search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sukesh Chandrasekhar"

    • சுகேஷ் சிறையில் இருந்து கொண்டே, ஜாக்குலின் பெர்னான்டசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
    • உண்மையை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடி மோசடியாக பெற்றதாக மீண்டும் கைதானார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகரும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வந்தார். இந்நிலையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன்னை பற்றிய எந்த தகவலையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு தடை விதிக்குமாறு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சுகேஷ் சந்திரசேகர் என்னை பற்றி மேலும் கடிதங்கள், அறிக்கைகள் அல்லது செய்திகளை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார். அத்துடன், ஜாக்குலின், பாட்டியாலா கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே, ஜாக்குலின் பெர்னான்டசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    உண்மையை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும். என் கனவில் கூட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது இதயம் எப்பொழுதோ நொறுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையை உணர்வது மிகவும் முக்கியமானது. உன்னுடைய செயலால் அதிர்ச்சி அடைகிறேன்.

    உன்னுடைய நடவடிக்கை என்னை பிசாசாக மாற்றியுள்ளது. உண்மையை அம்பலப்படுத்துவதை தவிர வேறு எனக்கு வழியில்லை. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. இப்போது உலகம் உண்மையை அறியவேண்டிய நேரம் வந்துவிட்டது. உண்மையை சட்டப்படி நான் வெளியே சொல்வேன். உன்னை பாதுகாக்க இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டு மற்றும் விசாரணை அமைப்புகள் முன்பு சமர்ப்பிப்பேன்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

    அதன்மூலம் நடிகை ஜாக்குலினுடன் செல்போனில் நடத்திய சாட்கள், ஸ்கிரீன்ஷாட், குரல் பதிவுகள், வெளிநாடு நிதி வர்த்தக பரிவர்த்தனை, முதலீடு ஆகியவற்றையும் வெளியே சொல்வதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தில் நடிகை ஜாக்குலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் ஜாக்குலினை தான் குறிப்பிட்டு அதில் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    • காதலை மேலும் வலுவூட்டி வந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
    • என் கப் கேக் என்று அந்த கடிதத்தில் முடித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.

    புதுடெல்லி:

    பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிலையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கிலும் ஏற்கனவே கைதாகி சிறையில் இருந்தார். சுகேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை வெறித்தனமாக காதலித்து வந்தார்.

    இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று தங்களது காதலை மேலும் வலுவூட்டி வந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார்.

    இந்தநிலையில் காதலி நடிகையான ஜாக்குலினின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே நன்றி கடிதம் என்ற பெயரில் ஒரு ரொமான்ஸ் கடிதத்தை எழுதி தள்ளியுள்ளார். அந்த கடிதத்தில் நடிகை ஜாக்குலினுடன் பழகிய நாட்களை அணு அணுவாக ரசனையோடு காதல் கற்பனை கலந்த வார்த்தைகளால் வரைந்து உள்ள சுகேஷ் அந்த கடிதத்தில் உனக்காக நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது.


    என் அன்பே நீங்கள் தான் உண்மையிலேயே இந்திய திரைப்படத்துறையின் மிகச்சிறந்த நடிகை. விருது வழங்கும் விழாவில் வெள்ளை கவுனில் வந்து நின்றது சூப்பர்... சூப்பர்..., உங்களை பார்க்கும் போதே ஸ்டன்னிங்காக இருந்தீர்கள்.

    குழந்தை நான், மீண்டும் மீண்டும் மனதாலும், உணர்வாலும் தாக்கப்பட்டு வருகிறேன். நீ இந்த உலகத்தையே பார்த்து விட்டாய் என் பொம்மா. இந்த கிரகத்தில் வாழும் ஒரே தேவதை நீதான்... என்ன அழகு, எத்தனை அழகு, உங்கள் பார்வைக்காக ஏங்குகிறேன். லைக் வாவ்...

    என் எண்ணங்கள் அனைத்தும் உங்களை பற்றி மட்டுமே இருக்கிறது. நான் நாடிவரும் தேனீ நீ..., உனக்காக காத்திருக்கிறேன். உன்னைப் பற்றியே நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதால் நீ எனக்கு தூக்கம் இல்லாத இரவுகளையே தருகிறாய்.

    மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் மாதம் தொடங்கியுள்ள நிலையில் உங்களுடன் சேர்ந்து பிடித்த உணவை ருசிப்பதையும் நான் தவற விட்டு விட்டதாக உணர்கிறேன். நாம் எப்போது ஒன்றாக சந்திப்போம், சாப்பிடுவோம்? என் கப் கேக் என்று அந்த கடிதத்தில் முடித்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.

    அவர் எழுதிய இந்த ரொமான்ஸ் கலந்த நன்றி கடிதம் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வரப்போகிறது என்பதையும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

    • கெஜ்ரிவாலுடன் நடத்திய 700 பக்க ‘வாட்ஸ்-அப்’ அரட்டைகள் ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ‘நார்கோ’ சோதனைக்கு உட்படவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி :

    டெல்லி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை தனது வக்கீலிடம் கொடுத்த கடிதம் மூலம் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இந்த முறை சுகேஷ் மதுபான ஊழல் வழக்கை தொடர்புபடுத்தி இருக்கிறார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலும், சுகாதார மந்திரியாக இருந்த சத்யேந்தர் ஜெயினும் தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரபல கட்சிக்கு தன்னை ரூ.75 கோடி கொடுக்கச் சொன்னதாகவும், தான் தனது ஆட்கள் மூலம் ரூ.15 கோடி கொடுத்ததாகவும் கூறி இருக்கிறார்.

    இது தொடர்பாக கெஜ்ரிவாலுடன் நடத்திய 700 பக்க 'வாட்ஸ்-அப்' அரட்டைகள் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ள சுகேஷ், உண்மையை கண்டறியும் 'நார்கோ' சோதனைக்கு உட்படவும் தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தென்மாநில கட்சித்தலைவருக்கு அளித்த ரூ.15 கோடி குறித்து கெஜ்ரிவாலும், சத்யேந்தர் ஜெயினும் குறிப்பிடும்போது 15 கிலோ நெய்யை கொடுக்குமாறு தெரிவித்ததாக கூறியுள்ளார். 'நெய்' என்றால் கோடி ரூபாய் என அர்த்தம் தரும் சங்கேத குறியீடு எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகரின் இந்த புதிய தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

    • சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • உன் இதயத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ளார்.

    தற்போது வெளியாகியுள்ள அக்கடித வரிகள் வருமாறு:-

    'என்னோட பொம்மா (அழகுப் பொம்மையே), நான் எனது பிறந்தநாள் வேளையில் உன்னை ரொம்பவே 'மிஸ்' செய்கிறேன். என்னைச் சுற்றி உனது சக்தி இல்லாது தவிக்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் என் மீதான உன் அன்பு எப்போதும் முடிவடையாது, என் மீது முழுமையாக உள்ளது என்பதை நானறிவேன். உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதற்கு எந்தச் சான்றும் தேவையில்லை. உன் அன்புதான் எனக்கு முக்கியம் பேபி.

    நான் உன்னை 'மிஸ்' செய்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். என் 'பொட்ட பொம்மா' (கொழுகொழு பொம்மையே)... நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாய். நீயும், உனது அன்பும் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசுகள். என் வாழ்வில் அவை விலைமதிப்பற்றவை. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என்பதை நீ அறிவாய். என் பேபியே... உன்னை நேசிக்கிறேன். உன் இதயத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. எனது பிறந்தநாளில் வாழ்த்திய என்னுடைய அனைத்து ஆதரவாளர்கள், நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நூற்றுக்கணக்கான கடிதங்கள், வாழ்த்துகளைப் பெற்றேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நன்றி.'

    இப்படி நெகிழ்ந்து, மகிழ்ந்து, காதலை பிழிந்து கடிதம் எழுதியிருக்கிறார், சுகேஷ் சந்திரசேகர்.

    • ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது இதயம் வலிக்கிறது.
    • 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி :

    பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    கைதிகளுக்கு உதவும் விஷயத்தில் நீதித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள விசாரணைக் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ முயற்சி எடுக்கவில்லை. அன்பான உறவுகள் சிறையில் இருப்பதால் பல குடும்பங்களில் தற்கொலைகள் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே, உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும் கைதிகளுக்கு ஒரு மனிதனாக ரூ.5 கோடியே 11 லட்சம் நிதி வழங்க இருக்கிறேன்.

    இது முறையான வருவாய் மூலம் வந்த நிதியாகும். குற்றப்பின்னணியில் வந்தது அல்ல. அதற்கான ஆதாரங்களை காட்டுகிறேன். மார்ச் 25-ந் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் எனது பிறந்தநாள் பரிசாக இந்த சிறிய தொகையை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

    தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான பேருக்கு உணவளிக்கும் சாரதாம்மா தொண்டு நிறுவனம் மற்றும் சந்திரசேகர் புற்றுநோய் அறக்கட்டளை மூலம் பல நலத்திட்டங்களில் நானும், என் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளோம். ஏழை நோயாளிகளுக்கு மாதம்தோறும் இலவச ஹீமோதெரபியும் அளிக்கிறோம். ஜாமீனுக்கு பணம் செலுத்த வசதி இல்லாத கைதிகளைப் பார்க்கும்போது எனது இதயம் வலிக்கிறது. அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் குடும்பங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. எனவே நான் என்னால் இயன்ற இந்த குறைந்தபட்ச உதவியை செய்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதிருந்து தற்போதுவரை அவர் 400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் ஜாமீன் பெற உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

    • ஆம் ஆத்மி அரசு மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசினார்.
    • சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதானவர் பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். இவர் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் முன்பு திகார் சிறையில் இருந்தார்.

    அப்போது அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இதற்காக டெல்லி மந்திரிகளுக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இவருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே பின்னர் மோதல் போக்கு உருவானது. இதனால் ஆம் ஆத்மி அரசு மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசினார்.

    குறிப்பாக தென் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதற்கு தன்னிடம் அந்த கட்சி நிர்வாகிகள் குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பணம் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக கூறி பணம் பெற்றதாகவும் கூறினார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கோரினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு புறம்பானவை என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தலைவர்கள் மறுத்தனர்.

    இந்தநிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இன்னும் விசாரணை போய்க்கொண்டு இருக்கிறது.

    இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மணிஷ் சிசோடியா கைது பற்றி கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரசேகர், "உண்மை வென்றது" என்று பதில் கூறினார். மேலும் அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்தான். விரைவில் அவர் சிக்குவார்" என்றும் தெரிவித்தார்.

    • அமலாக்கத்துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
    • சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது அறையில் போலீசார் நடத்திய சோதனையில், பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. சிறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.

    • சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் எனக்கு இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
    • எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன.

    புதுடெல்லி :

    டெல்லி திகார் சிறையில் இருந்தவாறே, ரூ.200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவரோடு ஏற்கனவே நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர் பேசப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய நடிகைகள் உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சமீபத்தில் ஆஜர் ஆகியுள்ளனர்.

    அதைப்போல நடிகை சாகத் கன்னாவும் ஆஜராகி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சுகேஷ் சந்திரசேகருடனான சந்திப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. நடிகை கூறிய தகவல்கள் வருமாறு:-

    கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் டெல்லியில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அங்கு செல்ல நான் மும்பை விமான நிலையம் வந்தேன். அப்போது ஏஞ்சல் என்கிற பெண் எனக்கு அறிமுகம் ஆனார். இவர்தான் சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி இரானி என்பது எனக்கு பின்னர்தான் தெரியும். அவரும் என்னோடு டெல்லி வருவதாக கூறினார்.

    நாங்கள் டெல்லியில் இறங்கியதும் காரில் பள்ளிக்கு புறப்பட்டோம். ஆனால் வழியில் மற்றொரு காரில் ஏஞ்சல் என்னை ஏற்றினார். அந்த கார் திகார் சிறைக்கு சென்றது. நான் இது தவறான வழி என கூறினேன். அதற்கு ஏஞ்சல், இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் எனக்கூறி சுகேசின் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

    அந்த அறையில் விலைஉயர்ந்த ஆடம்பர பொருட்கள் இருந்தன. அங்கிருந்த நபர் (சுகேஷ்) தன்னை சேகர் ரெட்டி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் விலைஉயர்ந்த வாசனைத்திரவியம் அடித்து இருந்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும், டி.வி. சேனல் வைத்திருப்பதாகவும் கூறினார். தேர்தலின்போது மின்னணு எந்திரத்தை சேதப்படுத்திய வழக்கில் சிறையில் இருப்பதாகவும், பெரிய புள்ளி என்பதால் ராஜமரியாதை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

    நான் நடித்த டி.வி. சீரியல்களை விரும்பி பார்த்ததாகவும், என்னை மிகவும் பிடித்துப்போனதாகவும் கூறினார். பின்னர் திடீரென என் முழங்காலில் மண்டியிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். நான் எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதை சொன்னேன். அதற்கு அவர், "உன் கணவன் சரியானவன் அல்ல, நான் உன் குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறேன்" என்றார். உடனே நான் சத்தம் போட்டு அலறினேன். ஆனாலும் சிறை என்பதால் எனக்கு பயமாக இருந்தது. எப்படியாவது அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். பின்னர் எப்படியோ ஏஞ்சல் என்னை வெளியே அழைத்து வந்துவிட்டார்.

    பிறகு என்னிடம் அவள் ரூ.2 லட்சம் பணம் அன்பளிப்பாக தந்தாள். அவளுடைய கைக்கடிகாரத்தையும் கழற்றித் தந்தாள். நான் மும்பைக்கு சென்றபிறகு எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. திகார் சிறைக்காட்சிகள் தங்களிடம் வீடியோவாக இருப்பதாகவும், அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறி ரூ.3 லட்சம் பணத்தை என்னிடம் பறித்து விட்டனர்.

    சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் எனக்கு இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார். என் குழந்தைகளை அக்கறையாக விசாரித்து, எனக்கு ஏதாவது தேவையா? என்றும் கேட்டுள்ளார். இந்த சம்பவங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் ரூ.200 கோடி மோசடி பற்றிய செய்திகள் வந்தன. அதன்பிறகே சுகேஷ் யார்? ஏஞ்சல் யார்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்.

    இவ்வாறு சாகத் கன்னா கூறியுள்ளார்.

    • சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள்.
    • சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள்.

    புதுடெல்லி :

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு, தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருடைய மனைவி லீனா பவுலோசும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ரூ.500 கோடி தருமாறு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கேட்டதாகவும், தனக்கு மாநிலங்களவை பதவி வழங்க ரூ.50 கோடி அவர் பெற்றதாகவும், சிறையில் தனது பாதுகாப்பு மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடி, சிறைத்துறை டி.ஜி.பி. ரூ.12.5 கோடி பெற்றதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பண பரிமாற்ற விவகாரங்கள் டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரி கைலாஷ் கெலாட் வீட்டில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவாலும், அமைச்சர்களும் மறுத்தனர். தேர்தலுக்காக பா.ஜனதா நடத்தும் வேலை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை இல்லையெனில் தன்னை தூக்கிலிடலாம், மாறாக உண்மை என்றால் கெஜ்ரிவால் என்ன செய்வார்? என்றும் சுகேஷ் சந்திரசேகர் சவாலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே, தனது குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவும் கவர்னரை வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் அவர் தன் வக்கீல் அசோக் கே.சிங் மூலம் கவர்னருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக மிக முக்கியமான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். இதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் எனக்கும், என் மனைவிக்கும் தீங்கு விளைய நேரிடும். இதற்கிடையே எனக்கு சமரச தூது வருகிறது. சமரசம் ஆகாவிட்டால் சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள். 2 நாட்களுக்கு முன்புகூட சிறையில் என்னை உடல்ரீதியாக தாக்கினார்கள். எனவே, நீதியின் நலனுக்காக இதில் விசாரணை முடியும்வரை என்னையும், என் மனைவியையும் டெல்லிக்கு வெளியே உத்தரபிரதேசம், அரியானா அல்லது உத்தரகாண்டில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள். நாங்கள் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம்" என்று கெஞ்சலாக சுகேஷ் சந்திரசேகர் கேட்டுள்ளார்.

    இந்த தகவல்களை அவருடைய வக்கீல் நேற்று தெரிவித்துள்ளார்.

    • சுகேஷ் சந்திரசேகர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
    • காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் முதல் கோரிக்கையை வைத்துள்ளார்.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜோய்குமார் அதற்கான முதல் கோரிக்கையை வைத்துள்ளார். ஒரு முதல்-மந்திரிக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கியதை ஒருவர் தெளிவாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறை என்று கூறியுள்ள அவர், எனவே அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    • குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் வெளியானது.

    புதுடெல்லி :

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது சமீபத்திய கடிதத்தில், டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது உண்மை இல்லை என்றால், தனது முந்தைய புகாரை வாபஸ் பெறுமாறு சிறை நிர்வாகம் ஏன் என்னை வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள். அதேநேரம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் நேற்று வெளியானது. அதில், 'நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திருப்பிவிட்டிருக்கின்றன' என்று சுரேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால், சிறை நிர்வாகம் தன்னை ஏன் வற்புறுத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்த குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.
    • சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தற்போது ஆம் ஆத்மி கட்சி மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லி திகார் சிறையில் தான் இருந்தபோது தனது சொகுசு வாழ்க்கைக்கும், பாதுகாப்புக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதாக டெல்லி கவர்னர் வினய்குமார் சக்சேனாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் ரூ.10 கோடியும், சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் ரூ.12.5 கோடி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    மேலும் தென் மாநிலங்களில் கட்சிக்கு ஆட்கள் சேர்க்க ஆம் ஆத்மி கட்சி தன்னிடம் ரூ.500 கோடி கேட்டதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மந்திரிகள் சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் "இந்த குற்றச்சாட்டுகள் கற்பனையானவை, குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா நடத்தும் வேலை இது' என கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது வக்கீல் மூலம் மீண்டும் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கிறார்.

    அதில், 'சிறையில்தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி கட்சி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று டெல்லி கவர்னரை வலியுறுத்தியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

    சுகேஷ் சந்திரசேகர் கூறிய இந்த விஷயங்களை டெல்லி பா.ஜனதா தீவிரமாக எடுத்துள்ளது. சுகேஷ் கூறியபடி சி.பி.ஐ. விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறு டெல்லி கவர்னரை பா.ஜனதா வலியுறுத்த உள்ளது. இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க இருப்பதாக டெல்லி பா.ஜனதா தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

    ×