என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.
    • அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று எனக்கும், என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன், லட்சுமணனாக நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறியிருக்கிறது. எனது உணவகம் வளர்ச்சிக்கு சூரி என்று சொல்வார்கள். ஆனால் எனது தம்பிகள், அண்ணன்கள் தான் முழு காரணம், அதுவே எனக்கு பெருமை.

    மாமன் படப்பிடிப்புக்கு பிறகு அடுத்த படம் மண்டாடி படம் பிடிப்பு நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதேபோல் கடலில் போட் ரேசிங் கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.

    திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள். திரையில் காமெடிகள் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க, நல்லா வந்திருக்கேன். அதே போல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்.

    மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர், தமிழக முதலமைச்சர் குறித்த விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் கூற விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும்.

    இன்றைக்கு விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றிருக்கிறார். அடுத்து திரும்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம் என்றார்.

    • கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள் தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து தான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019-ந் தேதி ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

    குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த உச்சநீதி மன்றத்தின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜானிக் சின்னர் (இத்தாலி) ரூ.414 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
    • அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ரூ.396 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்த ஆண்டில் இதுவரை டென்னிஸ் வீரர்களின் வருவாய் விவரம் வெளியாகியுள்ளது.

    இதில் இரண்டாம் நிலை வீரரான அல்காரஸ் ரூ.421 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் டென்னிசுக்கு வெளியே அதாவது விளம்பர ஒப்பந்தம் மூலம் மட்டும் ரூ.306 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜானிக் சின்னர் (இத்தாலி) ரூ.414 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ரூ.396 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார். வீராங்கனை களில் அவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார்.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான ஜோகோவிச் (செர்பியா) ரூ.256 கோடியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    • தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை புறப்பட்டார்.
    • தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டார்.

    இந்நிலையில் வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.

    இந்த பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும்  பங்கேற்றனர்.

    • தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
    • நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா கல்பெலியா (வயது55). இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்த வேலை இல்லாததால் குப்பை பொறுக்கி பிழைப்பை நடத்தி வருகிறார்.

    தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். 5 குழந்தைகள் பிரசவித்த சில நாட்களிலேயே இறந்து போயுள்ளது. மீதி குழந்தைகள் இவர்களுடன் வசதித்து வருகின்றனர். இதில் 5 பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பிணியானார். நேற்று பிரசவ வலியில் துடித்த அவர் ஜாடோல் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 17-வது குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.

    ஆஸ்பத்திரியில் ரேகா கல்பெலியா பிரசவத்திற்கு அனுமதித்த போது இவருக்கு 4-வது பிரசவம் என்று அவர்கள் டாக்டரிடம் கூறியுள்ளனர். ஏற்கனவே வறுமையில் தவிக்கும் காவ்ரா கல்பெலியா தம்பதியினர் 16 குழந்தைகளை வளர்த்தெடுக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.

    குழந்தைகளின் பசியை தீர்க்க காவ்ரா கல்பெலியா 20 சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

    அவரது மகள் ஷிலா கல்பெலியா கூறும் போது, எங்கள் குடும்பம் வாழ்வதற்கு பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் அனைவரும் நிறைய சிரமங்களை எதிர் கொண்டு வருகிறோம். எங்கள் தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் என்றார்.

    குப்பை சேகரிப்பதன் மூலம் உயிர்வாழும் எங்கள் குடும்பத்தினரால் குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியவில்லை. "பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு வீடு எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.

    குழந்தைகளுக்கு பசி தீர்க்க உணவும், கல்வி வழங்கவும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் போதுமான பண வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை சந்தித்து வருவதாக 17 குழந்தைகளின் தந்தை காவ்ரா கல்பெலியா கூறியுள்ளார்.

    • திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.
    • பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக நடிகர் நடிகைகள் பலர் தங்களது வீடுகளில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

    தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரும் விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் பூஜை செய்தனர்.

    பாலிவுட் திரையுலகில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்பு களைகட்ட தொடங்கி விட்டது. நடிகர், நடிகைகள் பலர் பூஜை செய்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கி சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

    நடிகை ஹன்சிகா நேற்று மும்பை வீதிகளில் விநாயகர் சிலையை புதிதாக வாங்கி காரில் எடுத்துச் சென்றார்.

    நடிகை ரகுல் பிரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னாணியுடன் இன்று காலை விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.

    இதுபோன்று ஷ்ரத்தா கபூர், கத்ரீனா கைப் ஆகியோர் விநாயகர் சிலை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

    நடிகை ராதா இன்று காலை அவரது வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது.
    • ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

    சென்னை:

    இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்த்திரன் அஸ்வின். இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார்.

    ஓய்வு குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளைச் சுற்றியுள்ள விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது.

    பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-க்கும் , இதுவரை எனக்குக் ஆதரவு அளித்த அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு முன்னால் உள்ளதை அனுபவித்து, சிறப்பாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    என அவர் கூறினார்.

    பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • 2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.
    • கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    கேரள மாநிலம் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாருக்கு கடந்த 24-ந்தேதி இரவு நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் நள்ளிரவு நேரத்தில் பாரில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றனர். அப்போது நடிகை லட்சுமி மேனன் தரப்பினர், தங்களிடம் தகராறு செய்த எதிர் தரப்பை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆலுவாவை சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவரை தங்களது காரில் கடத்தி தாக்கியதாக தெரிகிறது.

    பின்பு அவரை ஆலுவா-பரவூர் சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து ஐ.டி. ஊழியர் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தன்னை காரில் கடத்தி தாக்கியபோது லட்சுமிமேனன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருந்ததாக அலியார் ஷா சலீம் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஐ.டி. ஊழியர் கடத்தல் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் மிதுன், அனீஷ் ஆகிய 2 பேரை எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    காரில் கடத்திச் சென்று தாக்கியபோது நடிகை லட்சுமிமேனன் இருந்ததாக புகார் கொடுத்திருக்கும் ஐ.டி.ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஐ.டி.ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்டபோது நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கடத்தல் சம்பவம் தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. இதனால் நடிகை லட்சுமி மேனனை எர்ணாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஐ.டி. ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனை போலீசார் தேடி வரும் சம்பவம் தமிழக மற்றும் கேரள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    • இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். நான் மிகவும் அற்புதமான மனிதரான மோடியிடம் பேசினேன்.
    • போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    வாஷிங்டன்:

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்கி அழித்தது. இதை யடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று தெரிவித்தது.

    ஆனால் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறி விட்டார். மேலும் போரில் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்து உள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். நான் மிகவும் அற்புதமான மனிதரான மோடியிடம் பேசினேன். அவரிடம் உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்சனை?' என்று கேட்டேன். தொடர்ந்து பாகிஸ்தானிடம் உங்களுக்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டேன். இரு நாடுகள் இடையே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் பிரச்சனை இருந்து வருகிறது.

    இரு நாடுகளிடமும் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? தொடர்ந்து சண்டையிட்டால், நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய விரும்பவில்லை என்று கூறினேன். அல்லது தலைசுற்றும் அளவுக்கு உங்கள் மீது அதிக வரி விதிக்கப்போகிறோம் என்று கூறினேன். நீங்கள் இருவரும் ஒரு அணு ஆயுதப் போருக்குக் காரணமாக இருக்கப் போகிறீர்கள் என்று கூறி, நாளை என்னை மீண்டும் அழைக்கவும் என்று கூறினேன். ஆனால் அடுத்த 5 மணிநேரத்திலேயே போர் முடிவுக்கு வந்தது.

    ஒருவேளை இரு நாடுகள் இடையே மீண்டும் சண்டை தொடங்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அது நடந்தால் நான் அதையும் நிறுத்துவேன். போர் நடக்க நாம் அனுமதிக்க முடியாது.

    போரில் நிறைய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 150 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களாக இருக்கலாம். ஆனால் உண்மையான எண்ணிக்கையை அவர்கள் வெளியிடவில்லை.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    அதற்கு காரணத்தை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் ஓய்வு அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

    அதன்பிறகு, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் போட்டிகளில் அவரை ஓரங்கட்டினார்கள். 2009-ம் ஆண்டிற்கு பிறகு, முதல் முறையாக 10-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடும் நிலைமை ஏற்பட்டது.

    இதனால், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கு முன், அஸ்வினை சிஎஸ்கே கழற்றிவிடும் எனக் கூறப்பட்டது. அந்த தகவல் வெளியான சில நாட்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டிவோல்ட் பிரேவிஸை வாங்கியதில் முறைக்கேடு இருப்பதாக அஸ்வின் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நான் அப்படி பேசவில்லை எனவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.

    இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 



    • வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.

    சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    ×