என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்
    • பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்த வெற்றியை இந்திய வீரர்கள் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா அவரது ஸ்டைலில் கொண்டாடினார். பிட்ச் மத்தியில் கோப்பையை வைத்து பாண்ட்யா இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல ஸ்டைலாக போஸ் கொடுப்பார்.

    2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற போதும் அவரது தனித்துவமான ஸ்டைலில் போஸ் கொடுத்தார். அதே மாதிரி இந்த முறையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியுடன் ஹர்திக் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். பதிவிட்ட 6 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குளை பெற்றுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். இந்தப் பதிவு தற்போது 16 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    • எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை
    • அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது

    தென்னிந்திய திரையுலகில் 90களின் இறுதியில் தொடங்கி 2000களில் அவர் உயிருடன் இருந்தவரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சௌந்தர்யா.

    ரஜினியின் படையப்பா, அருணாச்சலம், கமலின் காதலா காதலா, விஜயகாந்தின் சொக்கத்தங்கம் என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அங்கு அறியப்பட்ட முகமாக இருந்தவர் சவுந்தர்யா.

    கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் தனது 31 ஆவது வயதில் சௌந்தர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலையை அந்த சமயத்தில் ஏற்படுத்தி இருந்தது.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா. சினிமா கனவினால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்க வந்தார். முன்னணி நடிகையாகவும் உருவெடுத்தார். சௌந்தர்யாவுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக்கிடந்தனர்.

     

    அவருக்கு 2003 இல் ரகு என்ற சாப்ட்வேர் இன்ஜினீயருடன் திருமணமும் நடந்தது. 2004 இல் விபத்து நடந்த அன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அரசியல் பிரசாரதிற்காக கரீம்நகரில் இருந்து விமானத்தில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சௌந்தர்யா புறப்பட்டார்.

    ஆனால் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளனத்தில் இருவரும் உயிரிழநதனர். அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது. எவ்வளவு தேடியும் அவரின் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. திரையுலகில் இன்று வரை இது ஒரு துயர சம்பவமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல திட்டமிடப்பட்ட கொலை என நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக சந்தேகம் கிளப்பியுள்ளார்.

    ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.

    விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை.

    இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.

    • குட் பேட் அக்லி திரைப்பட்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.

    விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

     

    இதனிடையே தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்து முடித்த நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.

    அதன்படி நடிகர் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு, குட் பேட் அக்லி வெளியீட்டை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை சந்தித்த தமிழக குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிய நிகழ்வுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன.
    • அரிய நிகழ்வை இந்தியாவில் காண்பதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

    வானில் நிகழும் அரிய நிகழ்வுகள் வானியல் ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வகையில் சந்திர கிரகணம் தோன்றும் காட்சியை பார்த்து ரசிப்பார்கள்.

    சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரகிரகணம் ஏற்படும்.

    இந்த நிகழ்வின் போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும். அப்போது பூமியின் வளிமண்டலம் குறுகிய அலை நீள நீல ஒளியை வடிகட்டும். சந்திரன் பூமியின் நிழலுக்குள் இருக்கும் இந்த நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும். இதை 'ரத்த நிலா' (பிளட் மூன்) என்பார்கள்.

    இந்த ரத்த நிலா வருகிற 14-ந்தேதி தோன்றுகிறது. இந்திய நேரப்படி காலை 9.27 மணிக்கு தொடங்கி மதியம் 12.28 மணிக்கு உச்சத்தை அடையும். மாலை 3.30 மணிக்கு முடிவடையும்.

    இந்த அரிய நிகழ்வுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்த சந்திர கிரகணத்தை அண்டார்டிகாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதி, மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா, வடக்கு ஜப்பான், கிழக்கு ரஷியா முழுவதும் பார்த்து ரசிக்கலாம். முழு சந்திர கிரகணம் 65 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.

    இதே அரிய நிகழ்வை இந்தியாவில் காண்பதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 7-ந்தேதி ரத்த நிலவு இந்தியாவில் தெரியும். 2025-ம் ஆண்டின் 2-வது முழு சந்திரகிரகணமாக தோன்றும். இந்த நிகழ்வு அன்றைய தினம் அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.52 மணி வரை நீடிக்கும். முழு சந்திர கிரகணமாக ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடிக்கும்.

    அப்போது தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட பல பகுதிகளிலும் தெளிவாக பார்க்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது?
    • பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம்.

    வெண்ணெய்! ஆரோக்கியமான உணவுதான். ஆனால் அதே வெண்ணெயை அன்றாடம் 10 கிராம் அளவுக்கு சேர்த்தாலே உயிருக்கு உலை வைத்து விடும் என்ற ஆராய்ச்சி முடிவுகள் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    2.21 லட்சம் பேரிடம் கடந்த 33 வருடங்களாக ஆராய்ச்சி செய்து உள்ளார்கள். அவர்களின் உணவு முறைகளில் வெண்ணெய் பயன்பாட்டை பகுத்து பார்த்ததில்தான் இதை கண்டுபிடித்து உள்ளார்கள்.

    வெண்ணெயில் நிறைய கொழுப்பு சத்து அடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக லிப்போ புரோட்டீன் மற்றும் கெட்ட கொழுப்பு மிகுந்து உள்ளது. இவைகள் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் படர்ந்து ரத்த குழாய்களில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 10 கிராம் வெண்ணெய் உடலுக்குள் தினமும் சென்றால் 7 சதவீதம் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதாக கண்டுபிடித்து உள்ளார்கள்.


    இதற்கு நேர்மாறாக சமையலுக்கும், உணவிலும் தாவர எண்ணைகளை பயன்படுத்தினால் இதய நோய்க்கான வாய்ப்பு 6 சதவீதம் குறைவதாக தெரிய வந்து உள்ளது. அமெரிக்காவில் ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், கனோலா போன்ற எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறார்கள். வட இந்தியாவிலும் கடுகு எண்ணெயை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதில் ஆபத்து குறைவு என்கிறார்கள்.

    நம்ம வீடுகளில் வெண்ணெய் பயன்பாடு குறைவுதானே? சமையல் எண்ணெய் தானே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்க தோன்றும்.

    சுத்தமான 'ரீபைன்டு சூரிய காந்தி எண்ணெய் என்று பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் நம் கண்ணில் படுகின்றன. நம்பிக்கையோடு மாதம் தோறும் வாங்கி வருகிறோம்.


    வெண்ணை கலந்த உணவு வகைகள்


    ஆனால் இந்த எண்ணெயும் சுத்தமானது இல்லை. நாட்டில் விளையும் சூரிய காந்தி விதையின் அளவையும் தயாராகும் எண்ணெயின் அளவையும் ஒப்பிட்டால் இந்த உண்மை தெரிய வரும். இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது அதிக அளவு ஆல்டிஹைடுகளை அதாவது நச்சு கலவைகளை வெளியிடுவதாக கண்டறிந்து உள்ளனர். இது உடலின் டி.என்.ஏ. மற்றும் செல்களை சேதப்படுத்தும். இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது தனிக்கதை.

    இனி, வெண்ணெய்க்கு வருவோம்... வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது? பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம். நூடுல்ஸ், பாஸ்தா செய்யும் போது சுவைக்காக வெண்ணெய் சேர்க்கிறார்கள். கேக், பிரட் ஆம்லெட், பட்டர்நான், பன்னீர்பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் உள்பட சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளில் சுமார் 95 விதமான உணவு பொருட்கள் என்று அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் மூலம் நமக்கு தெரியாமலே வெண்ணெய் அதிக அளவில் நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

    பசும் பாலை காய்ச்சி உறைய வைத்து கடைந்து எடுப்பது தானே வெண்ணெய்... அதிலும் இவ்வளவு ஆபத்தா? இதற்கு அரசு இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் தீபா கூறியதாவது:-

    மில்க் புரோட்டீன் நல்லதுதான். ஆனால் அவ்வாறு சுத்தமாக கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் விலைக்கு நிச்சயம் கொடுக்க முடியாது.

    குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும். சுவையும் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்ணையில் சல்பர், விலங்கு கொழுப்புகள், மாக்ரைன் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான். இதனால் தான் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. சீஸ், மயோனைஸ் போன்ற உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தாவர எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது தான். அதையும் குறைந்த அளவு பயன்படுத்தலாம்.

    பொதுவாக ஒரே எண்ணெயை நீண்ட நாள்கள் பயன்படுத்தக் கூடாது. வெவ்வேறு எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றார்.

    • டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள்.
    • எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர் தோழனான எலான் மஸ்க் நடத்தும் கார் கம்பெனியான டெஸ்லாவுக்கு அண்மை காலமாக விளம்பரம் செய்து வருகிறார்.

    டெஸ்லா காரை அனைவரும் வாங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கென சிவப்பு நிற மாடல் S டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியுள்ளார். எலான் மஸ்க்குடன் சேர்நது அந்த காரில் டிரம்ப் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    டெஸ்லா நிறுவன கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் அந்நிறுவனம் சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மஸ்க்கின் கார்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, டெஸ்லா கார்  வாங்குவதாக டிரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகை வளாகத்தில் டெஸ்லா கார்களில் காட்சிப்படுத்தல் நிகழ்ந்தது. அப்போது பல வகை டெஸ்லா மாடல் கார்களை பார்வையிட்ட டிரம்ப், தனக்கு பிடித்தது என கூறி மாடல் S சிவப்பு பெயிண்ட் அடித்த காரை விலைக்கு வாங்கியுள்ளார். எலான் மஸ்க் தள்ளுபடி அளிப்பதாக கூறியும் அதை ஏற்காத டிரம்ப், காரின் ஒரிஜினல் விலையான 76,880 டாலரை (சுமார் ரூ. 67 லட்சம்) கொடுத்து பேரத்தை முடித்துள்ளார்.

    இதற்கிடையே டெஸ்லா ஷோரூம்கள், சார்ஜிங் நிலையங்கள் மற்றும் டெஸ்லா வாகனங்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும், எலான் மஸ்க் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள், பதாகைகளுடன் போராட்டங்கள் நடக்கின்றன.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், டெஸ்லாவுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள். அவர்கள் எங்கள் கையில் சிக்கும்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கொந்தளித்தார்.

    • கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார்.
    • வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

    மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.

    * மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    * பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.

    * 1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது.

    * 1968-ல் இருந்து மும்மொழி கொள்கை பேசப்பட்டு வந்தாலும் இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.

    * கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?

    * வெற்றிகரமான ஒரு கல்வி முறையை நீக்கிவிட்டு தோல்வி அடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா?

    * தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம்.

    * கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது.

    * வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது.

    * வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

    * இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி கோட் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்தனர்.
    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

    இந்தப் படத்தின் முடிவில் இதன் அடுத்த பாகம் உருவாகலாம் என்பதை உணர்த்து்ம காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனினும், இதுபற்றிய கேள்விகளுக்கு கற்பனை அடிப்படையில் தான் அப்படியான காட்சிகள் வைக்கப்பட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஆனாலும், எதிர்காலத்தில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தி கோட் படத்தின் அடுத்த பாகம் அதாவது தி கோட் vs ஓ.ஜி. (OG) படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "தி கோட் vs ஓ.ஜி. படம் குறித்த அப்டேட் 2026-ம் ஆண்டுக்கு பிறகு வெளியாகும்," என்று தெரிவித்தார்.

    தி கோட் படத்தில் நடிகர் விஜயுடன் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, கோமல் ஷர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ந் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

    அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    கேரளாவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்கின்றனர்.

    இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை தமிழக குழு சந்தித்தது.

    ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவுடனும் ஜெகன் மோகனை சந்தித்து பேசிய தி.மு.க. குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.

    • ரிஷப்பண்டின் தங்கை சாக்‌ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார்.
    • திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார்.

    டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்டின் தங்கை சாக்ஷி, தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான அங்கித் சவுத்ரியை மணக்கிறார். இவர்களது திருமணம் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. 

    இதையொட்டி திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் ஐ.பி.எல். பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி நேற்று கிளம்பி சென்றார். இதே போல் சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தோனி, சுரேஷ் ரெய்னா, நிதிஷ் ரானா, ரவி சாஸ்திரி ஆகியோர் குத்தாட்டம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ரிஷப் பண்டின் தங்கை திருமணத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
    • தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு யாருக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயம் மற்றும் ஆதாரத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றினார். தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.

    பல்கலைக்கழக படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவியையும், அவரது நண்பரான மாணவரையும் பார்த்த ஞானசேகரன், மாணவரை தாக்கி கல்லூரி அடையாள அட்டையை பறித்தார். பின்னர் அவர்களை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை டீன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாகவும் மிரட்டினார். அவர்கள் கெஞ்சியதால் மாணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியின் செல்போனை பிளைட் மோடுக்கு மாற்ற சொன்னார். பின்னர் மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். தான் பல்கலைக்கழக அதிகாரி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக யாரிடமோ போனில் பேசுவதாக நடித்து, "சார், நான் மாணவியை எச்சரித்து போக விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

    மாணவி பெற்றோரின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அதை அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளன.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஞானசேகரன் பயன்படுத்திய செல்போனின் அழைப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர் மாணவியை மிரட்டுவதற்காக யாருடனோ செல்போனில் பேசுவது போல் நடித்து, அவரை 'சார்' என்று சும்மா அழைத்தார். உண்மையில் சார் என்று யாரும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    ×