என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீரரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான கார்லோஸ் அல்காரஸ், பெல்ஜியத்தின் டேவிட் காபின் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 5-7 என இழந்த காபின், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் நம்பர் 2 வீரரான அல்காரஸ் தொடரின் முதல் சுற்றில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தன
    • பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:

    * தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்.

    * சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர்

    * திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதி மறுப்பு திருமணங்கள் நடந்தன என்று கூறினார்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவின் இந்த பேச்சால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
    • ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    தெற்கத்திய காசா எல்லையில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 19 பேர் உயிரிழந்தனர் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் ஏமனில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    ஹவுதிக்கள் ஏவிய ஏவுகணையை இடைநிறுத்தம் செய்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. தெற்கத்திய காசா பகுதிகளில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிறகு 17 உடல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என ஐரோப்பிய மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றொரு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு தாக்குதலில் உயிரிழந்த பெண் மற்றும் குழந்தையின் உடல் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதாக குவைத் மருத்துவமனை தெரிவித்தது.

    இதேபோல் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான சலா அல்-பர்தவீல் மற்றும் அவரது மனைவி தாக்குதல்களில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடந்த வாரம் முடிவுக்கு கொண்டு வந்து, திடீரென கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹவுதிக்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

    • தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • வரும் 27, 28, 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25, 26-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    வரும் 27, 28, 28-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • 43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் ஆவார்.

    பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
    • பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.

    ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.

    இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.

    ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.

    பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.

    இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

    அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதமே திறப்பு விழாவை நடத்த ரெயில்வே நிர்வாகம் தயாரானது. ஆனால் பல்வேறு காரணங்களால் திறப்பு விழா நடத்துவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

    இப்போது இந்த பாலத்தை பிரதமர் மோடி திறப்பது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) திறப்பு விழா நடக்கிறது.

    திறப்பு விழா ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா உள் ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ராமேசுவரம் வந்தனர். இந்த குழுவினர் மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை பார்வையிட்டனர். பின்னர் பாம்பன் பாலத்தில் நின்று புதிய, பழைய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் கூறியதாவது:-

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை இன்னும் 2 வாரங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் திறப்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பழைய ரெயில் பாலத்தை அகற்றுவது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரே ராமேசுவரம் ரெயில் நிலையப் பணிகள் முடிவடையும் என்றார்.

    மீண்டும் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலமாக ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

    திறப்பு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் செய்யப்பட வேண்டிய விரிவான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள கோவில் கட்டிட வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அந்த இடத்தில் மேடை அமைப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் மண்டபம் பொதுப் பணித்துறை ஹெலிபேட் தளம், குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷார் தலைமையிலான ரெயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் உறுதியாகவில்லை. ஏப்ரல் முதல் வாரத்தில் 5-ந்தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும் இலங்கை அதிபருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பயணத்தின்போது அவர் பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்க வரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் வெளிநாட்டு பயணத்துடன் இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் பிரதமர் மோடி ராமேசுவரம் வருவதை உணர்வுப் பூர்வமாக கருதக் கூடியவர். காசியை போல் ராமேசுவரத்துக்கு செல்வதையும் புனித பயணமாக கருதுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராமேசுவரம் வந்தபோது அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்கினார். அப்போது மெத்தையில் தூங்குவதை கூட தவிர்த்து தரையில் பாயில் படுத்து உறங்கினார். மறுநாள் ராமநாதசாமி கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார்.

    எனவே இந்த முறையும் ராமேசுவரம் வருகையை தனித்துவமாக இருப்பதையே விரும்புவார். எனவே அடுத்தமாதம் (ஏப்ரல்) 3-வது வாரத்தில் பால திறப்பு விழாவுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த மாத இறுதிக்குள் தேதி உறுதியாகி விடும் என்றார்கள்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.

    கோவை:

    சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை கோவை மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த டாக்டர்களுடன் இணைந்து திடீர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அவசரகால இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்த நோயாளிகளின் பெயர் விவரங்களை குறித்துக்கொண்டார்.

    பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட நோயளாளிகளை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். மேலும் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த நோயாளிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்புகொண்டு பேசினார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அந்த நோயாளிகளிடம் தொடர்ந்து மேல்சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா என்ற தகவலையும் உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போது அவர்கள், தாங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக அமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அங்கு இருந்த மேலும் பல்வேறு பதிவேடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.

    சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தியபோது அவருடன் மாவட்ட சுகாதார நல அலுவலர் டாக்டர் பாலுசாமி, புகலூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், உதவி மருத்துவர் டாக்டர் இலக்கியா மற்றும் நர்சுகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அமைச்சர் சுப்பிரமணியன் ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கோவை வழியாக சென்றார். அப்போது அவர் அதிரடியாக புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
    • பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார்.

    இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர்.

    இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

    இந்த நிலையில் மெகுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.

    அவர் மூலம் மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அவருக்கு பெல்ஜியத்தின் எப் ரெசிடென்சி கார்டு விசா வழங்கப்பட்டு உள்ளது. குடியுரிமை பெறுவதற்காக மெகுல் சோக்சி இந்தியா, ஆண்டிகுவா குடியுரிமைகளை மறைத்து போலி தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

    தற்போது மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிகிறது. மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதையடுத்து அவரை நாடு கடத்த பெல்ஜியத்தில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    • கனகராஜ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
    • இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி வடக்கு தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    தமிழக அரசின் அலட்சியம் காரணமாக 1½ ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • KKR-க்கு எதிரான போட்டியில் கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியின் 13 ஆவது ஓவரின் கோலி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் கோலியின் கால்களில் விழுந்தார். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.

    பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அத்துமீறி நுழைந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

    விராட் கோலியின் கால்களில் ரசிகர் விழுவது இது முதல் முறையல்ல. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தப் படம் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
    • எம்புரான் படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    எம்புரான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் படத்தின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "நாங்கள் இந்தப் படத்தின் பட்ஜெட்டை அறிவிக்கவே இல்லை. நீங்கள் இந்தப் படத்தை பார்க்கும் போது, பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களோ அதுதான், இந்தப் படத்தின் பட்ஜெட். ஆனால், அது நிச்சயம் நீங்கள் நினைப்பதை விட நிச்சயம் அதிகமாகவே இருக்கும். இது தான் மலையாள சினிமா," என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பல வீரர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது.
    • பல சம்பவங்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வெறும் டி20 கிரிக்கெட் தொடர் என்ற நிலையை கடந்துவிட்டது. இன்று கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொடராக ஐ.பி.எல். மாறியுள்ளது. அணி மாறும் வீரர்கள், சொந்த ஊர், வீரர்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள் போட்டியின் போது ஏற்படும் பரபர சம்பவங்கள் இந்த தொடர் பிரபலமாகவே விளங்குவதற்கு காரணமாக இருக்கின்றன.

    கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஐ.பி.எல். தொடர் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை கண்டே வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் பல வீரர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது. மேலும், பல வீரர்கள் வாய்ப்பை இழக்கவும் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில், ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை அரங்கேறிய, பேசு பொருளாக மாறிய ஐந்து சர்ச்சைக்குரிய சம்பவங்களை தொடர்ந்து பார்ப்போம்..

     

    ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் சிங்:

    2008ல் அறிமுக தொடரின் போது தான் முதல் சர்ச்சைக்குரிய சம்பவம் அரங்கேறியது. தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது தான் அந்த சம்பவம் நடந்தது. போட்டி முடிந்த பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங் களத்தில் வைத்தே பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தை கண்ணத்தில் அறைந்துவிட்டார்.

     

    பாதுகாவலர்களிடம் ஷாருக் கான் வாக்குவாதம்:

    2012ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனில் அந்த ஆண்டு மே 16ம் தேதி நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு ஷாருக் கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் அந்த மைதானத்திற்குள் நுழைய ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

    ஸ்பாட் ஃப்கிசிங் விவகாரம்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கருப்பு பக்கங்களில் சிக்கிய விவகாரம் தான் ஸ்பாட் ஃபிக்சிங். பெட்டிங் தரகர் சுனில் பாட்டியா கைதுக்கு பிறகு நடந்த விசாரணையில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலியா மற்றும் அங்கீத் சாவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோரும் சட்டவிரோத பெட்டிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    விராட் கோலி - கவுதம் கம்பீர் மோதல்:

    2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றின் போது இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் களத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியின் போதும் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவத்திற்காக இருவரின் போட்டி ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    களத்தில் வாக்குவாதம் செய்த எம்.எஸ். தோனி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 2019ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரின் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் போது களத்திற்குள் நுழைந்து அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. எனினும், எம்.எஸ். தோனிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ×