்கள் மட்டுமே சட்டவிரோத குடியேறிகள் என்று சித்தரிக்க வேண்டுமென்றே அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பா.ஜ.க. எப்போதும் பஞ்சாபை அவதூறு செய்ய சதி செய்கிறது. அமிர்தசரஸில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிப்பதில்லை, அது அதற்கு ஏற்றதல்ல என்று கூறி, இப்போது அமெரிக்காவிலிருந்து விமானங்கள் ஏன் வருகின்றன?...
* விமானத்தை டெல்லி அல்லது அகமதாபாத்தில் தரையிறக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
முன்னதாக, டெல்லி சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு 104 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்தை டெல்லியில் தரையிறக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- ராகிங் செய்த மாணவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- விடுதியில் தங்கியிருந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் முதலாமாண்டு மாணவரை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கொடூரமாக சித்ரவதை செய்து ராகிங் செய்தனர்.
அதாவது அந்த மாணவரை கட்டிலில் கட்டி வைத்தும், ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பின் மேல் எடை தூக்கும் கருவியை வைத்தும், கூர்மையான திசைகாட்டியால் உடலில் பல இடங்களில் குத்தி காயப்படுத்தியும் சித்ரவதை செய்தார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலாமாண்டு மாணவரை கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ராகிங் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டும் செய்தது. இந்தநிலையில் முதலாமாண்டு மாணவனை, பிற மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கி ராகிங் செய்த வீடியோ காட்சி வெளியானது. மாணவன் கதறும் நிலையில், இவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்ய முடியுமா? என்ற கேள்வி எழும்பும் வகையில் அந்த வீடியோ மிகவும் பயங்கரமாக இருந்தது.
விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் கடந்த 3 மாதங்களாக சித்ரவதைகளை அனுபவித்தபடி இருந்திருக்கிறான். அரசு நர்சிங் கல்லூரியில் நடந்திருக்கும் இந்த ராகிங் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடியாக விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் மாணவன் சித்ரவதைக்குள்ளான நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணையை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலர் ராஜன் கோப்ரகடே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.






