என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் விதர்பா அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.
நாக்பூர்:
ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, கேரளா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
விதர்பா அணி 3-வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்நிலையில், டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, விதர்பா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பர்த் ரிகாடே டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய தர்ஷன் நலகண்டே ஒரு ரன்னில் வெளியேறினார். துருவ் ஷோரே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். விதர்பா அணி 24 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு டானிஷ் மாலேவர் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. கருண் நாயர் அரை சதம் கடந்து 86 ரன்னில் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி215 ரன்கள் குவித்தது.
பொறுப்புடன் ஆடிய மாலேவர் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் விதர்பா அணி 86 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. டானிஷ் மாலேவஎ 138 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, அமெரிக்கா செல்லும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்துள்ளார்.
அப்போது, ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா வருகிறார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்னும், விரிந்தா தினேஷ் 33 ரன்னும் எடுத்தனர்.
மும்பை சார்பில் நாட்-சீவர் பிராண்ட் 3 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிருதி குப்தா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. யஸ்திகா பாட்டியா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஹைலே மேத்யூஸ், நாட்-சீவர் ப்ரண்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினர் . இருவரும் அரைசதம் கடந்தனர். ஹைலே மேத்யூஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் நட் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், மும்பை அணி 17 ஓவரில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.
- மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
- அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்தது. பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இதற்காக ஒர் இடைக்கால நகரமே உருவாக்கப்பட்டது.
கடந்த 45 நாட்களாக எந்தவித பெரிய அசம்பாவிதம் இன்றி மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும், பல்தர்களும் அலை அலையாக வந்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், கும்பமேளாவில் புனித நீராடுவோர் எண்ணிக்கை 45 கோடி எட்டும் என எண்ணியிருந்த நிலையில், 66 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் இப்ராகிம் ஜத்ரன் 177 ரன்கள் விளாசினார்.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் பி பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது.
37 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.
அஸ்மதுல்லா 41 ரன்னும், ஹஷ்மதுல்லா ஷஹிடி, முகமது நபி தலா 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட்டானார். 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்-ஜாஸ் பட்லர் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். பென் டக்கெட், ஜாஸ் பட்லர் தலா 38 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஓவர்டன் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.
ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் யூகோ ஹம்பர்ட் தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என யூகோ ஹம்பர்ட் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் யூகோ ஹம்பர்ட் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.
பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் சமீபத்தில் நடந்த ஏபிடி ஓபன் 13 டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள்.
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,"ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா" போன்று நடைபெறுகிறது எனப் புகழாரம் சூட்டினார்.

இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-
சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.
இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
பிராயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது.
ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.
இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் "ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிற ஞானி" என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்கள்.

சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின்போது அவரோடு நானிருந்தேன். சத்குரு உங்களை பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன். நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.
அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி.
தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மகா சிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்வு.
சத்குரு இந்த மகா சிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசினார். இதில் அவர்," நம்முடைய உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார்.
காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். ஆர்டிக்கிள் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள்.
நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு நன்றி.
இன்று மகா சிவராத்திரி எந்த ஜாதி, மதம், பாலினத்தவராக இருந்தாலும் உயிர் சக்தி மேல் எழுவதற்கான நாள். ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்னிடம் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மஹாசிவராத்திரிக்கு வரலாமா எனக் கேட்டார், அதற்கு நான் கூறியது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் குறிப்பாக இந்துக்கள் யாரும் வர முடியாது.
மனிதர்கள் மட்டுமே மஹாசிவராத்திரிக்கு வர முடியும் என பதிலளித்தேன். இது மனித குலத்திற்கான கொண்டாட்டம். நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர். ஆதியோகி வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறார். ஆதியோகி நாட்டின் பல்வேறு இடங்களில் வர உள்ளார்" என்றார்.
மேலும், ஆதியோகி முன்பு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருந்த கயிலாய மலை போன்ற அரங்கமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலியை சத்குரு வெளியிட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகில் 300 கோடி மக்களை தியானத்தில் ஈடுபடுத்தினால் உலகளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நள்ளிரவு சந்தியா கால நேரத்தில் சத்குரு திருவைந்தெழுத்து மஹா மந்திர தீட்சையினை வழங்கி சக்திமிக்க தியானங்களை வழி நடத்தினார்.

ஈஷா யோக மையத்திற்கு மாலை வந்தடைந்த அமித் ஷா அவர்களை சத்குரு சூர்ய குண்ட மண்டபம், நாகா சன்னதி, லிங்க பைரவி சன்னதி மற்றும் தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய அழைத்து சென்றார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித் ஷா அவர்கள் கலந்து கொண்டார்.
ஈஷா புராஜக்ட் சமஸ்கிருதி குழுவினரின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் மக்களை இரவு முழுவதும் விழிப்புடன் வைத்திருந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் ஆகியோர் பங்கேற்றனர்.
- வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது.
- மார்ச் 2-ந்தேதி கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ளது. இந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அணியுடன் சென்றிருந்தார்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் கடந்த 20-ந்தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அவசரமாக மோர்னே மோர்கல் சொந்த நாடு திரும்பினார்.
இதனால் இந்தியா வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது. இந்த நிலையில் இன்று மோர்னோ மோர்கல் இந்த அணியுடன் இணைந்துள்ளார்.
ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது மோர்னே மோர்கலா் கவுதம் கம்பீர் உடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 2-ந்தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
- 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.
- தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய தானம்.
மதுரை மாவட்டம் மேலூர அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடு மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன்- தமிழ்ச்செல்வி தம்பதியர் தானமாக வழங்கியுள்ளனர்.
தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களது நிலத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலத்தை வழங்கிய தம்பதிக்கு கிராம மக்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
- கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் உத்தரவு
- கர்நாடக மாநில சபாநாயகரின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு ஓய்வெடுக்க பிரத்யேக சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க வெளியில் செல்வதால் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநில சபாநாயகரின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர்.
- திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வென்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர்.
ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய ஆட்சிப் பணியில் 1984-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்.
ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.
2018-ல் பணிஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு முன்னாள் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார்.
திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை.
- ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான்.
சாதி, மதம் அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






