என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
- சல்வா ஜூடும் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
அமித் ஷாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி, "அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, என்னால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல. விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும் என 18 முன்னாள் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.
- அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
சென்னை:
நடிகரும், பா.ஜ.க. உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
சினிமா, அரசியல் துறையின் சாதனையாளரும், சினிமாத்துறையில் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அருமை நண்பருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த அற்புதமான நினைவுகளையும், எண்ணற்ற தருணங்களையும் நினைவுகூறுகிறேன்.
அன்றாடம் நீங்காத நினைவுகளில் நிறைந்திருக்கும், அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவர்தம் பிறந்தநாளில் நினைவுகூர்ந்து மகிழ்வோம் என்று கூறியுள்ளார்.
- முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும்
- கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும்
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், இந்த மசோதா குறித்து பேசிய அமித் ஷா, "பதவி பறிப்பு மசோதாவில் பிரதமர் பதவியையும் பிரதமர் மோடி சேர்த்துள்ளார். முன்னதாக, இந்திரா காந்தி 39வது திருத்தத்தை (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகரை இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது) கொண்டு வந்தார்.
பிரதமர் சிறைக்குச் சென்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அரசியலமைப்புத் திருத்தத்தை நரேந்திர மோடி ஜி தனக்கு எதிராகக் கொண்டு வந்துள்ளார்
ஆனால் பிரதமரே சிறை சென்றாலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வகையில், தனக்கு எதிராகவே ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி" என்று தெரிவித்துள்ளார்.
- ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
- வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'.
- ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:-
"என்னுடைய இசையில் முதலில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவானது எதிர் நீச்சல் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் இருந்து சிவகார்த்திகேயனும் எனக்கு இடையேயான நட்பு தொடங்கியது.
நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான், எஸ்.கே என்னுடைய செல்லம். இது நாங்க சேரும் ஒன்பதாவது படம். அவர் மனசு சுத்தமா இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம். 50, 100னு இப்போ 300 கோடி வசூல் அடிச்சுட்டாரு.
'மதராஸி' படத்துல வேற ஒரு எஸ்.கே.வ நீங்க பார்ப்பீங்க. டிரெய்லர்ல 'இது என் ஊருடா, நான் நிப்பேன்'னு சொல்வாரு. அது மாதிரி இது என் எஸ்.கே, நான் வந்து நிப்பேன். நானும் எஸ்.கே.வும் சேர்ந்து ஒரே சமயத்துல கரியரை தொடங்கினதுனால அது எனக்கு பர்சனலான உறவு. என்னைக்கோ ஒரு நாள் நான் Field Out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே.வின் வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன்." என மிகவும் எமோஷனலாக கூறினார்.
- அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
- தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தொடர்புகொள்ள முயன்றபோதும் தன்கருடன் பேச முடியவில்லை
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இத்தனிடையே, முன்னாள் குடியரசு தினை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமித் ஷா, "தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது அரசிலமைப்பின் படி சிறப்பாக பணியாற்றினார். மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். இதில் தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து, ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பது தவறு" என்று தெரிவித்தார்.
- விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழக அரசு பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 24-ந்தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள்:-
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் (Group I, II, IV, காவல்துறை, ஆசிரியர், கிளார்க், முதலியன) மொத்த பணியிடங்களில் 3 சதவீத இடங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசிய / மாநில / பல்கலைக்கழக / பள்ளி மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள் கொண்டவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் போது விளையாட்டு சான்றிதழின் தரம், அளவு, பெற்ற இடம் ஆகியவை மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தேர்வு அறிவிப்பு (Recruitment Notification) வெளியிடும் போது, அதில் "Sports Quota / 3% Reservation for Sports Persons" என்று குறிப்பிடப்படும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் "Sports Quota" என தேர்வு செய்து சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சான்றிதழ்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- 12 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி அடுக்கு நீக்கப்பட்டது.
- இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்
சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளி போனஸ்-ஆக ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் ஜிஎஸ்டி-க்கான மந்திரிகளின் ஜெனரல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய அடுக்கு (Slap) வரியை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வரி வசூல் வசூலிக்கப்படும். இதனால் 90 சதவீதம் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனையடுத்து, 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் மாற்றங்கள் இறுதியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் குறித்த அறிவிப்பு செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னட்டை இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
- போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 3-ந்தேதி காலையில் நடைபெற உள்ளது.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 3-ந் தேதி காலை டெல்லியில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் டில் பகல் 12.30 மணியளவில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கு மதிய உணவிற்கு பின்னர் 2.30 மணி முதல் 3.30 மணி வரையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர் மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் கோல்டுமெடல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வருகிறார். ஸ்ரீரங்கத்தில் பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து காரில் திருச்சி விமான நிலையத்துக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் திருச்சி மற்றும் திருவாரூர் வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- நாக் அஷ்வின் ஆலியா பட்டுக்காக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
- நாக் அஷ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.
கல்கி 2898 AD படத்தை இயக்கிய நாக் அஷ்வின், அதற்கான அடுத்த பாகத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டார். ஆனால், ஹீரோ பிரபாஸ் பல படங்களில் பிஸியாக இருப்பதால், படப்பிடிப்பு பணிகள் தாமதமாகியுள்ளது. இந்த இடைவெளியில், நாக் அஷ்வின் ஆலியா பட்டுக்காக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இதற்கிடையில், வையஜயந்தி மூவிஸ் நிறுவனரான சி. அஷ்வினி தத்தின் ஏற்பாட்டில், நாக் அஷ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.
ரஜினி அந்தக் கதையை ரசித்து, முழு ஸ்கிரிப்டை தயார் செய்து கொண்டு வரும்படி நாக் அஷ்வினிடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால், வையஜயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த பிரமாண்டக் கூட்டணியை உருவாக்க இருக்கிறது.
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரஜினிகாந்த், தெலுங்கு இயக்குநர்களுடன் வேலை செய்ய ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே பிம்பிசாரா இயக்குனர் வாஸிஷ்டா மற்றும் விவேக் அத்ரேயா இருவரும் கதை கூறியிருந்தாலும், அவை நடக்காமல் போனது.
இப்போது நாக் அஷ்வின் ரஜினியை கவர்வாரா? அவரது கதை ஓகே ஆகுமா? என்பதே ரசிகர்களின் கேள்வி.
- மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
- கேப்டன் விஜயகாந்த் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்.
சென்னை:
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்.
தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.
அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும் என்றார்.






