என் மலர்
தலைப்புச்செய்திகள்
- விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது.
- பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை:
விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. கடைபிடித்து வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
இப்போது தான் விஜய் உங்களுக்கு பெரியதாக தெரிகிறார். ஆனால், விஜய் சிறிய பையனாக இருந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். என்னை பொருத்தவரையில் அவர் எனது மகன் போன்றவர். அவருக்காக 'செந்தூரபாண்டி' படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தார். இன்று அவர் நன்றாக இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதற்காக அவர் விஜயகாந்த் படத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.
- அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
- அதில், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
அங்காரா:
அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு கடிதம் எழுதியிருந்ததைப் பாராட்டினார்.
தொடர்ந்து, நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
- இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?
பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?
காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.
- மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
- அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி:
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சியின் திட்டங்களால் விவசாயிகள் நன்மை பெற்றுள்ளனர். திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகளின் பிரச்சனைகளை அனுபவ ரீதியில் உணர்ந்தவன் நான். இன்றும் என்னுடைய தொழில் விவசாயம்தான். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்தோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி ரகுபதியை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன்.
திமுக அமைச்சர்கள், முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.
கிட்னி விவகாரத்தில் எம்.எல்.ஏ. நக்கலாகப் பேசுகிறார். இப்படி நக்கலாக பேசவா ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? குடும்பக் கட்சியாக உள்ளது திமுக; மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக மட்டுமே என தெரிவித்தார்.
- கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசினார் பொல்லார்டு.
- இந்தியாவின் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் அடித்துள்ளார்.
செயின்ட்லூசியா:
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 13-வது சீசன் நடந்து வருகிறது.
செயின்ட்லூசியாவில் நடந்த போட்டியில் டிரிபாகோ அணி, செயின்ட்லூசியா அணியை சந்தித்தது. முதலில் ஆடிய டிரிபாகோ 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய செயின்ட் லுசியா 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன் வித்தியாசத்தில் டிரிபாகோ அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 29 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் விளாசிய டிரிபாகோ அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசிய 2-வது வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்டு.
பொல்லார்டு இதுவரை 128 போட்டியில் 203 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.
ஏற்கனவே செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் எவின் லீவிஸ் 200 சிக்சர் அடித்திருந்தார்.
ஒட்டுமொத்த டி 20 லீக் வரலாற்றில் இரு அணிகள் சார்பில் தலா 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் பொல்லார்டு. இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் (189 போட்டி) அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த டி 20 வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு (14,562 ரன், 1056 சிக்சர்) பிறகு அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரரானார் பொல்லார்டு (13,181 ரன், 941 சிக்சர்).
கெயில் 1056 சிக்சர்கள் உள்பட 14,562 ரன்கள் குவித்துள்ளார். இவரை தொடர்ந்து பொல்லார்டு 941 சிக்சர் உள்பட 13181 ரன்கள் அடித்துள்ளார்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
ஷிம்கென்ட்:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் பிரதாப் சிங் கைப்பற்றிய 3வது தங்கம் இதுவாகும். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளார்.
- உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன்தான்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார்.
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:
நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.
எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார்.
அகமதாபாத்:
அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர்
ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார். புஜாரா ஓய்வு குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் புஜாராவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, பூபேந்திர படேல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தின் பெருமைக்குரிய செதேஷ்வர் புஜாராவின் ஒரு குறிப்பிடத்தக்க கிரிக்கெட் பயணம். உங்கள் அமைதியான இருப்பு, குறைபாடற்ற நுட்பம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதி - குறிப்பாக இந்தியாவின் வரலாற்று வெளிநாட்டு வெற்றிகளில் - தேசத்திற்கு போற்றுவதற்கு எண்ணற்ற தருணங்களை அளித்துள்ளன. ராஜ்கோட்டிலிருந்து உலக அரங்கம் வரை குஜராத்தின் கிரிக்கெட் உணர்வை நீங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
- நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள 'லோகா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
- 'லோகா' படம் வரும் 28 ம் தேதி வெளியாக உள்ளது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் லோகா. இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது. துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 28 ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்தநிலையில், நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள 'லோகா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் வுமனாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.
- சல்மா அப்துல் ரசாக் என்ற மற்றொரு சிங்கப்பூர் பெண்ணை சந்தித்தார்.
- நாகூரில் முஸ்லிம் வழக்கங்களின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வைத்தியலிங்கம் முத்துக்குமார் (49) என்பவர் 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் மனைவியை மணந்தார். 2011 முதல் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வைத்திலிங்கம் மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார்.
அப்போது சல்மா அப்துல் ரசாக் என்ற மற்றொரு சிங்கப்பூர் பெண்ணை சந்தித்தார். அந்த அறிமுகம் திருமணத்திற்கு புறம்பான உறவில் முடிந்தது.
தனக்கு குழந்தைகள் வேண்டும் என்றும், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் சல்மாவை நம்ப வைத்தார். முத்துக்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்து கொள்ள சல்மா ஒப்புக்கொண்டார்.
ஆகஸ்ட் 2022 இல், நாகூரில் முஸ்லிம் வழக்கங்களின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சிங்கப்பூருக்குத் திரும்பிய முத்துக்குமார், தனது முதல் மனைவியுடன் வசித்து ரகசியமாக சல்மாவை சந்தித்து வந்தார். இந்த சமயத்தில் சல்மா கர்ப்பமானார்.
அவர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். முத்துக்குமாரின் முதல் மனைவி அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இரண்டாவது மனைவி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, மருத்துவமனையின் பிரசவ அறையிலிருந்து முத்துக்குமார் வெளியே வருவதை முதல் மனைவி பார்த்தார்.
இதன் மூலம் இரண்டாவது திருமண விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
வைத்தியலிங்கம் சிங்கப்பூரில் நிரந்தரவாசத் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது தன் முதல் மனைவியை ஆதரவாளராக நியமித்தார். மேலும் அவர் வேறு யாரையும் மணக்கவில்லை என்று பொய்த் தகவலை வழங்கினார்.
முதல் மனைவியைவிட்டுப் பிரிந்து வராததால் சால்மா வைத்தியலிங்கத்துக்கு எதிராக அண்மையில் மனிதவள அமைச்சகத்திடம் புகாரளித்தார். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிட்டுள்ளார்.
- ஆஷிஷ் குப்தாவை ரயில்வே காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.
ரெயிலில் பெண் பயணி ஒருவரிடம் ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி டெல்லி-பிரயாக்ராஜ் ரெயிலில் நடந்தது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சலிட்டுள்ளார். மேலும், கான்ஸ்டபிளை கண்டித்து அவரை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து, கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் கான்ஸ்டபிள் ஆஷிஷ் குப்தாவை ரயில்வே காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.
- மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
- அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
திருச்சி துறையூரில் அம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயலாகும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.
அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.
அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






